Published : 22 Jun 2020 07:43 am

Updated : 22 Jun 2020 07:43 am

 

Published : 22 Jun 2020 07:43 AM
Last Updated : 22 Jun 2020 07:43 AM

“ஏற்கெனவே ஊரடங்கித்தான்யா இருக்கு… முழுக்க மூடிராதீங்க!”- உணவகர்களின் அபயக் குரல்

full-lockdown

கரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ‘ஊரடங்கு’க்கான அதிகார மட்டத்திலிருந்து குரல்கள் முளைக்கத் தொடங்கிவிடுகின்றன. வசதியுள்ளோரும் இதை ஆதரிக்கின்றனர். ஏனென்றால், வீட்டிலேயே இருப்பதற்கான சூழல் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால், கீழே உள்ளோரின் நிலைமை என்ன? நாம் ஏழை - எளியோரிடம் பேசவில்லை. வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களிடம்தான் இந்த வாரம் முழுக்கப் பேசவிருக்கிறோம். மனிதர்கள் தள்ளிப்போட முடியாத தேவை உணவு. உணவகங்களின் நிலையைப் பேசுகிறார்கள் உணவகர்கள்.

கெபின், விஸ்வா தங்கும் விடுதியுடன் கூடிய உணவகம், குமரி.


அம்பது வருஷம் தாண்டினது எங்க விடுதி. அட, எங்க விடுதியை விடுங்க; கன்னியாகுமரியே வருமானம் இல்லாத கோடையை இப்போதான் முதல் முறையாப் பார்க்குது. நித்தம் திருவிழாக் கூட்டம் உள்ள ஊர், இப்போ வெறிச்சோடிக் கிடக்குது. பலர் உணவகங்கள், விடுதிகளைத் திறக்கலை. ஆனா, பூட்டியே கிடந்தாலும் விடுதி உணவகம் இரண்டையும் பராமரிக்க எங்களுக்குக் குறைச்சலா மாசம் முப்பதாயிரம் வேணும். அப்புறம், எங்ககிட்ட வேலை பார்த்த வடக்கத்தி ஆட்கள் எல்லாம் ஊர் போய்ட்டாங்க. மிச்சம் இருக்குற நம்மூர் ஆளுங்களுக்காவது பொழைப்பு வேணும்ல? அதனால விடுதியைத் திறந்து வெச்சிருக்கோம். ஒண்ணும் வருமானம் இல்லை. எல்லோருக்கும் மூணு மாச சம்பளப் பாக்கி. இப்போதைக்குத் தங்க இடம் கொடுத்து, மூணு வேளை சாப்பாடும், அன்றாடம் நூறு ரூபாய் பேட்டாவும் கொடுக்குறேன். அதுவும் நஷ்டக்கணக்குதான்!

தாவுத் மியான், தள்ளுவண்டி பிரியாணி கடைக்காரர், மதுரை.

நம்ம வியாபாரமே மூணு மணி நேரக் கணக்குதான். பகல் 12 மணிலேர்ந்து 3 மணி வரைக்கும். இங்கே சகலமும் நான்தான். வீட்லயே பிரியாணி ஆக்கிக் கொண்டாந்திடுவேன். கரோனாவைக் காரணம் காட்டி சிக்கன், அரிசி எல்லா விலையும் கூடிருச்சின்னாலும், அதே விலைக்குத்தான் நான் கொடுக்குறேன். பிரியாணியை இங்கேயே சாப்பிட்டா 80 ரூவா, பார்சல்னா 100 ரூவா. இவ்ளோ மலிவா கொடுக்குற பிரியாணியையும் திங்க ஆள் இல்லைன்னா, ஒரே காரணம்தான் ஜனத்துகிட்ட காசு இல்லை. வாரத்துக்கு நாலு நாள் வர்ற ஆளு இப்பம் ரெண்டு வாரத்துக்கு ஒரு நாள் வருது. இதுலேயும் போலீஸ் கெடுபிடி வேற! போன வாரம் நாற்காலி எல்லாத்தையும் அள்ளி எறிஞ்சிட்டுப் போய்ட்டாங்க. பல நாள் மிச்சப்படுறதை ஏழைபாழைங்களுக்குச் சும்மா அள்ளிக்குடுத்திட்டு வீட்டுக்குப் போறேன். இதே நிலைமைதான் பக்கத்துல இளநீ, கரும்புச்சாறு, டீ விக்குறவங்களுக்கும். ஆனாலும், இடத்தையும் தொழிலையும் இழந்துடக் கூடாதுன்னு வீம்புக்கு யாவாரம் பண்றோம்.

பாலச்சந்தர், ஹரிபவன் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ், கோவை.

ஒன்றரை மாசத்துக்குப் பிறகு, மே மாசம் பார்சல் சப்ளையைத் தொடங்கினோம். இப்போ ஜூன்லேர்ந்து ஹோட்டல் சப்ளையும் நடக்குது. வாடிக்கையாளர்களை அவங்களோட உடல் வெப்பநிலையைப் பரிசோதிச்சு உள்ளே அனுமதிக்கிறது, பாதி இடங்கள்ல மட்டும் உட்கார அனுமதிக்கிறது, வாசப்படியிலேர்ந்து, மேஜை - நாற்காலிகள் உள்ளிட்டு, சமையலறை வரைக்கும் சானிடைஸ் பண்ணிக்கிட்டே இருக்குறதுன்னு இதெல்லாமே தனி வேலையும் பெரும் செலவும் ஆகிருச்சு. ஆனாலும், கூட்டம் இல்லை. பார்சல் கொடுத்தப்போ என்ன வியாபாரமோ, அதுல பத்து சதவீதம்தான் ஹோட்டல் சப்ளையிலேயும் ஆகுது. ஒரு கடையில எழுபதாயிரம் வரவு வருதுன்னா, செலவு அதைவிட பத்தாயிரம் கூடுதலா ஆகுது. இவ்வளவு ரிஸ்க் எடுத்தும் நஷ்டம்தான்னா எவ்ளோ நாள் இதைத் தாங்க முடியும்? தெரியலை. கடை ஊழியர்களை நெனைக்கும்போது இன்னும் கஷ்டம் அதிகமாயிடுது. கரோனாவைக் காட்டிலும் பயம் நம்மளை நெறைய வதைக்குது.

ரவி, கருணாநிதி உணவகம், சுந்தரக்கோட்டை.

இது கிராமத்துக் கடை. வியாபாரிங்க, வழிப்போக்கருங்க இந்தச் சாலை வழி போறவங்க சாப்பிட்டுப்போற இடம். டீ, பக்கோடா பொட்டலம்; காலை நேரத்துல இட்லி வியாபாரம் இதுதான் நம்மகிட்ட. இருபது ரூபாய்க்கு அஞ்சு இட்லி கொடுக்குறோம், ரெண்டு சட்னி, பொடியோட. தம்பியும் நானும்தான்; அதனால கட்டுப்படியாகும். முன்ன கூட்டம் இல்லன்னாலும், வியாபாரிங்க காலைச் சாப்பாட்டுக்கு நம்பி வர்ற இடம்கிறதால, ஓரளவுக்கு வியாபாரம் போகுது. ஆனா, வர்றவங்ககிட்ட காசு இல்ல, அவங்களுக்கு வியாபாரம் இல்லைங்கிறது நல்லாவே தெரியுது. இட்லி சாப்பிட்டுட்டு ஒரு டீ குடிக்கிறதுக்குக்கூட யோசிக்கிறாங்க. ஆனா, இன்னொரு ஊரடங்கு எல்லாம் போட்டா பெரும் பாதிப்பாகிடும். ஜாக்கிரதையா மக்களை நடந்துக்க அனுமதிக்கிறதுதான் நல்ல வழிமுறை.

வே.செல்வகுமார், ஜோதி பவன், சீர்காழி.

கரோனா அச்சத்தால மக்கள் நடமாட்டமே குறைச்சலாத்தாண்ணே இருக்கு. அதுலேயும் வெளியில சாப்புடுறது ரொம்பக் குறைஞ்சுடுச்சு. முன்னாடி நூறு பேர் வந்த இடத்தில் இப்போது முப்பது பேர் வந்தாலே பெரிய விஷயமா இருக்குது. கடையை சேனிடைஸ் பண்றது, வாடிக்கையாளர்களுக்கு ஹேண்ட்வாஷ் வைக்கிறதுன்னு எவ்வளவோ பாதுகாப்பான விஷயங்களைப் பார்த்துப் பார்த்து செய்றோம். எல்லா செலவும் கூடிருச்சு. ஆனா, வியாபாரம் குறைவு. தினம் சில ஆயிரம் நஷ்டத்தோடதான் ஹோட்டலைத் திறக்கிறேன். ஏன்னா, ரெண்டு காரணங்கள். ஒண்ணு, நம்ம கடையை நம்பி இருக்க வாடிக்கையாளர்களை காசுக்காக விட்டுற முடியாது. இன்னொண்ணு, கடையில வேலைக்கு இருக்குற தொழிலாளர்களைத் தக்க வைக்கணும். அப்படியும் பத்துப் பேர் வேலை பார்த்த இடத்துல அஞ்சு பேருக்குத்தான் வேலை கொடுக்க முடியுது. அவங்களுக்கும் முழுச் சம்பளம் கொடுக்க முடியல.

தொகுப்பு: கா.சு.வேலாயுதன், கரு.முத்து, கே.கே.மகேஷ், என்.சுவாமிநாதன்


Full lockdownகரோனா பரவல் எண்ணிக்கைRestaurantsFood shopsஹோட்டல்கள்உணவுக் கடைகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x