Published : 05 Jun 2020 07:36 am

Updated : 05 Jun 2020 07:36 am

 

Published : 05 Jun 2020 07:36 AM
Last Updated : 05 Jun 2020 07:36 AM

உலக நாடுகளைப் போல இந்திய நாடாளுமன்றம் உடனடியாகக் கூட வேண்டும்

indian-parliament

உலகெங்கும் உள்ள ஜனநாயக நாடுகளின் நாடாளுமன்றங்கள் கூடி, கரோனா கொள்ளைநோய்க்குத் தங்கள் அரசுகள் செயலாற்றும் விதம் குறித்துக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றன. ஏப்ரல் இறுதியில், கனடிய நாடாளுமன்றம் கூடியது. இணையம்வழி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 338 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 280 பேர் பங்கேற்றனர். 3 மணி நேரத்துக்கும் மேலாக விவாதித்தார்கள். நேரில் கூடுவது, காணொலி மூலம் கூடுவது என்று இருவகையிலும் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கூடியது. பிரான்ஸ், இத்தாலி, அர்ஜெண்டினா, பிரேசில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற ஏனைய பல நாடுகள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதன் மூலமாகவோ (எல்லாக் கட்சிகளிலிருந்தும் சில உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொள்வது என்ற ஒப்பந்தத்துடன்) காணொலி மூலமாகவோ இரண்டும் கலந்தோ நாடாளுமன்றங்களைக் கூட்டின. இந்தக் கொள்ளைநோயின்போது வெவ்வேறு நாடுகளின் நாடாளுமன்றங்கள் பின்பற்றும் வழிமுறைகளை ‘சர்வதேச நாடாளுமன்றங்களின் ஒன்றியம்’ ஆவணப்படுத்தியிருக்கிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உச்ச அமைப்பு என்று தன்னைப் பற்றிப் பெருமை கொண்டிருக்கும் இந்திய நாடாளுமன்றம் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

நமது அரசு நிர்வாக அமைப்பில் நாடாளுமன்றம் பிரதானப் பங்கு வகிக்கிறது. முதலும் இறுதியுமாக, அதுதான் ஆட்சியில் இருக்கும் அரசைக் கட்டுப்படுத்துவதற்கும் சவால் விடுவதற்குமான அமைப்பு. அதிபர் முறையிலான அரசாட்சிக்குப் பதிலாக நாடாளுமன்ற முறையிலான அரசாட்சியை அரசமைப்பு வரைவுக் குழு ஏன் தெரிவுசெய்தது என்பதை பி.ஆர்.அம்பேத்கர் விளக்கியிருக்கிறார். அதிபர் முறையில் அதிகபட்சமான நிலைத்தன்மைக்கு வாய்ப்பிருந்தாலும் நாடாளுமன்ற முறைதான் கேள்விகள், தீர்மானம் நிறைவேற்றுதல், விவாதங்கள் ஆகியவற்றின் மூலம் அரசாங்கத்தைப் பொறுப்புக்குள்ளாக்குவதில் சிறந்தது என்பது அவருடைய விளக்கம். நாடாளுமன்றமும் அதன் குழுக்களும் இந்தியாவில் இரண்டு மாதங்களாகக் கூடவில்லை என்பது அரசின் செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை உணர்த்துகிறது.


பொதுமுடக்கச் சட்டம்

நாடு தழுவிய சட்டங்கள் எல்லாம் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்படுகின்றன. பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ்தான் தற்போதைய நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்துவருகிறது. இந்தச் சட்டம் கொள்ளைநோய்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்படவில்லை. கரோனா பரவலைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவைப்பட்ட பொதுமுடக்கத்தைக் கொண்டுவருவதற்கு வேறெந்தச் சட்டமும் இல்லை என்பதால், ஒன்றிய அரசுக்கு வேறு வழியில்லை என்று வாதிடப்படுகிறது. இந்த வாதம் ஒரு விஷயத்தைத் தவறவிடுகிறது. பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் நாள் வரை நாடாளுமன்றம் கூடியிருந்த காலத்தில், இதற்குப் பொருத்தமான ஒரு சட்டத்தைக் கொண்டுவந்திருக்கலாம். இதைத்தான் பல்வேறு நாடுகளும் செய்தன. தேவைப்படும் கட்டுப்பாடுகள், காலாவதி நாள், தேவையெனில் நாடாளுமன்றத்தால் புதுப்பித்துக்கொள்ளலாம் என்ற அம்சங்களுடன் அந்த நாடுகள் சட்டமியற்றின.

அரசாங்கத்தால் செய்யப்படும் செலவுகள் நாடாளுமன்றத்தால் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. கரோனாவாலும் பொதுமுடக்கத்தாலும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள அரசு தொடர்ச்சியாகப் பல திட்டங்களை அறிவித்திருக்கிறது. இவையெல்லாம் நாடாளுமன்ற விவாதத்துக்கோ ஒப்புதலுக்கோ விடப்படவில்லை.

திட்டங்கள் தீட்டும் இடம்

இந்த நெருக்கடியான தருணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்காற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் கேள்விகளைக் கேட்பதன் மூலம், அவர்கள் மக்களின் அக்கறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இந்தக் கொள்ளைநோயின் காரணமாக நாடு பல்வேறு வகையிலும் கடுமையான சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம் மனிதப் பேரவலமாக மாறியுள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளை விவாதித்துத் தேவையான திட்டங்களைத் தீட்டும் இடம் நாடாளுமன்றம்தான்.

தனிமனித இடைவெளியுடனான கூட்டங்களையும் தொலைசந்திப்புகளையும் நமது அரசமைப்புச் சட்டம் தடுக்கவில்லை. ‘எது பொருத்தமாக இருக்குமோ அந்த நேரத்திலும் இடத்திலும்’ கூடுமாறு நாடாளுமன்றத்துக்குக் குடியரசுத் தலைவர் அழைப்பு விடுக்கலாம் என்கிறது நம் அரசமைப்புச் சட்டம். அவையின் ‘அமர்வு நடைபெறுவதற்கான தேதியையும் இடத்தையும்’ ஒவ்வொரு உறுப்பினருக்கும் தெரிவித்து, பொதுச் செயல் அதிகாரி அழைப்பு விடுக்க வேண்டும் என்று இரு அவைகளின் நடைமுறை விதிகள் கூறுகின்றன. கலவையான கூட்டங்களையும் தொலைசந்திப்புகளையும் நிகழ்த்துவதற்கான வாய்ப்புகளை இது வழங்குகிறது. நாடாளுமன்றக் குழுக்கள் அவையின் வளாகத்துக்குள்ளே கூட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், வெளியிலும் கூடுவதற்கு அவைத் தலைவர் அனுமதிக்கலாம். சொல்லப்போனால், துணைக் குழுக்கள் அடிக்கடி டெல்லிக்கு வெளியில் ஆய்வுப் பயணங்கள் மேற்கொள்கின்றன. இப்படியாக, காணொலிக் கூட்டங்கள் நடத்த நாடாளுமன்றத்தின் முன்னனுமதி தேவையில்லை.

குழுக்களின் கூட்டங்களுக்குத்தான் தொலைவிலிருந்து இயங்குவதற்கான சாதனங்கள் தேவை. உலகளாவிய பெருநிறுவனங்கள் பலவும் பல நாடுகளின் நாடாளுமன்றக் குழுக்களும் இந்தப் பிரச்சினையைத் தீர்த்திருப்பதால், இந்திய நாடாளுமன்றத்தால் அந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை. எல்லா மாவட்டத் தலைமையகங்களும் ‘ஃபைபர் ஆப்டிக்’ கம்பிகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி அலுவலகத்தில் இணைய இணைப்பில் ஏதாவது பிரச்சினை என்றாலும் இதுபோன்ற அரசு வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வழிமுறைகளைக் கண்டாக வேண்டும்

கடைசியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை எப்படிக் கருதிக்கொள்கிறார்கள் என்பதில்தான் எல்லாமே இருக்கிறது. தங்களை மக்களின் பாதுகாவலர்கள் என்று அவர்கள் நினைத்தால், தங்களின் அரசமைப்புச் சட்டக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை அவர்கள் கண்டாக வேண்டும். கடந்த மூன்று மாதங்களாக மத்திய -மாநில அரசுகள் கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக 5,000 அறிவிப்புகளுக்கும் மேலாக வெளியிட்டிருக்கின்றன. இந்த அறிவிப்புகளின் பொருத்தப்பாடு நாடாளுமன்றத்தாலும் அதன் குழுக்களாலும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதுவே, சாதாரண நாட்களென்றால் நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு ஜூலையின் இரண்டாம் பாதியில் நடைபெறும். ஆனால், தற்போது நிலவும் அசாதாரணமான சூழல்கள் காரணமாக நாடாளுமன்றம் உடனே கூட வேண்டும்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்றும், உலகுக்கே தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்கும் நாடு என்றும் தன்னைப் பற்றிப் பெருமைகொண்டிருக்கிறது இந்தியா. ஆகவே, ஜனநாயகத்தைச் செயல்படுத்துவதில் நமக்குள்ள நம்பகத்தன்மையை வலுப்படுத்திக்கொள்வதற்கு நாட்டின் தகவல் தொழில்நுட்ப சக்தியை நாடாளுமன்றம் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.

- எம்.ஆர்.மாதவன், தலைவர், பி.ஆர்.எஸ். லெஜிஸ்லேட்டிவ் ஆராய்ச்சி நிறுவனம், புதுடெல்லி.

© ‘தி இந்து’, தமிழில்: ஆசை


Indian parliamentஇந்திய நாடாளுமன்றம் உடனடியாகக் கூட வேண்டும்கொள்ளைநோய்Covid 19

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x