Published : 21 May 2020 12:17 PM
Last Updated : 21 May 2020 12:17 PM

சமத்துவமே வளமான நாடுகளை உருவாக்கும்: தாமஸ் பிக்கெட்டி நேர்காணல்

நாராயண் லக்ஷ்மண்

கரோனா பெருந்தொற்று தொடர்பில் பெரும் எண்ணிக்கையில் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் இறந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள். அதன் இன்னொரு விளைவாக, பெருந்தொகையில் மக்களின் இடப்பெயர்வும், வறுமையும் தோன்றியுள்ளது. இந்நிலையில் பொருளாதார ரீதியான சமத்துவமின்மையை இந்திய அரசு சரிசெய்வதற்கான நேரம் இது என்கிறார் பொருளாதாரப் பேராசிரியரான தாமஸ் பிக்கெட்டி.

இது தொடர்பாக அவர் நாராயண் லக்ஷ்மணுக்கு அளித்த நேர்காணலின் சுருக்கமான வடிவம் இது...

உங்களது சமீபத்திய நூலான 'கேபிடல் அண்ட் ஐடியாலஜி'-ல் பங்கேற்பு சோஸலிசத்தை வலியுறுத்துகிறீர்கள். அதைப் பற்றி கொஞ்சம் பேச முடியுமா?

பொருளாதாரத்தில் பங்கேற்கும் அதிகாரம் எல்லாருக்கும் இருக்க வேண்டுமென்பதைத்தான் பங்கேற்பு சோஸலிசம் என்கிறேன். தனியார் உடைமைகளை வாங்கும் நிலை இருக்கும். பரம்பரையாக ஒருவருக்கு சொத்து கைமாறும்போது அதற்கு அவர் குறிப்பிட்ட தொகை வரி கட்ட வேண்டியிருக்கும். ஆனால் சமூகத்தில் ஏழை மக்களிடம் வசூலிக்கப்படும் வரிகள் குறைவானதாக இருக்கும். எல்லாருக்கும் சம வாய்ப்பு என்கிறோம். ஆனால், ஐம்பது சதவீதம் மக்கள் பரம்பரையாக எந்தச் சொத்துக்கும் உடைமையாளராகும் வாய்ப்பே இல்லாதவர்கள். ஆனால், வேறு சிலரோ, மில்லியன்களிலும் கோடிகளிலும் சொத்துகளை பிதுரார்ஜிதமாகப் பெறுகின்றனர்.

பங்கேற்பு சோஸலிசத்தின் இன்னொரு அம்சமாக, நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அதன் நிர்வாகப் பணிகளில் பங்கேற்க வேண்டும். அவர்களுக்கு மூலதனத்தில் பங்கு இருக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த முறை ஏற்கெனவே ஜெர்மனியிலும் சுவீடனிலும் நடைமுறையில் உள்ளது. தொழிலாளர் பிரதிநிதிகளுக்கு நிர்வாகக் குழுவில் 50 சதவீதம் வாக்களிக்கும் உரிமைகள் உண்டு. முதலில் அந்த நாட்டு நிறுவனங்களிலுள்ள பங்குதாரர்கள் இந்த நடைமுறையை விரும்பவில்லை. ஆனால் 70 ஆண்டுகளான பின்னர், அதை யாரும் கேள்வி கேட்கவில்லை. நிறுவனங்களின் நீண்ட கால நலன் அடிப்படையில் தொழிலாளர்களின் நிர்வாக ரீதியான பங்களிப்பும் இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

வரலாற்று ரீதியாக, பொருளாதார வளம் என்பது கல்வி சார்ந்த முதலீட்டிலிருந்தும் சமத்துவமின்மையைக் குறைப்பதிலிருந்துமே வருகிறது. இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் சமத்துவம், கல்வி வாயிலாகவே வளமான நாடுகளாகின. சமத்துவமின்மையை கூடுதலாகப் பெருக்கிக் கொண்டே போனதால் அல்ல. தனியார் உடைமை சார்ந்த, போட்டிச் சந்தை சார்ந்த நல்ல அம்சங்களைப் பயன்படுத்திக் கொண்டு மேலும் சமத்துவமும் சம வளர்ச்சியும் கொண்ட சமூகங்களை உருவாக்குவதே பங்கேற்பு சோஸலிசத்தின் நோக்கமாகும்.

இந்தியாவில் வெவ்வேறு சமூகக் குழுக்களிடையே அதிகாரச் சமநிலை உள்ளதா?

சமூக ரீதியான மிகப் பெரிய முதலீட்டு நடவடிக்கைகளை எடுப்பதிலும் சமத்துவமின்மையைக் குறைப்பதிலும் இந்தியாவின் சில மாநிலங்களில் மிகப் பெரிய முயற்சிகள் நடைபெற்றுள்ளன. கேரள மாநிலம் அதற்கு உதாரணம்.

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கும் பிற சமூகங்களுக்கும் இடையிலான சமத்துவமின்மை இன்னமும் அதிகமாக இருப்பினும் சுதந்திரத்துக்குப் பின்னர் எடுக்கப்பட்ட முயற்சிகளால் குறைந்துள்ளது. அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கும் பிற சமூகத்தினருக்கும் இருக்கும் இடைவெளியை விடக் குறைவு.

இட ஒதுக்கீடு போன்ற திட்டங்களுக்கு செலவழிக்கும் முயற்சிகள் அளவுக்கு நிலச் சீர்திருத்தம், உடைமைகள் மறு விநியோகம், அடிப்படைக் கல்வியில் முதலீடு, ஆரோக்கிய கட்டமைப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்தவில்லை. இந்தியாவின் வளங்களையும் வரி வருவாயையும் இந்திய ஆளும் வர்க்கத்தினர் கல்விக்கும், ஆரோக்கியக் கட்டமைப்புக்கும் செலவிடவேயில்லை.

சீனாவின் அரசியல் அமைப்பு சார்ந்து எத்தனையோ வரையறைகள் இருந்தாலும் அந்த நாட்டின் வளர்ச்சி, வளத்துக்கு அவர்கள் ஆரோக்கியம், அடிப்படைக் கல்விக்கு கடந்த முப்பது, நாற்பது வருடங்களாக செலுத்தும் கவனமும் செலவழிக்கும் நிதியும்தான் காரணம்.

சுவீடன் நாட்டையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஐரோப்பாவிலும் உலக அளவிலும் சமத்துவமின்மை பட்டவர்த்தனமாக நிலவிய தேசம் அது. 1911-ம் ஆண்டு வரை ஒருவருக்கு எவ்வளவு சொத்து உண்டோ அந்த அடிப்படையில் தான் அவருக்கு ஓட்டுரிமையும் என்ற நிலை இருந்தது. சுவீடனில் உள்ள பல நகராட்சிகளில் ஐம்பது சதவீதத்துக்கு மேல் ஓட்டுரிமையை வைத்திருந்த தனிப்பெரும் பணக்காரர்கள் உண்டு.

தொழிலாளர் அமைப்புகள், தொழிலாளர்கள் மற்றும் சோசியல் டெமாக்ரடிக் கட்சி போன்றவை சேர்ந்து திரண்டு 1922-ல் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தனர். வருவாயையும் சொத்தையும் ஏய்க்காமல் பதிவு செய்யும் முறையை அரசு கொண்டுவந்தது. முற்போக்கான வரி முறையைக் கொண்டுவந்தனர். வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஆரோக்கியத்துக்கும் கல்விக்குமான பொது அமைப்பை உருவாக்கினார்கள்.

ஒவ்வொரு நாடும் தனக்கேயுரிய மக்கள் இயக்கங்களையும் வரலாற்றையும் கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அடித்தட்டு மக்கள் இயக்கங்களும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கட்சிகளும் சோஸலிசக் கட்சிகளும் உள்ளன. எப்போதும் எந்த மாற்றமும் நடைபெறலாம். பெருந்தொற்று போன்ற இந்த நெருக்கடியும் பெரிய மாற்றம் நடைபெறுவதற்கான வாய்ப்பைத் தருவதுதான்.

தி இந்து

தமிழில் : ஷங்கர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x