Published : 26 May 2020 07:11 AM
Last Updated : 26 May 2020 07:11 AM

நீர்நிலைகள் தூர்வாரலில் விவசாயிகளின் கவலைகள் போக்கப்பட வேண்டும்

குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்படவுள்ள நிலையில், காவிரிப் படுகை நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளை அவசர அவசரமாக முடுக்கிவிட்டிருக்கிறது தமிழக அரசு. மேட்டூர் அணை திறப்பதற்குக் குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்தப் பணிகள் எந்தக் கதியில் நடக்கும் என்ற விவசாயிகளின் கவலை முன்னுரிமையுடன் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

2011-ல் வழக்கத்தைக் காட்டிலும் ஒரு வாரம் முன்னதாக ஜூன் 6 அன்றே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அது குறுவை சாகுபடியை முன்பே தொடங்கவும், வழக்கமான பரப்பளவைக் காட்டிலும் 3.4 லட்சம் ஏக்கர் கூடுதலாகப் பயிரிடவும் வாய்ப்பாக அமைந்தது. அது ஒரு நல்ல முன்மாதிரி. அடுத்து வந்த ஆண்டுகளில் பருவமழை தவறிப்போனதன் காரணமாக, மேட்டூர் அணையை உரிய காலத்தில் திறக்க முடியாததால் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 2019-ல் தாமதமாக ஜூலையில்தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அது குறுவை சாகுபடியில் போதிய பயனை அளிக்கவில்லை.

காவிரிப் படுகையில் குறுவை சாகுபடிக்கு முன்னதாக நீர்நிலைகளைத் தூர்வாருவதானது, குறுவை சாகுபடிக்கு மட்டும் அல்ல; அடுத்து வரும் சம்பா பருவத்துக்கும் சேர்த்துப் பாசன வசதியை மேம்படுத்துவதாகும். தமிழகத்துக்கு உணவு அளிப்பதில் பெரும் பங்காற்றும் காவிரிப் படுகைக்கு வருஷத்தில் வேளாண்மைக்கு என்று அரசு செய்ய வேண்டிய முக்கியமான கடமையும் அதுதான். ஆனால், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகத் தூர்வாரும் பணிகளும் குடிமராமத்துப் பணிகளும் கேள்விக்குள்ளாகின்றன; முந்தைய இரண்டு ஆண்டுகளிலும் இப்பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. சென்ற ஆண்டில் செப்டம்பரில் நாளொன்றின் பாசனத் தேவை 2.2 டிஎம்சி தண்ணீர் என்றிருக்க, அணையிலிருந்து 19 டிஎம்சி நீர் கூடுதலாகவே திறந்துவிடப்பட்டும்கூட காவிரிப் படுகையின் கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் சென்றடையவில்லை. காரணம், கடந்த ஆண்டு ஜூலையில்தான் குடிமராமத்துப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. பணிகளை முடிப்பதற்கு முன்பே அணையில் நீர் திறந்துவிடப்பட்டுவிட்டது.

முன்கூட்டிய திட்டமிடலும் நிதி ஒதுக்கீடும் இல்லாத நிலை இப்படித் தொடர்கதையாவது நல்லதல்ல. தூர்வாரும் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு, விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது முக்கியம்; தூர்வாரும் பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டிய பகுதிகளை அடையாளம் காணவும், பணிகள் முறையாக நடக்கவும் இது அவசியம். கரோனா அச்சம் இதற்குத் தடையாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், இப்போது அதிகாரிகளே எல்லாவற்றையும் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள் என்ற குரல் விவசாயிகளிடமிருந்து எழுகிறது. ஆலோசனையில் விவசாயிகள் இணைக்கப்பட வேண்டும்; துரிதமாக இப்பணிகளை முடிப்பதற்குக் கூடுதல் படையைப் பணியில் இறக்க வேண்டும். இனி வரும் காலங்களிலேனும் தூர்வாரும் பணிகள் முன்கூட்டித் திட்டமிடப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x