Published : 02 Jun 2020 07:05 AM
Last Updated : 02 Jun 2020 07:05 AM

நிதி அமைச்சர் அறிவித்த திட்டங்கள் விவசாயிகளைக் காப்பாற்றுமா?

ஊரடங்கு உருவாக்கிய பொருளாதார முடக்கத்தை மீட்டெடுப்பதற்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்தார் நிதி அமைச்சர். பல காலமாக விவசாயிகளால் வைக்கப்பட்ட சில கோரிக்கைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. வளா்ச்சித் திட்டங்கள் மட்டுமல்லாமல், சுயசார்புடைய பொருளாதார வளா்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘ஆத்மநிர்பார் அபியான்’ திட்டத்தின் மொத்தத் தொகையில், ரூ.4.30 லட்சம் கோடிகளுக்கும் மேலாக விவசாய வளா்ச்சிக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பெரும் இழப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கிற விவசாயிகளுக்கு இவையெல்லாம் எந்த அளவுக்கு உதவும் என்று பார்ப்போம்.

திட்டங்கள் என்னென்ன?

ஐந்து திட்டங்கள் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையக்கூடும். ஒன்று, விவசாயிகளின் வளா்ச்சிக்குத் தடையாகவுள்ள, 1955-ல் கொண்டுவரப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் சட்டத்தில் பெரிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இரண்டு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் தொடா்ந்து சுரண்டப்படுவதால், விவசாயிகள் தங்கள் பொருட்களை எங்கு, யாரிடம் விற்க வேண்டும் என்பதை அவா்களே தேர்ந்தெடுக்கலாம். மூன்று, மோசமான நிலையிலுள்ள விவசாயச் சந்தைகளின் உள்கட்டமைப்புகளை உயா்த்துவதற்கும், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களை வளா்ப்பதற்கும் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நான்கு, விவசாயப் பொருட்களின் தரத்தை உயா்த்த ஈடுபடும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1 லட்சம் கோடியில் நிதியம் உருவாக்குதல். ஐந்து, ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள கிசான் கடன் அட்டைத் திட்டத்தின் கீழ் மீனவா்கள் மற்றும் கால்நடை வளா்ப்பில் ஈடுபடும் விவசாயிகளும் சோ்க்கப்படுவார்கள்.

பெரிய சட்டத் திருத்தம்

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு, வரலாற்றுச் சிறப்பானதாகும். இச்சட்டத்தால், வேளாண் பொருட்களை ஏற்றுமதிசெய்வதில் பல தடைகள் ஏற்பட்டது மட்டுமல்லாமல், சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன சேமிப்புக் கிட்டங்கிகளை ஏற்படுத்த தனியார் முதலீடுகளை ஈா்க்க முடியாமல் போய்விட்டது. உதாரணமாக, நம் நாட்டின் தோட்டப் பயிர்களின் மொத்த உற்பத்தியான 311 மில்லியன் டன்களில் வெறும் 15% பொருட்களை மட்டுமே குளிரூட்டப்பட்ட கிட்டங்கிகளில் சேமிக்க வசதிகள் உள்ளன. உற்பத்தியாகும் வேளாண் பொருட்களைச் சேமிக்க முடியாத காரணத்தால், இடைத்தரகா்களிடமும் வணிகா்களிடமும் அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுவருகிறார்கள். இது இனி தடுக்கப்பட்டுவிடும்.

சந்தை சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை

வேளாண் சந்தையில் சீா்திருத்தங்களைக் கொண்டுவருவதற்குப் பெரிய அளவிலான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது ஒரு மாநிலத்திலிருந்து, மற்றொரு மாநிலத்துக்கு வேளாண் பொருட்களை எடுத்துச் செல்வதற்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. இவற்றை நீக்குவது மட்டுமல்லாமல், இ-வணிகம் மூலமாக வேளாண் பொருட்களை விற்பதற்கான சட்டமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஏறக்குறைய ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு, ‘ஆபரேஷன் கிரீன்’ என்ற பசுமைத் திட்டம் நீட்டிக்கப்பட்டு தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு பயிர்களோடு அனைத்து, பழம் மற்றும் காய்கறிப் பயிர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், பற்றாக்குறை பகுதிகளுக்கு இந்த வேளாண் பொருட்களைக் கொண்டுசெல்ல 50% போக்குவரத்து மானியம் மற்றும் இவற்றைக் குளிர்பதனக் கிட்டங்கிகளில் சேமித்து வைக்க ஆகும் செலவில் 50% மானியம் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு வரும் காலங்களில் விவசாயிகளின் சந்தைச் செலவுகளைக் குறைக்கும். ஊரடங்கு காலத்திலும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் விவசாயிகளுக்கும் நுகா்வோர்களுக்கும் சிறந்த சேவைகளைச் செய்துள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு, விளைபொருட்கள் உற்பத்திசெய்யும் இடத்திலேயே (Farm Gate) நல்ல விலை கிடைப்பதற்கான கட்டமைப்புகளை உயர்த்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் செய்திருக்கலாம்

ஊரடங்கால் ஏற்பட்ட இழப்புகளை விவசாயிகள் சரிசெய்ய இன்னும் ஒரு ஆண்டாவது தேவைப்படும். அடுத்த மாதம் தொடங்கும் காரீப் பருவ விவசாயப் பணிகளைத் தொடங்க, விவசாயிகளிடம் பணம் கிடையாது. எனவே, அனைத்து குறு - சிறு விவசாயிகளுக்கும் ஒரே தவணையாக ரூ.5,000 கொடுக்க வேண்டும். கிசான் கடன் அட்டை மூலமாகக் கொடுக்கப்படவுள்ள ரூ.2 லட்சம் கோடி கடன் மற்றும் வங்கிகள் மூலமாகக் கொடுக்கப்படும் குறுகிய காலக் கடன்களை வட்டியில்லாமல், குறைந்தது ஒரு ஆண்டுக்குக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் சாகுபடிக்குத் தேவைப்படும் ஆட்களுக்குக் கூலி கொடுப்பதற்கான வசதிகள் தற்போது கிடையாது. பயிர் சாகுபடிச் செலவைக் குறைப்பதற்கு வசதியாக இந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள அறிவிப்புகள் வெளியிட்டால் விவசாயிகளுக்குப் பெரும் பயனாக இருக்கும்.

- அ.நாராயணமூர்த்தி, முன்னாள் உறுப்பினா், விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையம், இந்திய அரசு, புதுடெல்லி.

தொடர்புக்கு: narayana64@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x