Published : 22 May 2020 07:38 AM
Last Updated : 22 May 2020 07:38 AM

மதுவை எப்படித் தமிழகம் எதிர்கொள்வது?

சி.ஆர்.கேசவன்/ கே.ஆர்.விக்னேஷ் கார்த்திக்

தமிழகத்தில் டாஸ்மாக் (TASMAC) மதுக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருந்த ஆணைக்கு, உச்ச நீதிமன்றத்தில் பெற்றுள்ள தடையுத்தரவைத் தொடர்ந்து, தமிழக அரசு மதுக் கடைகளை மீண்டும் திறந்திருக்கிறது. தமிழகத்துக்கும் மதுவுக்கும் இடையேயுள்ள உறவு பல ஏற்ற இறக்கங்களைத் தாண்டி எப்படிப் பயணித்திருக்கிறது என்பதைப் பின்னோக்கி நினைவுகூர ஒரு பின்புலமாக இந்தத் தருணம் அமைந்துள்ளது.

சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் ‘மெட்ராஸ் அப்காரி சட்டம்- 1886’, உள்ளூரில் மது தயாரிப்பதைத் தடைசெய்து, மெட்ராஸ் மாகாணத்துக்குக் கொண்டுவரப்பட்ட மதுவின் மீது கலால் வரியை விதித்தது. இந்தியாவிலேயே முதல் முறையாக பூரண மதுவிலக்கை சேலம் மாவட்டத்தில் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசு 1937-ல் அமல்படுத்தியது. அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, பொருட்கள் மீதான விற்பனை வரி வாயிலாக ஈடுசெய்யப்பட்டது. 1948-ல் மதுவிலக்கு சென்னை மாகாணம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சியில் தமிழகத்தின் சமூக-பொருளாதார அடித்தளம் வலுவாகக் கட்டியமைக்கப்பட்டபோதிலும், தமிழகம் மதுவிலக்கை உறுதியுடன் கடைப்பிடித்தது. அடுத்து, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் அண்ணாவின் ஆட்சியிலும் இது நீடித்தது. முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற பின் 1971-ல் வருவாய்ப் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி, திமுக அரசு மதுவிலக்கை ரத்துசெய்தது. ஆயினும், மீண்டும் 1974-ல் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார் முதல்வர் கருணாநிதி.

தமிழ்நாட்டில் 1970-களின் இறுதியில், கள்ளச்சாராயம் காரணமாகக் கொத்துக்கொத்தாக மக்கள் இறந்தனர். இதையே காரணமாக்கி, 1981-ல் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு மதுவிலக்கை ரத்துசெய்தது. மேலும், 1983-ல் ‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழக’த்தை (TASMAC) நிறுவியது. பின்னர், 2003-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டுச் சாராயத்தின் (IMFL) மொத்த, சில்லறை விற்பனையைத் தமிழக அரசு முழுமையாகத் தானே மேற்கொள்ளலானது.

மது மீது போடப்படும் கலால், விற்பனை வரிகளிலிருந்து அரசுக்குக் கிடைக்கும் வருவாய், மக்களுக்கான சமூக நலத் திட்டங்களுக்குச் செலவிடப்படுகிறது என்பதே தமிழகத்தின் மதுக் கொள்கைக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் பெரிய வாதம். தமிழகம் தன்னுடைய வருவாய்க்காக எந்த அளவுக்கு மதுபானங்களைச் சார்ந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள அதற்கு எங்கிருந்தெல்லாம் வருவாய் வருகிறது என்று ஆராய்ந்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

வருவாயும் சேதாரமும்

தமிழ்நாடு மொத்த வருவாயில் 69% தமிழகத்தின் சொந்த வரி வருவாயிலிருந்தே பெறுகிறது. இதில் மதுவிலிருந்து கிடைக்கும் வரி வருவாய், மாநிலத்தின் சொந்த வருவாயில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகும். 2011-2017 காலத்தில் தமிழக வருவாயானது சராசரியாக 5% குறைந்துள்ளதோடு, புதிதாகக் கொண்டுவரப்பட்ட ‘ஜிஎஸ்டி’ வரியமைப்பானது மாநில அரசின் நிதி சுயாட்சியைக் குலைத்திருப்பதால், மாநிலத்துக்குச் சொந்தமான நிதியாதாரங்களிலிருந்து கூடுதல் நிதியைத் திரட்டுவதற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

கேரளம் மற்றும் ஆந்திர பிரதேசத்தைப் போலவே தமிழகமும் வருவாய்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மாநிலம் என்பதால், ஏனைய தென்னக மாநிலங்களின் பாதையையே அதுவும் தேர்ந்தெடுக்கிறது எனலாம். தென் மாநிலங்களின் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 15% இன்று மது மீது போடப்படும் கலால் வரியிலிருந்தே கிடைக்கிறது.

தமிழகத்தின் இந்த மதுக் கொள்கையால் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் இறப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன; அரசுக்கு வருமானம் வருகிறது என்றாலும், ‘டாஸ்மாக்’ கடைகள் வழி அரசே மது விற்பனையைப் பரவலாக்கிய பின், மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அரசின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன. 2017 நிலவரப்படி தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 47.4% ஆண்களும், நகர்ப்புறங்களில் 46% ஆண்களும் மது அருந்துபவர்களாக இருந்தனர். இது அவர்களுடைய உடல்நலத்தை நாசப்படுத்துவதோடு, குற்றங்கள், குடும்ப வன்முறைகள், உற்பத்தித்திறன் குறைவு என்று தொடர் அவலங்களைப் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது.

ஆக, வருவாயும் முழுமையாகப் பறிபோகாமல், அதே சமயம் வருவாய்க்காக மதுவின் ஆதிக்கத்தில் மாநிலத்தைத் தள்ளிடாமல் சிந்திக்கும் ஒரு தீர்வு இன்று தமிழகத்துக்கு அவசியம். பூரண மதுவிலக்கை ஆதரிக்கும் மரபியர்களாகவோ, தனிநபர் சுதந்திரத்துக்காக முழுக்க இந்தப் போக்கை ஆதரிக்கும் தாராளர்களாகவோ சிந்திப்பதைக் காட்டிலும், இரு துருவ நிலைப்பாடுகளுக்கு மத்தியில் சிந்திப்பதே காலத் தேவையாகும்.

இரு அதீதப் போக்குகளுக்கு நடுவே

தமிழக அரசு வரையறுக்கப்பட்ட விற்பனை இலக்குகளுக்குப் பதிலாக, மதுவையும் வாடிக்கையாளர்களையும் வேறுபடுத்திப் பார்த்து வெவ்வேறு நிலைகளில் வரி நிர்ணயித்து வருவாய் திரட்டுவதற்கான வழியைத் தேட வேண்டும். மதுக் கடைகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்கும் அதே நேரத்தில், ‘எலைட்’ மதுக் கடைகளில் விற்கப்படும் மது விலையைக் கணிசமாக உயர்த்த வேண்டும். இணைய விற்பனையோடு சேர்ந்து, ஏனைய மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் மது ஏற்றுமதிசெய்யும் முயற்சிகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். மதுவிலிருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை நிர்ணயித்து, அதை மது விளைவிக்கும் கேடுகளைப் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கும், அவர்கள் சுயமாகவே மது நுகர்வை மறுக்கும் மனப்பான்மையை உண்டாக்குவதற்கும் அந்தத் தொகையை ஒதுக்கிட வேண்டும். மதுவிலிருந்து கிடைக்கும் வருவாயைச் சார்ந்திருப்பதைவிட, தமிழ்நாடு மற்ற மாநிலங்களின் ஆதரவைத் திரட்டி, மத்திய அரசிடம் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதிச் சுதந்திரம் கேட்டுப் பெற வேண்டும். நீண்ட காலப் பார்வையில் பார்த்தால், இதுவே மாநில சுயாட்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்த ஒரு மாநிலம் விவேகத்தோடு எடுக்க வேண்டிய உகந்த நடவடிக்கையாக இருக்கும்.

- சி.ஆர்.கேசவன், ராஜாஜியின் பேரன்; தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையின் அறங்காவலர்.

கே.ஆர்.விக்னேஷ் கார்த்திக், லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஆய்வு மாணவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x