Published : 23 Jun 2020 07:34 AM
Last Updated : 23 Jun 2020 07:34 AM

தமிழ்நாட்டின் மீட்சிக்கு எம்ஐடிஎஸ் காட்டும் வழி

கரோனா தொற்று ஒருபுறம் தமிழ்நாட்டை வேட்டையாடிக்கொண்டிருக்கிறது என்றால், மறுபுறம் ஊரடங்குக் கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் சூறையாடலுக்கு உள்ளாகியிருக்கிறது. கடவுளை நோக்கிக் கை காட்டுவதைவிடவும் வெவ்வேறு தரப்புகளைக் கலந்தாலோசிப்பதும், விமர்சனங்கள் ஆலோசனை களுக்குக் காதுகொடுப்பதும் ஆட்சியாளர்களுக்குப் பலன் தரும். இந்தச் சுகாதார நெருக்கடியின் ஊடாகப் பொருளாதாரமும் நெருக்கடிக்குள்ளாகிவிடாமல் தடுப்பது அவசியமான நடவடிக்கை ஆகும்.

இது தொடர்பில் விலாவாரியான ஆய்வுகளைச் செய்திருக்கின்றனர், தேசிய அளவில் பெயர் பெற்ற முன்னணி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன (எம்ஐடிஎஸ்) ஆய்வறிஞர்கள். கரோனா காலகட்டத்தில் உடனடி கவனம்கொள்ள வேண்டிய பிரச்சினைகளைப் பற்றிய தொடர் கட்டுரைகள் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் (https://www.mids.ac.in) பதிவேற்றப்பட்டுவருகின்றன. தமிழ்நாடு அரசு இதைக் கவனிப்பது முக்கியம்.

சுகாதாரத்துக்கு அதிக நிதி

சேஷாத்ரி பானர்ஜி எழுதியுள்ள கட்டுரை, இந்திய அளவில் கரோனாவுக்கு முன்னும் பின்னுமான பேரியல் பொருளியல் சூழலை விவரிக்கிறது. கடந்த நிதியாண்டில் தனிநபர் நுகர்வு, அரசு நுகர்வு, தனியார் முதலீடு, ஏற்றுமதி-இறக்குமதி, மொத்த உள்நாட்டு உற்பத்தி என அனைத்து அளவீடுகளிலும் தேக்கத்தைச் சந்தித்த நிலையில்தான், இப்போது கரோனாவையும் நாடு எதிர்கொண்டிருக்கிறது. எனவே, பொருளாதார நிலை மோசமானதற்கு கரோனா மட்டுமே காரணமில்லை. ஏற்கெனவே, மோசமான நிலையில் இருந்த பொருளாதாரத்தை நோய்த்தொற்று இன்னும் மோசமான நிலைக்கு இட்டுச்சென்றிருக்கிறது என்கிறார் சேஷாத்ரி பானர்ஜி. 2019-20 நிதியாண்டில் தமிழ்நாடு பொது சுகாதாரச் செலவுகளுக்காக 4.5% மட்டுமே நிதி ஒதுக்கியிருந்தது.

நடப்பாண்டில் பொது சுகாதாரச் செலவுகளுக்காகக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், அதற்காக மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறைக்கான உச்ச வரம்புகளை ஒன்றிய அரசு தளர்த்த வேண்டும். இனிவரும் நாட்களில், மாநிலங்கள் தங்களது வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கான வழிவாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவையையும் இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

நேரடிக் கொள்முதல்

கரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் வேளாண்மைத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களைப் பற்றி எல்.வெங்கடாசலத்தின் கட்டுரை விவரிக்கிறது. ஊரடங்கால் மக்களின் வாங்கும் திறன் குறைந்து, வேளாண் பொருட்கள் விலை இழந்துகொண்டிருப்பதைத் தவிர்க்க அரசே நேரடிக் கொள்முதல் நடவடிக்கையில் இறங்க வேண்டியது அவசியம் என்கிறார் வெங்கடாசலம். தேவைகளின் அடிப்படையிலான வேளாண்மை, சூழலியல் அமைவைப் பாதுகாக்கும் வேளாண் முறைகளுக்கான நிதியுதவிகள், வேளாண் விளைபொருட்களுக்கு மதிப்புக் கூட்டுதல், கள் இறக்குவதற்கான அனுமதி, மூலிகைச் சாகுபடி ஆகியவற்றை ஐந்தாண்டுகள் வரையிலான நீண்ட கால நடவடிக்கைகளாகப் பரிந்துரைக்கிறார்.

புதிய வேலைவாய்ப்புகள்

நிலையான தொழிற்பிராந்தியங்களை உருவாக்குவதன் மூலமாக வேலைவாய்ப்பை உருவாக்கும் வழிமுறைகளை விவரிக்கிறது எம்.விஜயபாஸ்கரின் கட்டுரை. திருப்பூரை முன்னுதாரணமாகக் கொண்டு, அதிக வேலைவாய்ப்பை உருவாக்க வாய்ப்புள்ள ஜவுளித் துறைக்கு முக்கியக் கவனம் கொடுக்கச் சொல்கிறது இந்தக் கட்டுரை. ஜவுளித் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அரசு அக்கறை காட்டாததையும் தொழில்திறன் வாய்க்கப்பெற்ற தொழிலாளர்களை வளர்த்தெடுக்காததையும் கவனப்படுத்துகிறது. பின்னலாடைகளுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் இந்த முயற்சியில், மாநில அரசின் முன்னெடுப்புகளுக்கு மத்திய அரசும் ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

பதிப்புலகத்துக்கு ஆதரவு

ஏற்கெனவே நலிந்த நிலையில் இருக்கும் தமிழ்ப் பதிப்புலகம் கொள்ளைநோய்க் காலத்தில் மேலும் நலிவுற்றதைச் சொல்கிறது வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் குறிப்பு. குடும்பத்தவர்களையே ஊழியர்களாகக் கொண்டு, வட்டிக்குக் கடன் வாங்கி, காகிதத்துக்குக் கடன் சொல்லி பதிப்பாளர்கள் அனுபவிக்கும் துயரங்களை விவரிக்கிறது. பிழைதிருத்துநர்கள், புத்தக வடிவமைப்பாளர்கள், கட்டுநர்கள், காகித விற்பனையாளர்கள் என்று பதிப்புத் துறையுடன் நேரடித் தொடர்புகொண்டவர்கள் கடந்த சில மாதங்களாக வேலை இழந்திருக்கிறார்கள். புத்தகக் கடைகள் மூடப்பட்டதாலும் தனியார் அஞ்சல் சேவைகளின் இயக்கம் குறைந்ததாலும் புத்தக விற்பனைகள் நடக்கவில்லை. குறைந்தது ஓராண்டுக்கேனும் பதிப்பகங்கள் காகிதம் வாங்குவதற்கு மானியங்கள் வழங்குமாறும் மூன்றாண்டுகளுக்கு வட்டியில்லாத கடன்கள் வழங்குமாறும் சொல்கிறார் சலபதி. பொது நூலகத் துறை நிலுவை வைத்திருக்கும் தொகைகளையும் விரைந்து பதிப்பாளர்களுக்கு அளிக்கச் சொல்கிறார் அவர்.

பாசன மேம்பாடு

தமிழகத்தில் விவசாயம் மீண்டுவர இன்னும் ஐந்தாண்டுகளேனும் தேவைப்படும். கைவிடப்பட்ட நீர்நிலைகளை மேம்படுத்துவதும் அவற்றை இணைப்பதும் விவசாயத்துக்கு உதவுவதோடு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்கிறது கே.சிவசுப்ரமணியத்தின் கட்டுரை. தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மைச் சட்டம், 2000-ன் கீழ் விவசாயிகளையே நீர்நிலைகளின் உரிமையாளர்களாக்க வேண்டும் என்கிறார் அவர். ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கப்படுவதோடு கிராமப் பணிகள் குழுவும் திட்டக் குழுவும் செயல்பட வேண்டும் என்கிறார்.

குறைந்த விலையில் வீடுகள்

கரன் கொய்லோ, ஏ.ஸ்ரீவத்ஸன் இணைந்தெழுதிய கட்டுரை, சென்னைப் பெருநகரப் பகுதியில் குறைந்த விலையிலான வீடுகளின் தேவை பற்றி பேசுகிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு குறைந்த விலையிலான வீடுகளுக்குப் பெரும் சந்தை உண்டானது. ஆனால், வீட்டுக்கடன் வாங்கியவர்கள் இப்போது வேலையிழப்பு காரணமாக மாதாந்திரத் தவணைகளைச் செலுத்த முடியாமல் தவித்துநிற்கிறார்கள். அடுத்த ஓராண்டுகள் வரையில் வீட்டுச் சந்தை கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்நிலையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதைச் சுட்டுகிறது இக்கட்டுரை.

வீட்டுப் பணியாளர்கள் பாதுகாப்பு

கரோனா காலகட்டத்தில் சென்னையில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களில் வீட்டுப் பணியாளர்களும் அடங்குவர். தமிழ்நாடு முழுவதும் ஏறக்குறைய 18 லட்சம் பணிப்பெண்கள் இருக்கிறார்கள். எந்தவொரு சட்டப் பாதுகாப்பும் இல்லாதவர்கள் இவர்கள். சென்னை பணிப்பெண்களில் பெரும்பாலானவர்களுக்குக் கடந்த இரண்டு மாதங்களாக வேலையில்லை. திரும்பவும் வேலைக்கு அழைப்பார்களா என்பதும் உறுதியில்லை. இந்நிலையில், அவர்களின் சமூக மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தைப் பேசுகிறது எஸ்.ஆனந்தியும் இ.தீபாவும் இணைந்தெழுதிய கட்டுரை. இந்தக் காலகட்டத்தில் வீட்டுப் பணியாளர்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் கொடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியம் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்தக் கட்டுரை.

ஏன் பேசக் கூடாது?

ஆலோசனைகளைச் சொல்வதோடு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளையும்கூட இந்தக் கட்டுரைகள் சொல்கின்றன. இவற்றை நடைமுறைப்படுத்தாதபட்சத்தில் ஏற்படும் பாதகங்களையும் சொல்லி எச்சரிக்கின்றன. ஆய்வாளர்களின் ஆலோசனைகளை அரசு கருத்தில்கொள்ளும்போதுதான் இந்தக் கட்டுரைகளின் நோக்கம் நிறைவுபெறும். அரசு ஏன் இவர்களோடு ஓர் அமர்வு கலந்து பேசக் கூடாது?

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x