Published : 03 Jun 2020 09:41 PM
Last Updated : 03 Jun 2020 09:41 PM

அமெரிக்காவைப் பீடித்திருக்கும் பெருந்தொற்று நிறவெறிதான்-  ஜார்ஜ் க்ளூனி

இப்போது என்ன செய்யப் போகிறோம்?

1992-ம் ஆண்டு இப்படித்தான் நடந்தது. கருப்பினக் கட்டிடத் தொழிலாளி ரோட்னி கிங்கை வெள்ளைப் போலீசார் அடித்த வீடியோவைப் பார்த்தபிறகும் அந்தப் போலீசார் குற்றவாளிகள் அல்ல என்று நீதிபதி சொன்னதைக் கேட்டோம். 2014-ம் ஆண்டு, சிகரெட்டுகள் விற்ற கருப்பினத்தவர் எரிக் கார்னரை ஒரு வெள்ளையினப் போலீஸ்காரர் கழுத்தை நெரித்துக் கொன்றதையும் பார்த்தோம். என்னால் மூச்சுவிட முடியவில்லை என்று அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் எப்போதும் நம் மனங்களில் செதுக்கப்பட்டிருக்கும்.

கருப்பின மக்கள் காவல்துறையினரால் கொல்லப்படுவதை எத்தனை முறை நாம் பார்த்திருக்கிறோம். டாமிர் ரைஸ், பிலாண்டோ காஸில், லக்வான் மெக் டொனால்ட்.

ஜார்ஜ் ப்ளாய்ட் கொலை செய்யப்பட்டுள்ளார். நான்கு போலீஸ் அதிகாரிகளின் கைகளில் அவர் தனது இறுதி மூச்சை விட்டிருக்கிறார். நமது குடிமக்களில் ஒரு அங்கத்தினருக்கு அமைப்பு ரீதியாக இழைக்கப்படும் கொடூரமான அநீதிக்கு எதிராக 1968, 1992, 2014-ம் ஆண்டுகளில் நடந்ததைப் போலவே வலுவான இன்னொரு எதிர்வினையைக் கண்டுவருகிறோம். எப்போது இந்தப் போராட்டங்கள் அடங்கும் என்று நமக்குத் தெரியவில்லை.

யாரும் கொல்லப்படக் கூடாது என்று நம்பவும் பிரார்த்திக்கவும் செய்வோம். அதேவேளையில் எதுவும் பெரிதாக மாறப்போவதில்லை என்பதும் நமக்குத் தெரியும்.

நம்மால் என்ன செய்யமுடியும் என்று நம்மில் பெரும்பாலானவர் அங்கலாய்ப்பதைப் போன்றே, க்ளீவ்லேண்ட் நீதிமன்றத்தில் நடந்த ஓராண்டு விசாரணைகளை ஆராய்ந்து செய்தி வெளியிட்ட சாரா கோனிக்கின் பேச்சைக் கேட்டபோது உணர்ந்தேன். அவர் இப்படிச் சொல்கிறார்.

“எங்கோ ஒரு தவறு ஏற்பட்டு விட்டது. அதை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். உலகில் வேறெந்த நாட்டையும் விட நமது கறுப்பின மக்களில் பெரும்பகுதியினரை, அமெரிக்கா சிறையில் அடைக்கிறது. நாம் தான் நம்பர் ஒன்னாக இருக்கிறோம். அந்த எண்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டவை. நமது வரலாற்றில் இது முன்னுதாரணம் இல்லாததும் கூட. கருப்பின மக்களுக்கு நடக்கும் அநீதியும் இங்கே ஆவணப்படுத்தப்பட்டவையே. குற்ற நீதி அமைப்பின் ஒவ்வொரு மூட்டிணைப்பும் நிறப்பாகுபாடு என்னும் மசகு எண்ணை ஊற்றப்பட்டது.

அதே குற்றத்தைச் செய்யும் வெள்ளையின மக்களை விட, அதே குற்ற வரலாறு இருக்கும் வெள்ளையின மக்களை விட, கருப்பின மக்கள் கூடுதலாக கைதுக்கும் தண்டனைகளுக்கும் உள்ளாகிறார்கள். கூடுதல் தண்டனைக் காலம், கூடுதல் பிணைத்தொகை, தண்டனைக் குறைப்புக்கான சாத்தியங்களை மறுத்தல் என அனைத்துப் பாகுபாடுகளுக்கும் உள்ளாகுபவர்கள் கருப்பின மக்கள். இவர்களின் எண்ணிக்கை வானத்தில் நமக்கு மேல் மிதப்பதல்லல. இந்த எண்ணிக்கை ரத்தமும் சதையுமாக நாட்டில் இருப்பது.”

சாரா கோனிக் சொல்வது உண்மை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

அடிமை முறை என்று நாம் செய்துகொண்டிருந்த பூர்விகப் பாவச் செயலிலிருந்து ஒரு நாடாக, பெரிதாக வளரவேயில்லை என்பதை ஞாபகப்படுத்துவதாகவே நமது தெருக்களில் தாண்டவமாடும் கோபமும் விரக்தியும் உள்ளது.

பிற மனிதர்களை வாங்கவோ விற்கவோ செய்வதில்லை என்பதை இனியும் கௌரவ முத்திரையாக நாம் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்க முடியாது. நமது சட்ட அமலாக்கம் மற்றும் நமது குற்ற நீதி பரிபாலனத்தில் முறையான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியதுதான் இப்போதைய அவசியம்.

நம் நாட்டில் உள்ள அனைத்துக் குடிமக்களையும் அடிப்படை நியாய உணர்வுடன் பார்த்து சமமாக நடத்தும் கொள்கை வகுப்பாளர்களும் அரசியல்வாதிகளும் நமக்குத் தேவை.

கலவரக்காரர்களை சுடுவேன் என்று சொல்லி வெறுப்புக்கும் வன்முறைக்கும் அனல்மூட்டும் அரசியல்வாதிகள் தேவையில்லை. நிறவெறியைத் தூண்டும் சாடைப் பேச்சுகளாகவே அது அமையும்.

இதுதான் நமது பெருந்தொற்று. அதுதான் நம் எல்லாரையும் பீடித்திருக்கிறது. நானூறு ஆண்டுகளாக அதற்குத்தான் நாம் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கவில்லை. அப்படியான தடுப்பு மருந்தைத் தேடுவதைக் கூட நாம் கைவிட்டுவிட்டோம். நாம் தனிநபர் அடிப்படையில் புண்ணைக் காயமாற்ற முயன்றுவருகிறோம். இச்சூழ்நிலையில் நம்மால் காயத்தை ஆற்றவே முடியாது.

தற்போது கட்டுப்படுத்தவே முடியாமல் போய்விட்ட இந்தப் பிரச்சினைகளை எப்படித் தீர்க்கப் போகிறோம் என்று பரிதவித்து வருகிறோம். ஒன்றே ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினைகளை நாம் தான் உருவாக்கினோம்; அதனால் நம்மால் அவற்றைத் தீர்க்க முடியும். மிகப் பெரிய மாற்றம் இந்த நாட்டில் வருவதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உண்டு: வாக்களியுங்கள்.

தமிழில் : ஷங்கர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x