Published : 27 Aug 2015 10:29 AM
Last Updated : 27 Aug 2015 10:29 AM

முழுமை பெரும் கல்வி

தங்கர் பச்சானின் ‘சொல்லத் தோணுது’ கட்டுரை படித்தேன். அரசுப் பள்ளிகளின் நிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்ற தங்கர் பச்சானின் கருத்து ஏற்புடையதே. எனக்குத் தெரிந்த ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர், நாள்தோறும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள தனியார் பள்ளியில் விட்டுவிட்டு, அரசுப் பள்ளிக்குப் பணியாற்றச் செல்வது வழக்கம். அவர் பணிபுரியும் அரசுப் பள்ளியில் ஏறத்தாழ 1,000-க்கும் மேற்பட்ட பிள்ளைகள் படிக்கின்றனர்.

இருப்பினும், அப்பள்ளியின் தலைமை ஆசிரியரே, தனியார் பள்ளியில் தம் பிள்ளைகளைச் சேர்த்திருப்பது, அரசுப் பள்ளியின்மீது அவருக்கு இருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது.

அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் சலுகைகளுக்கும் ஊதிய உயர்வுக்கும் போராடுகின்றனரே தவிர, பள்ளியின் வளர்சிக்கும் தரஉயர்வுக்கும் போராடுவதில்லை. இவ்வளவு ஏன், பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் இன்னும் முறையான கழிப்பிட வசதிகூட இல்லை. அரசுப் பள்ளியில் படித்து ஆறாம் வகுப்பு செல்லும் மாணவனுக்கு தமிழையே எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியாத நிலையில்தான் ஏராளமான மாணவர்கள் உள்ளனர்.

அரசு ஊழியர்கள் அனைவரும் தமது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற தங்கர் பச்சானின் கூற்று ஏற்கப்பட வேண்டியதே. என்றாலும், அப்பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தாத வரை, அரசு ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்கள்கூட அரசுப் பள்ளிகளுக்கு முன்னுரிமை தரமாட்டார்கள் என்பதே நிதர்சனம். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் தரமான மற்றும் இலவசக் கல்வி என்ற கூற்று முழுமைபெறும்.

- அ.சிவராமன்,மேட்டூர் அணை.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x