Published : 25 May 2020 07:29 am

Updated : 25 May 2020 07:29 am

 

Published : 25 May 2020 07:29 AM
Last Updated : 25 May 2020 07:29 AM

புலம்பெயர்வு அல்ல... அலைக்கழிவு!

migration

செல்வ புவியரசன்

குஜராத்திலிருந்து சிறப்பு ரயில்கள் மூலமாக 13 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்படுவதை, சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய புலம்பெயர்வு என்று குறிப்பிட்டிருக்கிறார், அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி. அதிக எண்ணிக்கையில் சிறப்பு ரயில்கள் விட்ட பெருமை தங்களுக்கே என்று உரிமை கொண்டாடுவதே அவரது நோக்கம். குஜராத்திலிருந்து சராசரியாக 20 நிமிடங்களுக்கு ஒரு சிறப்பு ரயில் கிளம்புகிறது. ஆனால், புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில்களுக்கு அப்பாலும் தங்களது மாநிலங்களை நோக்கி நடந்துகொண்டே இருக்கிறார்கள்.


பிஹாரைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி ஜோதிகுமாரி, குர்கவானிலிருந்து உடல்நலம் சரியில்லாத தந்தையை மிதிவண்டியில் வைத்து, தொடர்ந்து 7 நாட்கள், ஏறக்குறைய 1,200 கிமீ மிதித்துச் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். இதிலுள்ள வலியையும் துயரத்தையும்விட, ஜோதிகுமாரியை இவான்கா டிரம்ப் பாராட்டிவிட்டார் என்பது நமக்குப் பெருமிதச் செய்தியாகத் தெரிகிறது. மஹாராஷ்டிரத்திலிருந்து தொடர்ந்து 7 நாட்கள் மிதிவண்டியில் பயணித்து, உத்தர பிரதேசத்தில் இருக்கும் தனது சொந்த ஊருக்குத் திரும்பிய இளைஞர் சுனில் மன அழுத்தத்தால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மிதிவண்டியில் அவர் ஊருக்குத் திரும்பியபோது அவரிடம் ஒரு ரூபாய்கூட இல்லை.

தொடரும் விபத்துகள்

சென்னையிலிருந்து 2,000 கிமீ தொலைவில் இருக்கும் வாராணசிக்கு நடந்து சென்ற மூன்று உத்தர பிரதேச இளைஞர்களில் ஒருவர், மாவட்ட எல்லையை நெருங்கும்போது மயங்கி விழுந்து இறந்தார். இறுதிச் சடங்குகளுக்குக்கூட அவரது குடும்பத்தினரிடம் பணமில்லை. அக்னி நட்சத்திர வெயிலில் கையில் பணம் இல்லாமல், உணவுக்கும் வழியில்லாமல் சொந்த ஊருக்குத் திரும்பும் தொழிலாளர்கள் எந்த நேரத்திலும் மயங்கி விழலாம். இறந்தும்போகலாம்.

ஆனால், அவர்கள் ஊருக்குத் திரும்பிப் போய்விட்டால், தொழிற்சாலைகளை இயக்க முடியாதே என்ற கவலையில், அவர்கள் புறப்படுவதைத் தடுப்பதற்கே இந்தியா முழுவதும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. சிறப்பு ரயில்கள் இயக்கம் தொடங்கியிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு சார்பில் சொல்லப்படும் தொழிலாளர்கள் எண்ணிக்கை - உண்மையான தொழிலாளர்கள் எண்ணிக்கை - இயக்கப்படும் ரயில்கள் எண்ணிக்கை மூன்றையும் ஒப்பிட்டால் ரயில்கள் எண்ணிக்கை போதவே போதாது.

தேசிய நெடுஞ்சாலைகளிலும் ரயில் பாதைகளிலும் நடந்துசெல்லும் தொழிலாளர்கள், தொடர்ந்து விபத்துகளுக்கும் ஆளாகிவருகிறார்கள். ஔரங்காபாத் அருகே தண்டவாளத்தில் படுத்துத் தூங்கிய புலம்பெயர் தொழிலாளர்களில் 16 பேர் ரயில் மோதி இறந்தனர். உத்தர பிரதேசத்தில் நடந்த மற்றொரு விபத்தில் ராஜஸ்தானிலிருந்து ட்ரக் ஒன்றில் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிக்கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது, டெல்லியிலிருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களின் ட்ரக் மோதி 24 பேர் பலியாயினர். 35 பேருக்கும் மேல் படுகாயம். வழக்கமான விபத்துகள் என்று இவற்றைக் கடந்துபோய்விட முடியாது.

சரக்கு வாகனங்களில் சொந்த ஊருக்கு அழைத்துப்போவதாய்ச் சொல்லி, அப்பாவித் தொழிலாளர்களை ஏமாற்றும் சம்பவங்களும் ஆங்காங்கே நடக்கின்றன. பெங்களூருவிலிருந்து பிஹார் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 56 தொழிலாளர்கள் ஒரு ட்ரக்கை ஏற்பாடு செய்துகொண்டு தங்களது வீடுகளுக்குத் திரும்ப முயன்றனர். ஆந்திர பிரதேச எல்லையைக் கடக்க முயன்றபோது தடுத்து நிறுத்திய காவல் துறையினர் அவர்களைப் பெங்களூருவுக்கே திருப்பியனுப்பிவிட்டனர்.

ஏற்கெனவே பசி மயக்கத்தில் சுருண்டு கிடந்த அவர்களில் சிலரைக் காவல் துறையினர் கடுமையாகவும் தாக்கியுள்ளனர். கையில் இருந்த இரண்டாயிரம், மூவாயிரத்தைச் சேர்த்து ட்ரக் டிரைவருக்குக் கொடுத்த ரூ.1.36 லட்சமும் ஏமாற்றப்பட்டுவிட்டது. நடந்தாவது எங்கள் மாநிலத்துக்குப் போய்விடுகிறோம், எங்களை விட்டுவிடுங்கள் என்ற அவர்களின் கோரிக்கையைக் காவல் துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை. சிறப்பு ரயில்களுக்கு விண்ணப்பித்துக் காத்திருப்பவர்கள், தங்களுக்கு எப்போது அந்த வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து எந்த விவரமும் பெற முடியாத நிலையும் தொடர்கிறது.

துயரங்கள் முடிவதில்லை

சொந்த ஊருக்குத் திரும்பிச்செல்லும் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தல் என்னும் மற்றொரு கட்டத்தையும் கடந்தாக வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, பிஹாருக்குத் திரும்புகிற புலம்பெயர் தொழிலாளர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதைத் தொடர்ந்து 7 நாட்கள் சுயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பிஹாரில் உள்ள 7,840 மையங்களில் ஏறக்குறைய 6.4 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், தனிமைப்படுத்தும் மையங்களின் பராமரிப்பு படுமோசம். பெரும்பாலான மையங்களில் தண்ணீர் வசதியேகூட சரியாக இல்லை. கயாவில் உள்ள ஒரு முகாமில் 240 பேர் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டே இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் காலைக்கடன்களுக்காக சுவர் ஏறிக் குதித்துவருகிறார்கள் என்கின்றன செய்திகள்.

பக்ஸார், கத்தியவார் மாவட்டங்களைச் சேர்ந்த மையங்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்கள், தங்களுக்கு வழங்கப்படும் உணவு படுமோசமாக இருக்கிறது என்று போராடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் என்பதால், கிராமங்கள் வரைக்கும் தனிமைப்படுத்தும் மையங்களைத் தொடங்கியிருப்பதாக பிஹார் மாநில அரசு பிரச்சாரம் செய்துவருகிறது. அந்த மையங்களுக்குள் ஊடகங்கள் நுழைந்துவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களில் இதுவரை 35 லட்சம் பேர் சிறப்பு ரயில்கள் மூலமாகவும், 40 லட்சம் பேர் பேருந்து மூலமாகவும் திரும்பியிருக்கிறார்கள் என்கிறது மத்திய அரசின் அறிவிப்பு. அதே மத்திய அரசு இந்தியாவில் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இருப்பார்கள் என்றும் கணிக்கிறது. அரசின் கணக்குப்படியே பார்த்தாலும் நான்கில் ஒரு பங்கினரைக்கூட சிறப்பு ரயில்களும் பேருந்துகளும் சொந்த ஊருக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கவில்லை. நெடுஞ்சாலைகளின் வழியே தொடரும் நடைப்பயணங்கள் பிரிவினைக் காலத்தையே நினைவுபடுத்துகின்றன. கூடவே, ‘இவர்களில் ஒருவர் நம் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தால் இப்படி இருப்போமா?’ என்ற கேள்வியையும் குற்றவுணர்வையும் ஏற்படுத்துகின்றன. நமக்காகத்தானே உழைத்தார்கள்… அவர்கள் நம் குடும்பத்தினர் இல்லையா?

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.inசெல்வ


புலம்பெயர்வுMigrationஅலைக்கழிவுகுஜராத்தொடரும் விபத்துகள்துயரங்கள்சிறப்பு ரயில்கள்சென்னைLockdownCorona virus

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x