Published : 19 May 2020 12:30 PM
Last Updated : 19 May 2020 12:30 PM

கரோனா தடுப்பில் இந்தியாவின் முன்னுதாரணம்- பீட்டர் ஹாட்டிஸ் பேட்டி

நாராயண் லக்ஷ்மண்

இந்தியாவில் வெப்பத் தாக்கம் அதிகரிக்கப் போகும் மாதங்களில் கரோனாவின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த வைரஸியல் நிபுணரான பீட்டர் ஹாடெஸ் எச்சரிக்கிறார். ஏழை மக்கள் நெருங்கி வசிக்கும் நகர்ப்புறப் பகுதிகளைச் சுட்டிக்காட்டி தனது கவலையை வெளிப்படுத்துகிறார். நேஷனல் ஸ்கூல் ஆப் டிராபிக்கல் மெடிசன் கல்வியகத்தின் தலைவரும் பேராசிரியருமான பீட்டர் ஹாட்டிஸ், அமெரிக்காவும், இந்தியாவும் கரோனா வைரஸோடு போராடும் நிலைகளை ஒப்பிட்டு இந்தியாவின் செயல்பாடுகளைப் பாராட்டுகிறார்.

அமெரிக்காவில் கோவிட் - 19 நோய்த் தொற்று எதிர்பார்த்ததை விட அதிகமான எண்ணிக்கையில் உள்ளதே?

கவலைக்குரிய விஷயமாகத்தான் உள்ளது. மார்ச் மாதம் நடுப்பகுதி வரை இங்கே தேசிய நெருக்கடி நிலை அறிவிக்கப்படவில்லை. பிப்ரவரி மாதம் தொடக்கத்திலேயே இங்கே கோவிட் -19 தொற்றிவிட்டது. சமூக இடைவெளி நடைமுறைகள் ஆரம்பிப்பதற்கு ஆறு வாரங்கள் முன்னாலேயே தொற்று தொடங்கிவிட்டது.

ரெடெசிவியர் மருந்து குறித்த நம்பிக்கையான தகவல்களைக் கேள்விப்படுகிறோம்?

இந்தியா போல, பெரும் ஜனத்தொகையில் அபாயத்தை எதிர்நோக்கும் மக்களுக்கு தடுப்பு மருந்துகள் பெரிய தீர்வை வழங்குகின்றன. ஆனால், தடுப்பு மருந்தைப் பொறுத்தவரை நினைத்த அளவு சாதிப்பதற்கு, தடுப்பு மருந்தைச் செலுத்தும் நபர்களின் உடல் நோயின் தடயங்களே இல்லாமல் தூயதாக இருக்க வேண்டும். அப்போதுதான் தடுப்பு மருந்து சிறப்பாக வேலை செய்யும். அதைச் சோதித்துப் பார்த்து முடிவுகள் காண கூடுதல் அவகாசம் பிடிக்கும். தடுப்பு மருந்தைத் தவிரவும் வேறு சில மருந்துகள், சிகிச்சைகள் நம்பிக்கையைக் கொடுக்கின்றன.

இந்தியாவைப் பொருத்தவரை, தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் தேசிய அளவிலான ஊரடங்கை அரசு நீட்டித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அமெரிக்காவை ஒப்பிடும்போது, மரணமடைபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் உள்ள கரோனா வைரஸின் தன்மை வேறுமாதிரியானது என்று சொல்லலாமா?

இருக்கலாம். ஆனால், சமூக இடைவெளி நடவடிக்கைகளை இந்தியா சீக்கிரமே அமல்படுத்தியதே இதற்குக் காரணம் என்று நான் சொல்வேன். அதனாலேயே இந்தியாவில் மோசமான சேதாரம் தடுக்கப்பட்டதென்று நான் எண்ணுகிறேன்.

ஆனால், இத்துடன் நாம் திருப்தி கொண்டுவிட முடியாது. இந்தியாவில் உஷ்ணம் அதிகரிக்கும் மாதங்கள் வரவுள்ளன. ஏழை மக்கள் நெருங்கி வசிக்கும் நகர்ப்புறங்களில் மும்பை போன்ற நகரங்களில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நிலைமை மோசமாகுமோ என்ற கவலை எனக்கு உள்ளது.

கோவிட் -19 நோய்த்தொற்று உறுதியான குழந்தைகள் நியூயார்க்கில் அதிகமாகப் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இது சீனாவில் இல்லையே?

சீனாவைப் பொறுத்தவரை குழந்தைகளை கரோனா நோய்த் தொற்று அதிகம் பாதிக்கவில்லை. 10 சதவீதம் குழந்தைகளே விதிவிலக்கு. இங்கிலாந்திலும் நியூயார்க்கிலும் இந்தப் புதிய சூழ்நிலைகளைச் சந்திக்கிறோம். ரத்த நாளங்களில் எரிச்சல் ஏற்படும் கவாசாகி வியாதியைப் போன்ற அறிகுறி இது. இதுபோன்று இப்போது நியூயார்க்கில் நூறு குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் கோவிட் -19 பாதிக்கப்பட்ட பெரியவர்களிடமும் ரத்தம் உறைதல் தொடர்பிலான குறைபாடுகள் ஏற்படுவதைப் பார்க்கிறோம். அதைப் புரிந்துகொள்ள ஆராய்ந்து வருகிறோம். ரத்தம் உறைவதால், அடைப்பு ஏற்பட்டு வாதம் ஏற்படுகிறது. இதயத் தமனிகளிலும் சிக்கல் ஏற்பட்டு மாரடைப்புத் தாக்குதலும் ஏற்படுகிறது.

கோவிட் -19 நோய்த் தொற்று நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவிடமிருந்து உலகம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

இந்தியாவிலிருந்து கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளன. இந்தியாவிலிருக்கும் சில பல்கலைக்கழகங்களின் தரம் எனக்குத் தொடர்ந்து வியப்பளிக்கிறது. தடுப்பு மருந்துகள் தொடர்பில் புதிய ஆய்வுகளுக்கான திறன்கள் அங்குள்ளன. ஒவ்வொரு கட்டத்திலும் வறுமை சூழ்ந்த நிலையிலும் ஒரு தேசம் பெருந்தொற்று நோய் ஒன்றை எதிர்கொள்வதற்கான தயாரிப்பில் எப்படி ஈடுபட வேண்டும் என்பதற்கு மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

தி இந்து

தமிழில் : ஷங்கர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x