Last Updated : 23 Jun, 2020 04:14 PM

 

Published : 23 Jun 2020 04:14 PM
Last Updated : 23 Jun 2020 04:14 PM

பிஹாரில் திட்டமிட்டபடி தேர்தல்: பெருந்தொற்றுக்கு நடுவிலும் பின்வாங்காத தேர்தல் ஆணையம்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் பெரும் சவாலாக இருந்துவரும் நிலையில், பிஹாரில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். அக்டோபர் – நவம்பர் மாதங்களில் தேர்தல் நடக்கும் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. அந்த வகையில், கரோனா பெருந்தொற்றுக்கு நடுவே சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கப்போகும் முதல் மாநிலமாகிறது பிஹார்.

வன்முறைச் சம்பவங்கள் காரணமாகக் காஷ்மீர், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்ட வரலாறு உண்டு. ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் ஒரு பெருந்தொற்றுக்கு நடுவில் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமா என்பது முக்கியமான கேள்வி. எந்த நம்பிக்கையில் தேர்தலை நடத்தத் திட்டமிடப்படுகிறது?

முன்னுதாரணங்கள்

கோவிட்-19’ பெருந்தொற்றுக்கு நடுவே ஈரான், ஸ்லோவாகியா, மாலி, தென் கொரியா, தஜிகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில், நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்கள், கருத்தறியும் வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான நாடுகளில், கரோனா பரவலைத் தடுக்கக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உதாரணமாக, தென் கொரியாவில் தேர்தல் நடத்தப்பட்டபோது, வாக்காளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டது. குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியில் வரிசையில் நிற்கவைக்கப்பட்டனர். அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதுடன், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கையுறைகளும் வழங்கப்பட்டன.

இப்படிப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி தேர்தலை நடத்திய நாடுகளில், வாக்குப் பதிவு காரணமாகக் கரோனா தொற்று பரவியதாகத் தகவல்கள் இல்லை என்று உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்திருக்கிறது. தென் கொரியாவில் தற்போது கரோனா பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டிருந்தாலும், அதற்குத் தேர்தல் ஒரு காரணம் என்று இதுவரை தகவல்கள் இல்லை.

மறுபுறம், கரோனா அச்சுறுத்தல் காரணமாக எத்தியோப்பியா, இலங்கை, சிரியா, செர்பியா, டொமினிக்கன் குடியரசு, இந்தோனேஷியா போன்ற நாடுகள் நாடாளுமன்றத் தேர்தல் முதல் மாகாணத் தேர்தல் வரை பல்வேறு தேர்தல்களைத் தள்ளிவைத்திருக்கின்றன. சிலே, ரஷ்யா போன்ற நாடுகளில் கருத்தறியும் வாக்கெடுப்புகள் தள்ளிவைக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலின் முதன்மைத் தேர்தல்களைப் பல்வேறு மாநிலங்கள் தள்ளிவைத்திருக்கின்றன.

தயாராகும் தேர்தல் ஆணையம்

இந்நிலையில், பிஹாரில் தேர்தலைத் தள்ளிவைக்கும் திட்டம் இல்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். தேர்தலைப் பாதுகாப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துவருகிறது.

60 வயதைக் கடந்த வாக்காளர்கள், தபால் ஓட்டு மூலம் வாக்களிக்கலாம்; பொதுவாக ஒரு வாக்குச் சாவடியில் 1,400 வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் எனும் நிலையில், அந்த எண்ணிக்கை 800 ஆகக் குறைக்கப்படும்; கூடுதலாக சுமார் 30,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, கரோனா தொற்றுக்குள்ளானவர்களும் வாக்களிப்பதற்கு ஏற்ப, அவர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையம் முன்வைத்த யோசனையை சட்டத் துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் மூலம் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால், அரசியல் கட்சிகள் டிஜிட்டல் வடிவில் பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தேர்தல் தேதிக்கு முன்னதாகக் கரோனா பாதிப்பு குறையலாம் என்றும் தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

பிஹார் சமாளிக்குமா?

கரோனா பாதிப்பைப் பொறுத்தவரை, ஒப்பீட்டளவில் பிஹார் குறைவான பாதிப்பையே சந்தித்திருக்கிறது. இன்றைய தேதிக்கு, அம்மாநிலத்தில் 7,893 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதுவரை 52 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எனினும், மாநிலத்தின் எல்லா மாவட்டங்களிலும் கரோனா பரவல் இருக்கிறது. தொற்றுக்குள்ளானோரில் பெரும்பாலானோர் பிற மாநிலங்களிலிருந்து திரும்பிவந்த பிஹார் தொழிலாளர்கள் என்பன போன்ற அம்சங்களும் கவனத்துக்குரியவை.

தவிர சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை பிஹார் மிக மோசமான நிலையில் இருக்கிறது. சுகாதாரத் துறைக் கட்டமைப்பின் தரத்தின் அடிப்படையில், நாட்டின் 21 பெரிய மாநிலங்களில் பிஹார் 20-வது இடத்தில் இருக்கிறது என்று நிதி ஆயோக் தெரிவித்திருக்கிறது. இப்படியான ஒரு சூழலில், தேர்தல் மூலம் தொற்று பரவினால் பிஹாரால் சமாளிக்க முடியுமா என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். பிஹார் சட்டமன்றத்தின் ஆயுட்காலம் நவம்பர் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தவிர்க்க முடியாத சூழலில், ஆறு மாதங்களுக்குக் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாமே என்பது அவர்களின் கருத்து.

அரசியல் கணக்குகள்

இன்றைய சூழலில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பலத்துடன்தான் இருக்கிறது. மறுபுறம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா போன்ற கட்சிகள் அடங்கிய மகாகட்பந்தன் கூட்டணிக்குள் குழப்பம் நிலவுகிறது. தான் எதிர்பார்த்த விஷயங்கள் கிடைக்காவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறிவிடுவதாக இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி எச்சரித்திருக்கிறார். லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சி முகாமில் கவர்ச்சிகரமான தலைவர்களும் இல்லை.

இத்தனை சாதமான அம்சங்கள் இருந்தாலும், திட்டமிட்ட காலத்திலேயே தேர்தல் நடத்தப்படுவது தங்களின் வெற்றியை மேலும் உறுதிசெய்யும் என்று ஐக்கிய ஜனதா கட்சி – பாஜக தரப்பு கருதுகிறது. பிஹாரின் மூலை முடுக்குகளில் எல்.ஈ.டி தொலைக்காட்சிகளை நிறுவி, அதன் மூலம் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டது பாஜக. கடந்த சில காலமாக அதிகம் தலைகாட்டாத உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் பிரச்சாரப் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார். டெல்லியிலிருந்தே மெய்நிகர்ப் பிரச்சாரங்களையும் ஆலோசனைக் கூட்டங்களையும் அவர் மேற்கொண்டுள்ளார். பாஜக, ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் அருமை பெருமைகளை உள்ளூர் செய்தித் தொலைக்காட்சிகள் பரப்பி வருகின்றன.

கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்ட இந்திய வீரர்களில் பிஹாரைச் சேர்ந்தவர்களும் உண்டு எனும் விஷயத்தையும் பாஜக ஒரு தேர்தல் அஸ்திரமாகப் பயன்படுத்துகிறது. “பிஹார் ரெஜிமென்டைச் சேர்ந்தவர்களின் வீரம், ஒவ்வொரு பிஹாரிக்கும் பெருமை சேர்க்கக்கூடியது. நாட்டுக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த தீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

விமர்சனத்துக்குப் பதில் - வெற்றி

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தன் மீதான விமர்சனங்களை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று கருதுகிறது பாஜக. குறிப்பாக, கரோனா பரவல் அதிகரிப்பு, பொதுமுடக்கத்தின் காரணமாகப் புலம்பெயர்த் தொழிலாளர்கள் எதிர்கொண்ட துயரங்கள், பொருளாதாரச் சரிவு போன்றவற்றின் அடிப்படையில் எழுந்திருக்கும் விமர்சனங்கள் தேர்தல் வெற்றி மூலம் துடைத்தகற்றப்படும் என்பது பாஜகவின் நம்பிக்கை.

இதற்கிடையில், சமீபத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களித்த மத்திய பிரதேச பாஜக எம்எல்ஏ ஓம்பிரகாஷ் சக்லேச்சாவுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை மனதில் கொண்டு பிஹார் தேர்தலை இன்னும் பாதுகாப்பாக நடத்த தேர்தல் விரிவான ஏற்பாடுகளைச் செய்யும் என்று நம்பலாம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x