Published : 15 Jun 2020 06:50 AM
Last Updated : 15 Jun 2020 06:50 AM

அ.வைத்தியநாதன் (1931-2020)- இந்தியாவின் தரவு மனிதர்!

எஸ்.நீலகண்டன்

தமிழ்நாட்டில் பொருளியலில் மிகப் பெரிய சாதனையாளர்கள் பலரையும் அவர்கள் உயிரோடு இருக்கும்போது நாம் அங்கீகரிக்க மறந்துவிடுகிறோம். 2018-ல் மரணமடைந்த திருக்கோடிக்காவல் நீலகண்ட சீனிவாசன் ஒரு உதாரணம். 2007-ல் அவருக்குப் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டில் பொருளியல் துறை சார்ந்த சிலரைத் தவிர, மற்றவர்களுக்கு அவரைப் பற்றி எதுவுமே தெரியாது. அந்த வரிசையில் இப்போது பேராசிரியர் அ.வைத்தியநாதன்.

88 வயது நிரம்பிய அவர், கோவையில் ஜூன் 10 அன்று காலமானார். வைத்தியநாதனைப் பற்றியும் அவருடைய பன்முகத்தன்மை கொண்ட சிறப்பான ஆய்வுகள் பற்றியும் தமிழகத்தில் போதுமான புரிதல் இல்லை. அவர் திருவனந்தபுரம் வளர்ச்சி ஆய்வு மையத்திலும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். சேலம் வேலூர் அருகே ஒரு குக்கிராமத்தில் பிறந்த அவர் லயோலா கல்லூரியில் வணிகத் துறையில் பயின்று, பின்னர் அமெரிக்காவில் கார்னல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஆய்வுத் துறை பங்களிப்புகள்

‘கார்னல் இந்தியா’ திட்டத்தில் பங்கேற்று சில மாதங்கள் வடஇந்தியக் கிராமம் ஒன்றைப் பற்றிய தகவல்கள் திரட்டிய இவர், 1956-ல் டெல்லியில் பயன்முறைசார் பொருளியல் ஆய்வுகளுக்கான தேசிய கவுன்சிலில் (என்சிஏஇஆர்) பணியாற்றினார். 1962-72 வரை மத்திய திட்டத் தொலைநோக்குக் குழுவின் உறுப்பினராக, பீதாம்பர் பந்த் தலைமையில் பணியாற்றினார். அந்நாட்களில் அமர்த்திய சென், கே.என்.ராஜ், அசோக் ருத்ரா, டி.என்.சீனிவாசன், மின்ஹாஸ், ஜகதீஸ் பகவதி, அசோக் மித்ரா உள்ளிட்ட பல தலைசிறந்த இந்தியப் பொருளியல் வல்லுநர்களை அடையாளங்கண்டு, அவர்களைத் திட்டக் குழுவுக்காகப் பணியாற்ற வைத்த பெருமை பீதாம்பர் பந்தைச் சாரும். அதனால், வைத்தியநாதனுக்கு அவர்கள் அனைவருடனும் பழகவும் விவாதிக்கவும் திறனாய்வு செய்யவும் நல்ல வாய்ப்பு கிடைத்தது.

அக்காலகட்டத்தில் இந்திய வறுமையின் அளவு, பரப்பு, தீர்வு பற்றியும், விவசாயப் பண்ணைகளின் பரப்புக்கும் உற்பத்தித் திறனுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் ‘எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி’ ஆய்விதழில் தொடர்ந்து நடந்துவந்த விவாதங்களில் வைத்தியநாதன் தீவிரமாகப் பங்கேற்றார். அதே காலகட்டத்தில், ரோம் நகரில் உள்ள உணவு மற்றும் விவசாய அமைப்பில் அவர் ஓராண்டு காலம் பணியாற்றினார். திட்டத் தொலைநோக்குக் குழுவுக்குத் திரும்பிய பிறகு 1969-70-ல் விவசாய வருமான வரி பற்றிய கே.என்.ராஜ் கமிட்டியில் அங்கத்தினராகப் பணியாற்றினார்.

திட்டக் குழு உறுப்பினர்

1972-76 வரை உலக வங்கியில் பணியாற்றிய வைத்தியநாதனைத் திருவனந்தபுரத்தில் தான் தொடங்கிய வளர்ச்சி ஆய்வு மையத்துக்கு கே.என்.ராஜ் அழைத்துவந்து பேராசிரியராக நியமித்தார். திருவனந்தபுரத்தில் அவர் எட்டு ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். தேசிய விவசாயக் கொள்கை, நீர் மேலாண்மை, தேசியப் புள்ளிவிவரச் சேமிப்பு, அதன் ஆய்வும் விளக்கமும் ஆகியவை அவருடைய ஆய்வுகளின் குவிமையம். எனினும், அவர் நாட்டின் பொருளியல் முன்னேற்றத்தின் வேறு பல பகுதிகளையும் அவ்வப்போது ஆராய்ந்திருக்கிறார். 1984-ல் மால்கம் ஆதிசேஷய்யாவின் அழைப்பை ஏற்று சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு இடம் மாறினார். 1989-ல் அந்நிறுவனத்தின் இயக்குநர் பதவி வழங்கப்பட்டபோதும் தன் ஆய்வுகளுக்கு அந்த நிர்வாகப் பதவி இடையூறாக அமையும் என்று கூறி அதை ஏற்கவில்லை. 1991-ல் அவர் பணி ஓய்வுபெற்ற பின்பும் 2004 வரை மதிப்புறு பேராசிரியராக அங்கு பணியாற்றினார்.

அ.வைத்தியநாதன் ஆய்வுத் துறையில் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கவில்லை. இந்தியாவில் பொருளியல் ஆய்வுகளின் தரத்தை உயர்த்தும் முன்னோடியாக இருந்தார். தற்போதைய பொருளியல் ஆய்வுகளில் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின் தரவுகள் முக்கிய ஆதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன. தேசிய மாதிரிக் கணக்கெடுப்பைத் திட்டமிட்டதிலும் நடத்தியதிலும் அதைத் தரம் உயர்த்தியதிலும் வைத்தியநாதனுக்கு முக்கியப் பங்கு உண்டு. 2004-ல் கூட்டுறவு நிதி நிறுவனங்களைப் புத்தாக்கம் செய்ய அமைக்கப்பட்ட செயல்படையின் தலைவராக அவர் இருந்தார். தமிழ்நாடு, கேரளம், கர்நாடக மாநிலங்களின் திட்டக் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினராகவும் மத்திய திட்டக் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இந்திய விவசாயப் பொருளியல் சங்கத்தின் தலைவராகவும், திருவனந்தபுரம் வளர்ச்சி ஆய்வு மையத்தின் ஆளுநர்கள் வாரியத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

திக் திக் அனுபவம்

2008-ல் மும்பை தாஜ் ஹோட்டலைத் தீவிரவாதிகள் தாக்கியபோது வைத்தியநாதன் அங்கு தங்கியிருந்தார். அப்போது அவர் இந்திய ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு உறுப்பினராகப் பொறுப்புவகித்தார். அங்கிருந்து தப்பித்த அனுபவத்தை ‘தி இந்து’ நாளிதழில் அப்போதே பகிர்ந்திருந்தார். இந்தியாவின், குறிப்பாக தமிழ்நாட்டின் ஆறுகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள், நிலத்தடி நீர், நீர் மேலாண்மை, கால்நடைப் பொருளியல் பற்றிய ஆய்வுகளுக்கும் முன்னோடி வைத்தியநாதன். சுற்றுச்சூழல் பொருளியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். 1991-ல் மத்திய திட்டக் குழு அமைத்த நீர்ப் பாசனத்துக்கு விலை நிர்ணயிக்கும் குழுவின் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். அனைத்துப் பொருளியல் நிகழ்வுகளிலும் தரவுகளின் உண்மைத்தன்மையையும், ஒப்பீட்டளவில் அவற்றின் முக்கியத்துவத்தையும் தீவிரமாக ஆய்ந்துகொண்டே இருந்தார். தரவுகளைச் சேமிப்பதையும் பாதுகாப்பதையும் தொடர்ந்து வலியுறுத்தியதால், இந்தியாவின் ‘தரவு மனிதர்’ (டேட்டா மேன்) என்றே அவர் அழைக்கப்பட்டார்.

12 புத்தகங்களும், நூற்றுக்கணக்கான கட்டுரைகளும் எழுதியிருக்கிறார் வைத்தியநாதன். இறுதிக் காலத்தில் அவர் எழுதிய மூன்று புத்தகங்கள் நீர் மேலாண்மை தொடர்பானவை. அது தொடர்பான கட்டுரைகளின் இரண்டு தொகுப்புகளையும் அவர் வெளியிட்டிருக்கிறார். விவசாயத்தையும் நீர் மேலாண்மையையும் தவிர்த்துவிட்டு இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி சிந்திக்க முடியாது. வைத்தியநாதனின் ஆய்வுப் பயணமும் அதையே சொல்கிறது.

- எஸ்.நீலகண்டன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்.

தொடர்புக்கு: neelakantanster@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x