Last Updated : 08 Jun, 2020 03:18 PM

 

Published : 08 Jun 2020 03:18 PM
Last Updated : 08 Jun 2020 03:18 PM

பெருந்தொற்றைவிடப் பேராபத்தானவை இனவெறியும் அரசின் தோல்வியும்!

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்டு, காவலர்களின் கொடூர நடவடிக்கையால் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கறுப்பினத்தவர்களுடன், வெள்ளையினத்தவர்களும் இணைந்து போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். நவம்பர் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தப் போராட்டம் குறித்துப் பலரிடம் இருக்கும் பொதுவான கேள்வி இதுதான் - “கரோனா பெருந்தொற்று சமயத்தில் இப்படி வீதியில் இறங்கிப் போராடுவது விபரீதத்தை ஏற்படுத்தி விடாதா?”

தொற்று அதிகரிக்கும்
இந்தக் கேள்வி நியாயமானது என்பதுதான் அமெரிக்க சுகாதாரத்துறை நிபுணர்களின் கருத்து. அந்நாட்டில் இதுவரை கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர். 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இப்படியான சூழலில், அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களின் காரணமாக, ஒவ்வொரு நாளும் புதிதாக 3,000 பேருக்குக் கரோனா தொற்று ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார் ட்ரெவர் பெட்ஃபோர்டு எனும் மருத்துவ நிபுணர். இவர் வாஷிங்டன் மாநிலத்தின் சியாட்டில் நகரில் உள்ள ஃப்ரெட் ஹட்சின்ஸன் புற்றுநோய் ஆய்வு மையத்தில் பணிபுரிபவர். ஏற்கெனவே ஒவ்வொரு நாளும் சராசரியாக 900 பேர் உயிரிழந்துவரும் நிலையில், தினசரி கூடுதலாக 50 முதல் 500 பேர் வரை உயிரிழக்கலாம் என்று அவர் அச்சம் தெரிவிக்கிறார்.

அறிமுகமில்லாதவர்களுடன் தோளோடு தோள் உரசியபடி நின்றுகொண்டு போராடுகிறார்கள் மக்கள். அவர்களில் யாருக்கேனும் கரோனா தொற்று இருக்கலாம். புதிதாகக் கரோனா தொற்றுக்குள்ளானவர்களின் உடலில், இரண்டு வாரங்களுக்குப் பின்னர்தான் அதற்கான அறிகுறிகள் தெரியவரும். அந்த வகையில், கடந்த இரண்டு வாரங்களாக நடந்துவரும் போராட்டங்களின் விளைவாக, புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இந்த வாரத்திலிருந்து அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

பொருட்படுத்தப்படாத எச்சரிக்கை
போராட்டக்காரர்கள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும்; தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். “நீங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டவர் என்றால், உங்களுக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அர்த்தம். எனவே, கரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்” என்று நியூயார்க் மாநில ஆளுநர் ஆண்ட்ரூ எம்.குவோமோ எச்சரித்திருக்கிறார்.

அமெரிக்காவில் மட்டுமல்ல, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்தப் போராட்டம் விரிவடைந்திருக்கும் நிலையில், அங்கும் இதுபோன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அமெரிக்க சமூகத்தில், அரசு நிறுவனங்களில் இனவெறி அகலாத வரையில் இதுபோன்ற போராட்டங்கள் தொடரவே செய்யும் என்கிறார்கள் சமூகவியலாளர்கள்.

போராட்டம் தொடர்வது ஏன்?
சரி, பெருந்தொற்று அபாயம் இருக்கிறது என்று தெரிந்தும், ஏன் மக்கள் வீதிகளில் இறங்குகிறார்கள்? “கரோனா வைரஸ் பயங்கரமானதுதான். ஆனால், இனவெறிதான் அதிக உயிர்களைக் கொல்கிறது” என்பது போராட்டக்காரர்கள் முன்வைக்கும் வாதம். “கரோனா வைரஸை விடப் போலீஸ்காரர்களைப் பார்த்துதான் மக்கள் அதிகம் பயப்படுகிறார்கள்” என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

கறுப்பினத்தவர்கள் இப்படிக் கொதித்துப்போய் போராட்டத்தில் குதித்திருப்பதன் பின்னணியில் இருப்பது ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் மட்டுமல்ல; கரோனா வைரஸ் பாதிப்பும், மரணங்களும், ஊரடங்கின் விளைவாக ஏற்பட்டிருக்கும் வேலையிழப்பும் கறுப்பினத்தவர்கள் மத்தியில் மிக அதிகம் எனும் கசப்பான உண்மையும்தான். கரோனா வைரஸால் உயிரிழப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கறுப்பினத்தவர்கள். போலீஸாரின் அத்துமீறலால் மூச்சுத் திணறி உயிரிழந்த ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கும் கரோனா தொற்று இருந்தது உடற்கூராய்வு பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது. இதுதான் அமெரிக்காவின் நிதர்சனம். இத்தனைக்கும் அமெரிக்க மக்கள் தொகையில் கறுப்பினத்தவர்கள் 14 சதவீதம்தான்.

அமெரிக்காவில் கரோனா பொதுமுடக்கத்தால் கிட்டத்தட்ட 4 கோடி பேர் வேலையிழந்திருக்கிறார்கள். கறுப்பினத்தவர்களைப் பொறுத்தவரை, 6-ல் ஒருவர் வேலை இழந்திருக்கிறார். அமெரிக்காவில் அடிமை முறையால் சுமார் 400 ஆண்டுகள் தங்கள் முன்னோர்களுக்கு நிகழ்ந்த கொடூரங்கள், இன்றும் தொடரும் காவல் துறை அத்துமீறல்கள் போன்றவை கறுப்பின மக்களை ஆவேசம் கொள்ளச் செய்திருக்கின்றன.

கறுப்பினத்தவரின் கோரிக்கை என்ன?
அமெரிக்காவின் நகரங்கள், சிறுநகரங்கள், கிராமங்கள் வரை பரவியிருக்கும் இந்தப் போராட்டம், யாருடைய தலைமையிலும் நடைபெறவில்லை. மக்கள் தாமாக முன்வந்து இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மக்கள் வீதிகளில் திரளக் கூடாது என்று ஒரு மாதத்துக்கு முன் சொன்ன பல மாநில ஆளுநர்கள் இந்தப் போராட்டத்தை வெளிப்படையாகவே ஆதரிக்கிறார்கள்.

அதேசமயம், ‘ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்துக்குக் காரணமான நான்கு காவலர்கள் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதற்கு மேல் என்ன கோரிக்கையுடன் மக்கள் போராடுகிறார்கள்?’ என்று சிலர் கேட்கிறார்கள். போராட்டக்காரர்கள் கேட்பதெல்லாம், கறுப்பின மக்கள் மீதான வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான். இனவெறி அதிகம் நிலவும் காவல் துறையில் மிகப் பெரிய அளவில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.

தொடர் தோல்விகள்
அதேசமயம், வெள்ளையினத்தவர்களுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அரசியல் தலைவர்களும், வணிக நிறுவனங்களின் தலைவர்களும் சொல்லும் சமாதானத்தைப் போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். ஏனெனில், அப்படியான நம்பிக்கையை அதிபர் ட்ரம்ப் இதுவரை கொடுக்கவில்லை. “நான் போலீஸ்காரர்களை நேசிக்கிறேன்” என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் ட்ரம்ப், இவ்விஷயத்தை ஆரம்பம் முதலே மிக மோசமாகக் கையாண்டு வருகிறார்.

போராட்டக்காரர்களைக் குண்டர்கள் என்று அழைத்த ட்ரம்ப், அவர்கள் மீது ராணுவத்தை ஏவிவிடப் போவதாக எச்சரித்தார். “லூட்டிங் (கொள்ளை) தொடங்கும்போது ஷூட்டிங் (துப்பாக்கிச் சூடு) தொடங்கும்” என்று ட்வீட் செய்து எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினார். சமீபத்தில்கூட, “ஜார்ஜ் ஃப்ளாய்டு (மேலுலகத்தில் இருந்தபடி) கீழே பார்த்து, ‘நம் நாட்டில் சிறப்பான விஷயம் நடந்துகொண்டிருக்கிறது’ என்று சொல்வார் என்று நம்புகிறேன்” என்று பேசியிருக்கிறார் ட்ரம்ப். இனவெறி அடிப்படையிலான சம்பவங்களுக்கு முகங்கொடுப்பதிலும், காவல் துறையின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதிலும் குறிப்பிடும்படியாக எதையும் செய்யாத ட்ரம்ப்பின் இந்த வார்த்தைகள் அவரை விமர்சிக்கவே மேலும் வழிவகுக்கின்றன.

மொத்தத்தில், கரோனா வைரஸைக் கையாள்வது, கறுப்பினத்தவர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைப்பது எனும் முக்கியமான விஷயங்களில் பெரும் தோல்வியைத் தழுவியிருக்கிறார் ட்ரம்ப். ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குநராகப் பணியாற்றிய டாக்டர் டாம் ஃப்ரீடன் கடந்த வாரம் பதிவிட்ட ட்வீட் மிக முக்கியமானது. “சமுதாய நம்பகத்தன்மையை இழக்கும் வகையில் அரசு செயல்படுவதை ஒப்பிட, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் இருக்கும் அச்சுறுத்தல் மிகச் சிறியதுதான்” எனும் அவரது ட்வீட்டுக்கு ஏக வரவேற்பு.

ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற தன்மையும், இனம், மொழி, சாதி போன்றவற்றின் அடிப்படையில் அதிகாரவர்க்கத்தில் நிலவும் பாரபட்சமும் தொடரும் வரையில், பெருந்தொற்றுகள் வைரஸ் மூலமாகத்தான் பரவ வேண்டும் என்றில்லை. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x