Last Updated : 05 Aug, 2015 10:00 AM

 

Published : 05 Aug 2015 10:00 AM
Last Updated : 05 Aug 2015 10:00 AM

பழமைவாத அறிவுஜீவிகள் எங்கே?

இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி (பயிற்சி) நிறுவனத்துக்கு (எஃப்.டி.ஐ.ஐ.), மூன்றாந்தரத் திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ள கஜேந்திர சவுகான் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது, நம்பகத்தன்மை கொண்ட வலதுசாரி அறிவுஜீவிகளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியிருக்கிறது.

இந்தியாவின் வெவ்வேறு கல்வி, கலாச்சார நிறுவனங்களுக்குத் தலைவர்களாக நியமிக்கத் தகுதியான ஆட்கள் கிடைக்காமல் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி திணறிக்கொண்டிருப்பது ஒன்றும் ரகசியம் அல்ல. சுமார் 680 பதவிகளுக்கு ஆட்களை நிரப்ப காவிப் பரிவாரங்களுக்கு அனுதாபிகளாக இருப்பவர்களை அடையாளம் காண, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒரு குழுவைக்கூட நியமித்திருப்பதாக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படித் திரட்டியும் 160 பேர்தான் தேறினார்களாம். அந்த 160 பேரில்கூட கஜேந்திர சவுகான், இந்திய வரலாற்று ஆய்வுப் பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்ட ஒய். சுதர்சன் ராவ், தேசியப் புத்தகக் கழகத்தின் தலைவரான பல்தேவ் சர்மா, மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுத் தலைவர் பஹ்லஜ் நிகலானி போன்றோர்தான் கிடைத்துள்ளனர்.

இவர்கள் நியமிக்கப்பட்டுள்ள அமைப்புகளின் வட்டாரத்தில் இவர்களுடைய பெயர்கள் பொருட்படுத்தப்படுவதில்லை. நாட்டின் முன்னணி அமைப்புகளைக் காவிமயப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தகுதி குறைவானவர்களை நியமித்து அவற்றைப் பலவீனப்படுத்துவதாகவும் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

இத்தகைய நடைமுறைகளால் மனம் வேதனைப்பட்ட வரலாற்றாய்வாளர் ராமச்சந்திர குஹா, ‘மூடப்படும் இந்திய மனது’என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். எழுத்தாளர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், திரைப்படப் படைப்பாளிகள் போன்றோரை இப்போதைய அரசு வெறுப்புடன் பார்க்கிறது என்ற சோகமான முடிவுக்கு வந்திருக்கிறார் குஹா.

குஹா அளவுக்கு வருத்தப்படவில்லை என்றாலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் போதிய அளவுக்கு அறிவுஜீவிகளைத் தயார் செய்யவில்லை என்று குற்றம்சொல்லியோ, அமர்த்திய சென்னுக்கு ஈடாக காவிப் படையில் ஒருவரை உருவாக்கிக் காட்டுங்கள் என்று சவால் விடுத்தோ சில விமர்சகர்கள் எழுதியுள்ளனர்.

மதத்தால் வரும் பழமைவாதம்

இந்திய வலதுசாரிகளிடையே இப்படியொரு நெருக்கடி ஏற்பட்டிருப்பதை விரிவாக ஆராய்ந்து கட்டுரை வரைந்திருப்பவர் ஒரு சுதந்திரமான சிந்தனையாளர். சில மாதங்களுக்கு முன்னால் ‘கேரவன்’ பத்திரிகையில் 18 பக்க அளவுக்கு அந்தக் கட்டுரையை விளக்கமாக எழுதியிருக்கிறார் ராமச்சந்திர குஹா. அறிவுஜீவி என்பவரும் சித்தாந்தவாதி என்பவரும் வேறுவேறு என்ற அடிப்படையிலிருந்து தொடங்குகிறார். அறிவுஜீவிகள் அறிவு வளர்ச்சிக்கு வித்திடுகிறார்கள். சித்தாந்தவாதிகள் தங்களுடைய அரசியல் அல்லது மத சித்தாந்தங்களைப் பரப்புரை செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள். நரேந்திர மோடியின் பரிவாரத்தில் இடம் பெற்றுள்ளவர்களில் அறிவுஜீவிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் பெரும்பாலானவர்கள் சித்தாந்தவாதிகள்தான் என்பது இதிலிருந்து விளங்கும்.

இந்துக்கள் அல்லாத சில கோடிப் பேர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக்கும் சித்தாந்தம் எப்போதுமே அறிவார்ந்த சமூகத்துக்கு நல்ல அடித்தளமாக இருக்க முடியாது. ஆயினும், இதுதான் இந்திய வலதுசாரிகள் - குறிப்பாக இந்துத்துவ வலதுசாரிகள் - நடந்துவந்த பாதையாக இதுநாள் வரையில் இருந்துவருகிறது. அறிவுஜீவிகள் என்ற வார்த்தையைக் கேட்டாலே அவர்களுக்கு ஏன் வேம்பாகக் கசக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு காரணம். நம்பகத்தன்மை கொண்ட இந்தியப் பழமைவாத மரபு ஒன்று உருவாக வேண்டுமானால், அது சங்கப் பரிவாரச் சூழலுக்கு வெளியேதான் உருவாக முடியும் என்கிறார் குஹா.

மதச்சார்பற்ற வலதுசாரிகள் குறித்த கனவு

மதச்சார்பற்ற வலதுசாரி பழமைவாத மரபுக்கு இந்தியாவில் சாத்தியம் இருக்கிறதா? குஹா மட்டுமல்ல, அமர்த்திய சென் கூட அப்படியொரு பிரிவினர் தேவை என்று கூறியிருக்கிறார். ஜெர்மனியில் உள்ள கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள், பிரிட்டனின் டோரிகளைப் போல - இது வெறும் நிறைவேறாத ஆசையாகவே இருக்குமா?

‘நாம்’ என்ற சொல் எவற்றையெல்லாம் குறிக்கிறதோ அவற்றின் இசைவான ஒருமைப்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதுதான் பழமைவாதத்தின் முக்கிய இயல்பு. இந்த ‘நாம்’ என்ற சிந்தனை எதையெல்லாம் வெறுத்து ஒதுக்குகிறதோ அதைப் பற்றிய குழப்பத்தை ஏற்படுத்தவே மேற்கண்ட நம்பிக்கை உதவுகிறது - பழமைவாதம் என்பது ஒரு சித்தாந்தமாகச் ‘செயல்பட’ இந்தக் குழப்பம்தான் காரணம். குஹாவும் சென்னும் விரும்பும் மதச்சார்பற்ற அந்தப் பழமைவாதம் வெறுத்து ஒதுக்க நினைப்பது வர்க்க மோதலைத்தான் - அங்கே சுரண்டுபவர்களும் சுரண்டப்படுபவர்களும் ‘தேசபக்தி’ என்ற இழையால் ஒன்றாகக் கட்டப்பட்டுள்ளனர். ‘நாம்’என்று சொல்லும் மதவாதப் பழமைவாதிகள் ஒதுக்கி வைத்தவர்களையும் அரவணைத்துச் செல்லும் தேசியவாத உயர்வு மனப்பான்மை கொண்டது அந்தப் பழமைவாதம்.

இந்திய அரசியல் சட்டம் ‘மதச்சார்பற்ற’ தன்மையை வலியுறுத்தினாலும், ‘பெரும்பான்மை இந்துத்துவ’ அரசுதான் செயலளவில் இருக்கிறது. அதிகாரவர்க்கம், நீதித் துறை, காவல் துறை, செய்தி ஊடகங்கள், பிற அமைப்புகள் போன்றவற்றில் சிறுபான்மையினத்தவருக்கு எதிரான பாரபட்ச உணர்வு இயல்பாகவே இருப்பதைப் பல்வேறு ஆய்வுகள் ஆவணபூர்வமாகவே திரட்டித்தந்துள்ளன. வர்க்கப் போராட்டத்தைவிட சாதியம்தான் இதன் மையமான முரண்.

சாதிய முப்பட்டகம்

இந்தக் கண்ணோட்டத்தை வைத்துப் பார்க்கும்போது, முழு மூச்சாகச் சாதி எதிர்ப்புச் செயல்பாடுகளிலும் சிந்தனைப் போக்கிலும் ஈடுபட்டவர்களை மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இந்தியாவின் இடதுசாரி - சுதந்திர சிந்தனைப்போக்கு படைத்திருக்கிறது. வர்க்க எதிர்ப்புணர்வை அடித்தளமாகக் கொண்ட ஐரோப்பிய இடதுசாரி மரபை இதனுடன் ஒப்புநோக்க வேண்டும். அல்லது, சமூகத்தில் எவ்வளவோ உள்முரண்பாடுகள் இருந்தாலும், சமூகத்தின் இசைவான ஒருமைப்பாடு எப்படி ஒரு பழமைவாதிக்கு அடிப்படை நம்பிக்கையாக இருக்கும் என்பதுடன் இதை வைத்துப் பார்க்க வேண்டும். இந்நேரத்தில் நம்முடைய நினைவுக்குவரும் குறிப்பிடத் தக்க அறிவுஜீவி பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர்தான். நம்முடைய ‘இன்றைய பார்வையில்’ அவர்கூட இடதுசாரி - சுதந்திரச் சிந்தனையாளராக இடம்பெற மாட்டார். சாதியமைப்பின் கண்கொண்டு பார்க்கும்போது, இந்தியப் பழமைவாத மரபு என்பது (இந்து என்பதற்கு எதிர்ப்பதமாக ‘இந்திய’ என்பதைக் கருத வேண்டும்) உருவாகாமல் போனதற்கான காரணம் தெளிவாகத் தெரிகிறது: ‘பழமைவாதிகள்’ என்றழைக்கப்படுபவர்கள் ஏற்கெனவே இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்ததால்தான் அவர்கள் புதிதாக உருவாவதற்கான அவசியம் எழவில்லை - ‘சுதந்திரச் சிந்தனையாளர்கள்’, ‘சமதர்மவாதிகள்’, ‘கம்யூனிஸ்ட்டுகள்’ என்ற பெயரில் அவர்கள் உலவிக் கொண்டிருந்தார்கள்.

இந்தியாவின் இடதுசாரி அறிவுஜீவிகள், சமூகரீதியில் பழமைவாதிகளாகவே இருந்தார்கள் என்று சொன்னால் மிகையாகாது (சாதி என்பதைச் சமூகத்தின் அடிப்படை யான பிரச்சினையாக அவர்கள் கருதாததால் அவர்களைப் பழமைவாதிகள் என்ற அர்த்தத்தில் குறிப்பிட வேண்டிய தாகிறது.) சாதியை அவர்கள் நியாயப்படுத்தவோ, சாதிப் பெருமிதத்தில் திளைக்கவோ இல்லைதான். வலதுசாரிகளில் கூட குறிப்பிடத் தக்க அளவில் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால், சமூக-அரசியல் பிரச்சினைகள் ஒவ்வொன்றையும் சாதிய அடிப்படையில் வைத்துப் பார்த்தாக வேண்டும் என்பதையோ, அப்படிப் பார்ப்பதால், அந்தப் பிரச்சினைகளுக்குச் சாதகமான விளைவு ஏற்படும் என்பதையோ அவர்கள் நம்பவில்லை. இத்தனைக்கும் சமூகம் முழுவதும் நீக்கமற சாதியம் ஊடுருவியிருப்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இருந்தாலும்கூட, அவர்கள் தங்கள் சிந்தனையை மாற்றிக்கொள்வதில்லை. இந்த வகையில், வர்க்கப் பிரச்சினையையும், முதலாளித்துவச் சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினை சுரண்டல்தான் என்பதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மேலை நாடுகளின் பழமைவாதிகளையே இந்திய இடதுசாரி-சுதந்திரச் சிந்தனையாளர் மரபு பிரதிபலிக்கிறது.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்திய இடதுசாரிகளும் சுதந்திரச் சிந்தனையாளர்களும் ஏற்கெனவே சமூகரீதியில் பழமைவாதிகளாக இருக்கும்போது, தனியே ஒரு மதச்சார்பற்ற, பழமைவாத மரபை உருவாக்கு வதற்கான இடம் எங்கே இருக்கிறது? ஆகவே, இந்தியாவின் வலதுசாரி அறிவுஜீவிகள் எங்கே என்ற கேள்வியில் அர்த்தமே இல்லை!

© ‘தி இந்து’ (ஆங்கிலம்) சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x