Last Updated : 16 Jun, 2020 07:08 PM

 

Published : 16 Jun 2020 07:08 PM
Last Updated : 16 Jun 2020 07:08 PM

உண்மையிலேயே கரோனாவிலிருந்து மீள்கிறதா ரஷ்யா?- தவறான தரவுகளைச் சொல்வதாகச் சர்ச்சை

''சீராகச் செயலாற்றுவதன் மூலம், கரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் சூழலிலிருந்து, குறைந்த இழப்புகளுடன் உறுதியுடன் வெளிவந்துகொண்டிருக்கிறோம்'' என்று பெருமிதத்துடன் சொல்லியிருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். அதுமட்டுமல்ல, “அமெரிக்காவில் இப்படி நடக்கவில்லை. அந்நாட்டின் அரசு அமைப்பே சிதைந்து விட்டதுதான் இதற்குக் காரணம்” என்று தனது வாதத்துக்கு ஒரு பிற்சேர்க்கையையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்.

கரோனா காலத்தில் ட்ரம்ப் அரசின் பொறுப்பற்ற செயல்பாடுகள், அமெரிக்கர்களின் வாழ்க்கையையே குலைத்துப் போட்டிருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், ரஷ்யா மீண்டு வருவதாகப் புதின் சொல்வதிலும் அத்தனை உண்மை இல்லை என்பதே அந்நாட்டின் கள நிலவரங்கள் சொல்லும் செய்தி!

தவறான தரவுகள்

இன்றைய நிலவரப்படி ரஷ்யாவில் புதிதாக 8,248 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப் பட்டிருக்கிறது. இதையடுத்து, அந்நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5,45,458 ஆகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 193 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 7,284 ஆகியிருக்கிறது. இந்தக் கணக்கின்படி இறப்பு விகிதம் மிகக் குறைவுதான். இதன் எதிரொலியாக, தலைநகர் மாஸ்கோவில் பொதுமுடக்கம் பெருமளவில் தளர்த்தப்பட்டிருக்கிறது. பிற நகரங்களும் பொதுமுடக்கத்தைத் தளர்த்திக்கொண்டிருக்கின்றன.

ஆனால், கரோனா பாதிப்பு குறித்து ரஷ்ய அரசு வெளியிட்டிருக்கும் தரவுகளே தவறானவை என்பதால், பொதுமுடக்கத் தளர்வு என்பதெல்லாம் அர்த்தமற்ற செயல் என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள். குறிப்பாக, மரணங்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கரோனா தொற்று எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருக்கும் ரஷ்யா, மரணங்களின் எண்ணிக்கையைக் குறைவாகக் காட்டுவது பொருத்தமாக இல்லை என்பது அவர்களது வாதம். கரோனா பாதிப்பு தொடர்பாகத் தவறான தகவல்களைத் தருவதாக சீனா, ரஷ்யா ஆகிய இரு நாடுகள் மீதும் ஐரோப்பிய ஒன்றியமும் குற்றம் சாட்டியிருக்கிறது.

மறைக்கப்பட்ட மரணங்கள்

மருத்துவமனைகளில் பலர் உயிரிழந்துகொண்டிருக்க, பெரும்பாலானோரின் இறப்புக்கான காரணமாகக் கரோனா பாதிப்பைக் காட்டாமல் வேறு பாதிப்புகளைச் சொன்னது ரஷ்ய அரசு. ஆயிரக்கணக்கானோர் நிமோனியா பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாகவும் தெரிவித்தது. ஆனால், அவர்களது மரணத்துக்குக் கரோனா பாதிப்புதான் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இப்படி கரோனா மரணங்கள் மறைக்கப்பட்டதன் விளைவாக, இறந்தவர்களின் உறவினர்கள் மத்தியில் கரோனா பரவல் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது.

பொதுமக்களின் மரணங்கள் மட்டுமல்ல, மருத்துவப் பணியாளர்களின் மரணங்களும் மறைக்கப்படுகின்றன என்பது இன்னொரு அதிர்ச்சி. பல மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்குக் கரோனா பரிசோதனையே நடத்தப்படவில்லை எனும் பகீர் குற்றச்சாட்டும் சொல்லப்படுகிறது.

இன்னொரு செர்னோபில்?

கரோனா பாதிப்பைக் குறைத்துக் காட்டும் ரஷ்யாவின் அணுகுமுறை, செர்னோபில் அணு உலைக் கசிவு சம்பவத்தை சோவியத் ஒன்றியம் கையாண்ட விதத்துடன் ஒப்பிடப்படுகிறது. அப்போது சோவியத் ஒன்றியத்தின் அங்கமாக இருந்த உக்ரைனில் செர்னோபில் அணு உலை இயங்கிவந்தது. 1986 ஏப்ரல் 25-ல், அதன் நான்காம் எண் உலையில் ஒரு மின் பொறியியல் சோதனையின்போது நேர்ந்த மனிதத் தவறால், 50 டன்னுக்கும் அதிகமான கதிரியக்கப் பொருட்கள் காற்றில் கலந்து பெரும் விபத்து ஏற்பட்டது. உடனடியாக 32 பேர் உயிரிழந்தனர். அதன் பாதிப்புகள் காரணமாக இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருக்கிறார்கள். அந்த விபத்தை ஆரம்பத்தில் மூடி மறைக்கவே சோவியத் முயற்சித்தது. பெரும் அணு உலை விபத்து நடந்திருப்பதை ஸ்வீடன் கண்டறிந்து சொன்ன பின்னர்தான் ஒப்புக்கொண்டது.

செர்னோபில் பாணியில் கரோனா மரணங்களையும் மூடி மறைப்பது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

திசை திருப்பும் உத்திகள்

ரஷ்யாவில் கரோனா வைரஸின் பாதிப்புகள் தொடர்பான கவனத்தைத் திசைதிருப்ப, அரசு ஆதரவு செய்தி சேனல்கள் பல்வேறு தந்திரங்களைக் கையாண்டன. கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் திணறுவதைப் பற்றிய செய்திகளே அதிகம் ஒளிபரப்பப்பட்டன.

எனினும், ஒருகட்டத்தில் ரஷ்யாவில் கரோனா பரவலும், மரணங்களும் அதிகம் என்பதை மக்கள் தெரிந்துகொண்டனர். இதையடுத்து, அண்டை நாடான பெலாரஸ் மீது அரசு ஆதரவு ஊடகங்கள் படையெடுக்கத் தொடங்கின. சிறிய நாடான பெலாரஸில் இன்றைய தேதிக்கு 54,680 பேருக்குத் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். இதுவரை 312 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உண்மையில், இவ்விஷயத்தில் பெலாரஸ் அரசு மிக மோசமாக நடந்துகொண்டது உண்மைதான்.

“கரோனா வைரஸ் பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. விவசாயப் பணிகளில் ஈடுபடுங்கள். வயலில் டிராக்டர் ஓட்டினாலே எல்லாமே குணமாகிவிடும். வோட்கா அருந்தினால் கரோனா வைரஸ் இறந்துவிடும்” என்றெல்லாம் உளறித் தள்ளியவர் பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லூகாஷென்கோ. சுமார் 90 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட அந்நாட்டில், அரசின் தவறுகள் காரணமாகக் கரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், அதைப் பிரதானப்படுத்தி சொந்த நாட்டின் தோல்விகளை ரஷ்ய அரசும், அரசு ஆதரவு ஊடகங்களும் மறைப்பதுதான் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

சுகவீன நிலையில் சுகாதாரத் துறை

உண்மையில், அரசின் அலட்சியமான அணுகுமுறையால் ரஷ்ய சுகாதாரத் துறையினரே கடும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறார்கள். நோவோர்ஸபியர்ஸ்க், கலினின்கிராடு, ஓம்ஸ்க் என ரஷ்யாவின் முக்கிய நகரங்களின் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கொத்துக்கொத்தாகப் பணியிலிருந்து விலகியிருப்பதை அந்நாட்டிலிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன. தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள் (PPE) வழங்கப்படாதது இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆபத்து நிறைந்த தங்கள் பணிக்காக, பெரும் சன்மானம் வழங்குவதாக அதிபர் புதின் அறிவித்திருந்த நிலையில், வழக்கமாக வழங்கப்படும் சம்பளம்கூடக் கிடைக்காததால் மருத்துவர்கள் விரக்தியடைந்திருக்கிறார்கள்.

ஆனால், அதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாத அரசு வெற்று விளம்பரங்களிலேயே கவனம் செலுத்துகிறது. இரண்டாம் உலகப் போர் காலத்திய சோவியத் மருத்துவர்களின் படங்களைப் பிரதானமாகக் காட்டி. கரோனா சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களை ‘ஊக்கப்படுத்தும்’ உத்தியைக் கையாள்கிறது.

மறுபுறம், கரோனா காலத்துக்கு முன்பே ரஷ்யாவின் சுகாதாரத் துறை மிக மோசமான நிலையில் இருப்பதாகப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். பொதுமக்கள், ஊடகங்கள் மட்டுமல்ல அரசில் அங்கம் வகிப்பவர்களே இதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். சுகாதாரத் துறையில் புதின் அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்கள் தோல்வியடைந்துவிட்டதாக, துணைப் பிரதமர் டாடியானா கோலிகாவாவே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

மருத்துவச் சீர்திருத்தம் எனும் பெயரில் பல மருத்துவமனைகள் மூடப்பட்டதும், மருத்துவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதும், இன்றைக்கு ரஷ்ய மக்களைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. அரசு மருத்துவமனைகளுக்குப் போதிய நிதியும் வழங்கப்படுவதில்லை. பல மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் முகக் கவசங்கள்கூட மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில், மாஸ்கோவின் காஸ்மோஸ் ஹோட்டலின் ஜன்னல்களில் விளக்குகளை ஏற்றி, ’மருத்துவர்களுக்கு நன்றி’ என்று முழக்கமிட அரசு ஏற்பாடு செய்தது. ஆனால், ‘மருத்துவர்களுக்குத் தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை வழங்காமல் இப்படிப் போலியாகப் புகழ்வதன் அர்த்தம் என்ன?’ என்பதுதான் மருத்துவர்கள் முன்வைக்கும் கேள்வி.

அதிகார விஸ்தரிப்பு

இத்தனைக் களேபரங்களுக்கு நடுவில், தனது அதிகார எல்லையை விஸ்தரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் புதின். தற்போதைய ஆட்சிக்காலத்துக்குப் பின்னரும், தொடர்ந்து அதிபர் பதவியில் நீடிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருகிறார். அதன் மூலம் 2036 வரையில் அதிபர் பதவியில் நீடிக்க முடியும். இதுதொடர்பான கருத்தறியும் வாக்கெடுப்பை ஜூலை 1-ல் நடத்தவும் புதின் திட்டமிட்டிருக்கிறார்.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட சமீபத்தில் மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புதின் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. கரோனா விதிமுறைகளுக்குப் புறம்பாக மற்றவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மறுபுறம், ’லெவாடா சென்டர்’ எனும் கருத்துக் கணிப்பு நிறுவனம் சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில் புதினின் செல்வாக்கு 59% ஆகக் குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. பெருந்தொற்றைச் சரியாகக் கையாளாததுதான் மக்கள் மத்தியில் அவருக்கான மதிப்பைக் குறைத்திருக்கிறது என்று ரஷ்ய நடுநிலை ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆனால், பெருந்தொற்று காலத்தில் அதிகாரத்தை வலுப்படுத்துவதிலேயே அதிகக் கவனம் செலுத்தும் தலைவர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவார்களா என்ன?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x