Published : 20 Jun 2020 05:08 PM
Last Updated : 20 Jun 2020 05:08 PM

நவீன வடிவமெடுக்கும் கரோனா வெறுப்புணர்வு: தவிக்கும் அரசு மருந்து நிறுவன மேலாளர்

கரோனா வைரஸ் தொற்றில் தேசிய அளவில் தமிழகம் உள்ள நிலை நமக்கெல்லாம் நன்கு தெரியும். அதிலும் சென்னை, 3 அண்டை மாவட்டங்கள் உள்ள சிக்கலான நிலையும் தெரிந்ததுதான். தமிழகத்தில் உள்ள 7இல் ஒருவர் இந்த மாவட்டங்களில்தான் வசிக்கிறார். அந்த அளவுக்கு நெருக்கமான மக்கள்தொகை நிறைந்துள்ள நிலையில், சென்னையில் கரோனா பரவிவரும் வேகத்தைப் பார்த்துப் பலரும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப நினைக்கிறார்கள். இ-பாஸ் பெற்று ஊருக்குச் செல்கிறார்கள்.

இ-பாஸ் கிடைக்காவர்கள் காவல்துறையிடம் சிக்காமல் உள்சாலைகள் வழியாகவும், சுங்கச் சாவடிகளில் அதிகாரிகள் காலில் விழுந்தும் எப்படியாவது ஊருக்குச் செல்ல முயல்கிறார்கள். இப்படியெல்லாம் சொந்த ஊருக்குச் சென்று சேர்ந்தால், அவர்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது என்பதுதான், இப்போது மிகப் பெரிய கேள்வி.

இடைவிடாத மருந்துத் தயாரிப்பு

தமிழக அரசு சார்பில் சித்த மருந்துகளைத் தயாரிக்கும் முதன்மை நிறுவனம் 'டாம்ப்கால்'. இந்த நிறுவனத்தின் தயாரிப்புப் பிரிவு மேலாளர் டாக்டர் ஆறுமுகம். கரோனா தொற்று தீவிரமடையத் தொடங்கிய ஒரு மாதத்தில், கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகள் மூலம் கரோனா தொற்று வராமல் தற்காத்துக்கொள்ளலாம், அப்படியே வந்தாலும் சிகிச்சையில் தேறி வரலாம் என்று தமிழக அரசே அரசாணை வெளியிட்டிருந்தது. அப்போது அரசு நிறுவனம் தயாரிக்கும் சித்த மருந்துகளைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டது. அந்த வகையில் டாம்ப்கால் நிறுவனத்தின் தயாரிப்புப் பிரிவு மேலாளர் பொறுப்பில் இருந்த டாக்டர் ஆறுமுகம், கடந்த இரண்டு மாதங்களாக தனக்குக் கீழ் இருந்தவர்களையெல்லாம் முடுக்கிவிட்டுப் பணிகளை விரைவுபடுத்தினார். தமிழகமெங்கும் சித்த மருத்துவக் குடிநீர் பொடிகள், மருந்துகள் விநியோகிக்கப்பட்டன. அவற்றை அரசு நிறுவனங்கள் மூலமாகவும் மக்கள் தாமாகவும் வாங்கி அருந்தி நலம் பெற்றுவரும் செய்திகள் பரவலாக வெளிவந்துகொண்டுள்ளன.

இப்படி நெருக்கடியான சூழலில் சித்த மருந்துத் தயாரிப்பு நிறுவனத்துக்குப் பொறுப்பாக இருந்த அவருக்கு நீரிழிவு நோய் உண்டு, பைபாஸ் அறுவைசிகிச்சையும் செய்துகொண்டவர். தன்னுடைய உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் மக்களைக் காக்கும் பணியில் தன்னை மனப்பூர்வமாக ஈடுபடுத்திக்கொண்டார். இரண்டு மாதத்துக்கும் மேல் தொடர் பணியில் ஈடுபட்டிருந்த அவர், இந்த வாரத்தில் அலுவலகத்தில் விடுப்பு பெற்று நெய்வேலிக்கு அருகில் இருக்கும் தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். அவருடைய குடும்பத்தினர் அங்கேதான் வசித்துவந்தார்கள். இவ்வளவு காலம் சென்னையில் தனித்தும் அலுவலகப் பணிகளிலும் மூழ்கியிருந்த அவர், சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம் என நினைத்து ஊருக்குச் சென்றிருக்கிறார்.

காரணமற்ற எதிர்ப்பு

இரவு நேரத்தில் ஊருக்குச் சென்றிருந்த நிலையிலும் அவர் வரும் செய்தி அவர் வீடு இருந்த தெரு, பக்கத்துத் தெருக்காரர்களுக்குத் தெரிந்துவிட்டது.அவர் சென்னையிலிருந்து வருகிறார் என்ற தகவல் தெரிந்தவுடன், ஏதோ வேற்றுகிரகவாசிபோல் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். டாக்டர் ஆறுமுகம் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரும் அக்கம்பக்கத்தினரை சமாதானப்படுத்தவில்லை. இல்லை, இங்கே நீங்கள் தங்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

ஒரு அரசு மருந்து நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர், தமிழக மக்களின் உயிரைக் காக்கும் மருந்துகளைத் தயாரித்து வழங்கும் பணியை இத்தனை காலம் ஒருங்கிணைத்துச் சிறப்பாகச் செய்தவர்- இனிமேலும் செய்ய இருப்பவர், தற்போது சொந்த ஊருக்குத் திரும்பலாம் என நினைக்கும்போது அவருக்குக் கிடைத்த வரவேற்பு இதுதான். அவர் வீடு இருந்த பகுதியைச் சுற்றி வாழ்ந்த யாரும், எதைப் பற்றியும் அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ளவில்லை. சென்னையிலிருந்து வருபவர்கள் யாராக இருந்தாலும், கொள்ளைநோயின் தூதுவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, சாதாரண மனிதர்கள் விரட்டி அடிக்கப்படுவதன் தொடர்ச்சியையே இதில் பார்க்க முடிகிறது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை பிளேக் நோயைப் பரப்புவதற்குக் காரணமாக இருந்த எலிகள், துரத்தித் துரத்தி அழிக்கப்பட்டன. எலிகளைக் கண்டாலே எமனைக் கண்டதுபோல் மக்கள் அஞ்சி நடுங்கிய காலம் இருந்தது.

15, 20 ஆண்டுகளுக்கு முன்புவரை 'எய்ட்ஸ்' என்ற சொல்லை யார் உச்சரித்தாலும், ஒருவித அசூயை உணர்வுடனே அவர்களைப் பார்த்த காலம் இருந்தது. இன்றைக்குச் சென்னையிலிருந்து திரும்பும் சாதாரண மனிதர்கள், பயங்கரமானவர்களாகக் கருதப்பட்டு, மனதில் வெறுப்பு பொங்கத் துரத்தப்படுகிறார்கள். இத்தனைக்கும் அரசு நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டே, வீடுகளுக்குச் செல்ல அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

எது மோசமான நோய்?

கரோனா நோய்த்தொற்று எளிதில் தொற்றக்கூடியது. அதேநேரம் அது எல்லோரையும் கொல்லக்கூடிய ஒன்றல்ல. அது உலகளாவிய தொற்றுநோய் (Pandemic), கொள்ளைநோயல்ல (Epidemic). கோவிட்-19 நோயுள்ள ஒருவராகவே இருந்தாலும்கூட, அவருடைய சளித்துளிகள், எச்சில்துளிகள் மூலமாக மட்டுமே இந்த நோய் பரவும். இதெல்லாம் அடிப்படை அறிவியல் உண்மைகள். ஆனால், கரோனாவைக் கட்டுப்படுத்த வழி கண்டறியாமல், ரொம்பவே சாவகாசமாகவே நம்மில் பலரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், சென்னையிலிருந்து ஒருவர் வந்துவிட்டால், ஏதோ அண்டை நாட்டுக்காரன் எல்லை தாண்டி வந்துவிட்டதுபோல் விரட்டியடிக்கிறோம். இது முற்றிலும் பாரபட்சமான, நியாயமற்ற அணுகுமுறை.

அந்தப் பகுதியில் இருக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதன் காரணமாக, டாக்டர் ஆறுமுகம் தன்னுடைய நெருங்கிய உறவினர் வீட்டுக்குக் குடும்பத்துடன் தற்போது சென்றுள்ளார். சொந்த வீட்டிலேயே அவர் இருந்திருந்தாலும்கூட, அந்த வீட்டில் வசிக்க அப்பகுதி மக்கள் விட்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான். முன்பு சம்பாதிப்பதற்காக பட்டணத்துக்குப் போ என்று அனுப்பிய சமூகம், இன்றைக்கு அதே பட்டணத்திலிருந்து ஊர் திரும்புபவர்களை விரட்டியடிக்கிறது.

இந்த மனோபாவம் கரோனா தொற்று ஏற்படுத்தும் தாக்கங்களைவிட, மிக மோசமான, ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. சாதி, மத, நிற பேத நடைமுறைகளுக்குச் சற்றும் குறைவில்லாதது. கரோனா வைரஸ் தொற்று பேதம் பார்ப்பதில்லை. அதேநேரம் ஒரு சமூகமாக சக மனிதர்கள் மூலமாகப் பெறும் அனைத்து வசதிகளையும் அனுபவித்துக்கொண்டே, அனைத்து பேதங்களையும் நாம் நடைமுறைப்படுத்துகிறோம். கரோனாவுக்கு நேரடி மருந்து இல்லை என்பதைவிட, எந்த அடிப்படையும் அற்ற இந்த வெறுப்புணர்வே தீராத நோய்க்கூறு.

தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x