Last Updated : 03 Jun, 2020 06:52 PM

 

Published : 03 Jun 2020 06:52 PM
Last Updated : 03 Jun 2020 06:52 PM

மருத்துவக் கழிவுகளால் கரோனா பரவும் அபாயம்: தடுக்க வழி சொல்லும் பூவுலகின் நண்பர்கள் குழு

கரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகள், கரோனா தனிமைப்படுத்துதல் முகாம்கள், கரோனா பரிசோதனைக் கூடங்கள் ஆகியவற்றிலிருந்து வெளிவரும் மருத்துவக் கழிவுகளின் மூலம் கரோனா நோய் பரவுவதைத் தடுக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கடந்த ஏப்ரல் 19-ம் தேதி மறுஆய்வு செய்யப்பட்ட விரிவான வரைமுறையினை வெளியிட்டது.

அதன்படி, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மருத்துவக்கழிவுகள் மேலாண்மை விதிகளின் (Bio Medical Waste Management Rules 2016) படி மருத்துவக் கழிவுகள் மற்ற மாநகராட்சி திடக் கழிவுகளுடன் சேராமல் இருக்க ஐந்து வெவ்வேறு நிற சேகரிப்புப் பைகளைக் கொண்டு பிரித்தெடுக்கவும் அதோடு சேர்த்து கூடுதலாகக் கழிவைக் கையாளும் போது கசிவு ஏற்படுவதைத் தடுக்க, அக்கழிவுகளை இரண்டடுக்கு பாதுகாப்புள்ள பைகளில் எடுத்துசெல்ல வேண்டும்.

கரோனா வார்டுகளில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை எளிதில் அடையாளப்படுத்தும் விதத்திலும், அதை உடனடியாக அப்புறப்படுத்துவதற்காகவும் கரோனா கழிவுகள் சேகரிக்கப்பட்ட பைகளில் ‘கோவிட் - 19 வேஸ்ட்’ (Covid-19 waste) என எழுதி அடையாளப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள் இருக்கின்றன.

இவை போதுமானவை இல்லை என்கிறது பூவுலகின் நண்பர்கள் குழு. இதுபற்றி அந்த அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா கழிவுகளைக் கையாள்வதில் தமிழ்நாடு அரசாங்கம் பிரத்யேகமாகக் கருத்தில் கொள்ள வேண்டிய சில பாதுகாப்பு அம்சங்களை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்துகிறது.

1. சி.பி.எம்.டபிள்யூ.டி. எஃப் (CBMWTF- Common Bio Medical Waste Treatment Facility) பற்றாக்குறை:-
தமிழ்நாட்டில் நாள் ஒன்றிற்கு 47 டன் மருத்துவக் கழிவுகள் உற்பத்தியாவதாக தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்தின் தகவல் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 34 டன் மருத்துவக் கழிவுகளை கையாளக்கூடிய 11 சி.பி.எம்.டபிள்யூ.டி.எஃப் -கள் மட்டுமே உள்ளன.

சென்னையில் உற்பத்தியாகும் மருத்துவக்கழிவுகளில் வெறும் 25 சதவீதத்தை மட்டுமே பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தக் கட்டமைப்புகள் உள்ளன. மீதமுள்ள மருத்துவக் கழிவுகள் முறையாகக் கையாளப்படாமல், எந்தவிதமான பாதுகாப்புமில்லாமல் குழி தோண்டிப் புதைக்கப்படுவதும், மாநகராட்சி திடக்கழிவுகளுடன் இந்த மருத்துவக் கழிவுகள் கலப்பதும் இயல்பாக நடைபெறுவதால்தான், தொடர்ந்து நீர்நிலைகளில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் என்ற செய்தியினை அவ்வப்பொழுது தொலைகாட்சிகளில் பார்த்து வருகிறோம். (சமீபத்தில் சென்னை அனகாப்புத்தூர், மண்ணிவாக்கம், புழல் உள்ள நீர்நிலைகளில் டன் கணக்கில் கண்டெடுக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் இதற்கு ஒரு உதாரணம்).

இப்படி ஏற்கெனவே மருத்துவக் கழிவு மேலாண்மை தமிழகத்தில் கேள்விக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், தற்போது கரோனா பாதிப்பால் தமிழகத்தில் அதிகரித்துவரும் மருத்துவக் கழிவுகளை முறையாகக் கையாளாமல், கரோனா தொற்று மேலும் அதிகரித்து தமிழகம் எங்கும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மருத்துவக் கழிவுகளில் 15 சதவீதம் மட்டுமே மிகவும் அபாயகரமானதாக (infectious, toxic and radio active) இருக்கும். ஆனால், தற்போது கரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் நிரம்பி வழிவதால், அவர்களிடமிருந்து உற்பத்தியாகும் கழிவுகள் பெரும்பான்மையானவை நோய் தொற்றைப் பரப்பக்கூடியவை, அதனால் மருத்துவக் கழிவுகளில் இருக்கும் அபாயகரமான கழிவுகளின் அளவு அதிக அளவில் அதிகரித்துள்ளது. இதை இப்படியே விட்டால் தமிழ்நாட்டின் சுகாதாரத்திற்கே ஆபத்தாகிவிடும்.

மதுரை மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகளைக் கையாளக்கூடிய வசதிகள் இல்லாத காரணத்தால்தான் மதுரை வீரபாஞ்சானில் உள்ள கண்மாயில் டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு பின்னர் கண்டெடுக்கப்பட்டன. எனவே பூவுலகின் நண்பர்கள் ஏற்கெனவே கூறியது போல மாவட்டத்திற்கு ஒரு சி.பி.எம்.டபிள்யூ.டி.எஃப் -ஐ அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்.

2. கரோனா வார்டுகள் மற்றும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீடுகளில் உற்பத்தியாகும் மருத்துவக் கழிவுகள் மேலாண்மை:
மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், பரிசோதனை கூடங்கள் ஆகியவற்றில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை அதற்கென உள்ள ட்ரீட்மென்ட் மையங்களுக்கு அனுப்பபட்டு எவ்வாறு கண்காணிக்கப்படுகிறதோ, அதைப்போலவே கரோனா மையங்களிலும், தொற்றாளர்களைத் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீடுகளிலும் உற்பத்தியாகும் மருத்துவக் கழிவுகளை அந்த மையங்களுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பான முறையில் கையாளப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதிபடுத்த வேண்டும்.

3. சாம்பலாக்கிகளைத் தரமுயர்த்துதல் (Upgrading Incinerators):
மருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்கும் செயல்பாட்டிற்கு, கழிவுகளை அதீத வெப்பத்தில் எரிக்கும் சாம்பலாக்கிகள் (incinerators) என்று சொல்லப்படும் கருவி மிக முக்கியமானது. இந்த சாம்பலாக்கிகளின் கட்டுமானம் மற்றும் பயன்பாட்டிற்கென மத்திய மாசு கட்டுப்பட்டு வாரியம் விதிகளை வகுத்துள்ளது. அதில் வெப்பம் 1000 டிகிரியில் இருந்து 1200 டிகிரி வரை இருக்க வேண்டும். காற்று மாசைக் கட்டுப்படுத்தும் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் மேலும் பாதரசம், சல்பர், நைட்ரோஜன் வாயு, மீத்தேன் வாயு ஆகிய நச்சு வாயுக்களை கண்காணிக்கும் கருவிகளும் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

தற்போது இயங்கும் பல மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிறுவனங்கள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்திருக்கும் தரத்திற்கு தங்களது சாம்பலாக்கிகளை மேம்படுத்தாமல், விதிகளைப் பின்பற்றாமல் இயங்கிக்கொண்டிருகின்றன.

தற்போது கரோனா காலத்தில் அபாயகரமான மருத்துவக் கழிவுகள் அதிகம் உற்பத்தியாகும் நிலையில், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கழிவுகளைச் சுத்திகரிக்கும் நிறுவனங்களில் உள்ள சாம்பலாக்கிகள், கழிவுகளை உரிய வெப்பத்தில் எரிக்கவும், வெளியேறும் மாசுக்களை கட்டுப்படுத்தவும், புகையை பாதுகாப்பான வகையில் 30 மீட்டருக்கு மேல் உயரத்தில் உள்ள புகைபோக்கியைக் கொண்டு வெளியேற்றும் வகையிலும் மேம்படுத்தப்பட்டுள்ளதா என்பதனைத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்ய வேண்டும்.

4. மருத்துவக் கழிவுகளை அளவிடுதல்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு மருத்துவக் கழிவுகள் எந்த எந்த இடங்களிலிருந்து இருந்து எடுக்கப்படுகின்றன, எவ்வளவு அகற்றப்படுகின்றன என்பதைத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். (2016 க்கு பிறகு இந்த தகவல் வெளியிடப்படவில்லை).

5. மருத்துவ ஊழியர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் பாதுகாப்பு :
கரோனா மருத்துவக் கழிவுகளைக் கையாளும் பணியாளர்களுக்குத் தற்கவச உடைகள் (பிபிஇ), முகக் கவசம், பாதுகாப்புக் கண்ணாடிகள், கையுறைகள், உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும், பயன்படுத்தப்பட்ட பிறகு அவற்றை முறையாக அகற்றி கையாளப்படுவதையும் உறுதிசெய்யவேண்டும்.

6. மருத்துவக் கழிவுகளை கையாள்வது குறித்த பயிற்சிகளை அதிகரிக்க வேண்டும் (2017-ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள 4192 சுகாதார மையங்களுக்கு மொத்தமாக வெறும் 88 பயிற்சிகளே வழங்கப்பட்டுள்ளன). மருத்துவக் கழிவுகளைக் கையாள்வதற்கு பயிற்சிகள் அளிப்பது போலவே கரோனா கழிவுகளை எப்படி பாதுகாப்பாக கையாளுவதென மருத்துவ ஊழியர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களிடம் நோய் பரவுவதைப் பெருமளவு தவிர்க்க முடியும்.

7. கடந்த 70 நாட்களாக தமிழக மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட பிசிஆர் கிட்கள், ரேபிட் கிட்கள், ஊசிகள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் என அனைவரும் பயன்படுத்திய கவச உடைகள், கையுறைகள், முகக்கவசங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும், அவை எவ்வாறு கையாளப்பட்டன என்பதை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

8. மருத்துவக் கழிவுகளை முறையாகக் கண்காணிக்க மத்திய அரசால் ஏற்கெனவே பரிந்துரைக்கபட்ட மருத்துவக் கழிவுகளுக்கான ‘பார் கோடு சிஸ்டம்’ முறையை அமல்படுத்த வேண்டும்.

9. நிதிநிலை அறிக்கையில் திடக்கழிவு மேலாண்மைக்கென 7,000 கோடி ரூபாயை அரசு ஒதுக்கிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது, அதில் மருத்துவக்கழிவு மேலாண்மைக் கட்டமைப்புகளை ஏற்படுத்த கணிசமான தொகையை ஒதுக்கவேண்டும்.

10. மருத்துவக் கழிவு மேலாண்மை விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிக்கவேண்டும், தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அந்த நிறுவனத்தை மூடுவதற்கு உத்தரவிடவேண்டும்.

மேற்சொன்ன நடவடிக்கைகளை உடனே எடுத்து மருத்துவ கழிவுகளின் மூலம் கரோனா பரவுவதை தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.’
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x