Published : 16 May 2020 11:27 AM
Last Updated : 16 May 2020 11:27 AM

மது வருவாய் தவிர்க்க முடியாததா?

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தொலைபேசி வழியாக, சமீபத்தில் தமிழகமெங்கும் 30 லட்சம் மக்களிடம் பேசி எடுத்த கருத்துக் கணிப்பில் 89 சதவீதம் பேர், மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மதுக்கடைகளைத் திறக்க முடிவெடுத்த மகாராஷ்டிர அரசும், மாநிலத்தில் சில இடங்களில் எழுந்த எதிர்ப்பையொட்டி தனது முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது. இதுபோன்ற போராட்டங்கள் மற்ற பிற மாநிலங்களிலும் நடைபெறுவதைப் பார்க்க முடிகிறது. மதுக்கடைகளில் கூடும் மக்கள் திரள் சார்ந்தும், கோவிட் -19 பரவல் தொடர்பான அச்சம்தான் இந்த எதிர்ப்புக்கு உடனடிக் காரணம். ஊரடங்கு காலத்தில் மது விற்பனையை அனுமதிப்பது பெரும்பான்மை மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை என்பது கண்கூடு. ஆனால், பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்யும் மாநில அரசுகள் ஏன், மதுக்கடைகளைத் திறக்கின்றன? இதற்கான பதில், 2017- ம் ஆண்டு, ஜூலை மாதம் ஒன்றாம் தேதி நள்ளிரவில் எடுக்கப்பட்ட ஒற்றை முடிவில் உள்ளது.

காலியாகும் கஜானா

நிதி நிலையில் மோசமாக இருக்கும் மாநிலங்கள், கோவிட் - 19க்கு எதிராகப் போரிடும் நடவடிக்கைகளுக்காக மதுக்கடைகளைத் திறப்பது போன்ற முடிவுகளை வேறுவழியில்லாமல் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. நிதி வளங்கள் இல்லாத நிலையில், மற்ற வகைகளில் பணம் திரட்டுவதற்கு முயலாமல் மக்களின் மதுப் பழக்கத்தைப் பயன்படுத்தி சம்பாதிக்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி நள்ளிரவில் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவைகள் வரி) வரியை அறிமுகப்படுத்தும்போது, இந்தியாவின் பொருளாதார ஒருங்கிணைப்புக்காக, கூட்டுறவு அடிப்படையிலான கூட்டாட்சியைக் காப்பாற்றும் பொருட்டு, முத்துக்களைக் கோத்து ஒரு மாலையை உருவாக்குவது போல அனைத்து மாநிலங்களையும் இணைப்பதாகக் கூறினார். அந்த முத்து மாலையில் உள்ள அத்தனை மாநிலங்களும் மத்திய அரசின் கழுத்திலேயே தொங்கிக் கொண்டிருக்கும் என்பதை அவர் குறிப்பிடவேயில்லை. மாநில அளிலான உள்ளூர் வரிகள் வசூலிப்பது சார்ந்து வளங்களைப் பெருக்கும் மாநிலங்களின் அதிகாரங்கள் ஜிஎஸ்டி வரியால் பறிபோனது. மாநிலங்கள் தங்கள் பெரும்பான்மை நிதித் தேவைகளுக்கு மத்திய அரசை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டது.

பெரும்பாலான மாநிலங்கள் தாங்களே சொந்தமாகச் சில வரிகளைப் போட்டு வசூலித்தும், மத்திய அரசின் வரிகளில் ஒரு பகுதியைப் பெற்றும் தங்கள் நிதியாதாரங்களைப் பெருக்குகின்றன. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், ஹரியாணா மற்றும் கேரளா போன்ற பணக்கார மாநிலங்கள் தங்களது மாநில எல்லைக்குள்ளேயே வசூலிக்கும் வரிகளிலிருந்தே 70 சதவீதத்துக்கும் மேல் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றன. இந்த மாநிலங்கள் வசூலிக்கும் ஜிஎஸ்டி வரி, பெட்ரோல், மின்சாரம், மது, நிலப் பத்திரப் பதிவுக் கட்டணம் ஆகியவைதான் மாநிலங்களுக்கான வருவாய் வழிகள். ஜிஎஸ்டி வரி அறிமுகமாவதற்கு முன்னர், மாநிலங்களே விற்பனை வரியை சட்டமன்றம் மூலம் சட்டம் போட்டு வசூலித்து வந்தன. ஒரு மாநிலத்தில் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால், அவர்களே மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக விற்பனை வரி விகிதங்களை உயர்த்திக் கொள்ளும் நிலை இருந்தது.

வருவாய் அதிகார இழப்பு

ஜிஎஸ்டி வரி அறிமுகம் காரணமாக தங்களது வருவாய் அதிகாரங்களை மாநிலங்கள் இழந்தன. பொருளாதாரத் திறன் அதிகரிக்கும் என்றளிக்கப்பட்ட வாக்குறுதியும் நிறைவேறவில்லை. ஜிஎஸ்டி வரிவிதிப்பினால், மாநிலங்கள் தங்கள் பகுதியில் வசூலிக்கும் வருவாயில் பங்குபெறுவதற்கு சட்ட ரீதியான உரிமை பெற்றவை. ஆனால், குறிப்பிட்ட பருவங்களில் மத்திய அரசு அந்த நிதியை ஒதுக்குவதற்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது. ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட போது ஐந்தாண்டு காலத்துக்கு குறைந்தபட்சி வரி வருவாய்க்கும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. ஆனால், கரோனா பெருந்தொற்று காலத்தில், இரண்டு வாக்குறுதிகளையுமே மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது.

மாநில அரசுகளுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் அளிக்கப்படாமல், கூடுதல் வளங்களிலிருந்தும் உதவாமல், பெருந்தொற்று காலத்தில் கூடுதல் சுமைகளையும் தாங்குவதால் மூன்று மடங்கு அவஸ்தையை மாநில அரசுகள் அனுபவித்து வருகின்றன. தங்களுக்கு உரிமையான வரித்தொகையைப் பெற முடியாத நிலையில், விற்பனை வரி சார்ந்த வருவாயையும் பெருக்கும் அதிகாரத்தை மாநில அரசுகள் இழந்துவிட்டன. பணமேயில்லாமல் எப்படி இந்தப் பெருந்தொற்றுச் சூழலை மாநில அரசுகள் சமாளிக்கும்?

வருவாய்க்கான இதர வழிகள்

பெட்ரோலியப் பொருட்கள், மது, லாட்டரி டிக்கெட், மின்சாரம், நிலம், வாகனப் பதிவு வழியாக மாநிலங்கள் தங்கள் வருவாயைப் பெருக்கலாம். தீவிரமான ஊரடங்குச் சூழலில் பெட்ரோலியப் பொருட்கள், மின்சாரம், நிலம், வாகனப் பதிவு சார்ந்த வருவாய் கிட்டத்தட்ட இல்லாத சூழ்நிலையில் மது விற்பனையைத் தவிர வேறு வழியேயின்றி பெரும்பாலான மாநிலங்கள் இந்த வழிவகையைத் தேர்ந்தெடுத்துள்ளன. அளவில் பெரிய, பணக்கார மாநிலங்களில் மாநில வருவாயில் மூன்றில் ஒரு பங்கு வருவாயை மது விற்பனை தருகிறது. பெருந்தொற்று நோயால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க மதுப் பழக்கம் சார்ந்த விற்பனையில் மாநிலங்கள் இறங்குவது முரண்நகைதான்.

மாநிலங்கள் இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்குக் கடன் வாங்க முடியாது? மாநிலங்கள் கடன் வாங்க வேண்டுமானால் அவை மத்திய அரசிடமிருந்து அனுமதியும் உத்தரவாதமும் பெறவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் வருவாய் நிலையையும் தெளிவாக குறிப்பிட முடியாத சூழலில் வட்டி விகிதம் அதிகமாகி கடன் வாங்கும் திறன் முழுக்க இல்லாமலாகியுள்ளது. சந்தையிலிருந்து கடன் வாங்குவதற்கும் இப்போது மாநிலங்கள் மத்திய அரசையே நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்டிக்கு முந்தைய நிலை

ஜிஎஸ்டிக்கு முந்தைய காலகட்டத்தில் மாநிலங்கள் எப்படி இதுபோன்ற நெருக்கடிகளை எதிர்கொண்டன? விற்பனை வரிகளால் தங்கள் நிதி வளங்களைப் பெருக்கிக் கொண்டன. மாநிலங்களில் உள்ள அத்தியாவசியப் பொருட்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு வரி வதித்தும் நிதி வளங்களைப் பெருக்கலாம்.

கோவிட் -19 வைரஸ் பெருந்தொற்றை அந்தந்தப் பிராந்தியம் சார்ந்து மாநிலச் சூழல்கள் சார்ந்து எதிர்கொள்ள வேண்டுமோ, அதை எதிர்கொள்வதற்கான நிதி ஆதாரங்களும் டெல்லியை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் அந்தந்த மாநிலங்களிலேயே திரட்டப்படும் சூழல் இருத்தல் அவசியம்.

ஒரு தேசம், ஒரு வரி என்ற கோஷமே பொருளாதார வகையிலும் அரசியல் ரீதியாகவும் பன்முகம் கொண்ட இந்தியாவில் தவறானது. பெருந்தொற்று கால நெருக்கடி நிலையில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ஆற்றவேண்டிய நிதி சார்ந்த கடமைகளில் தவறியுள்ளது. கூட்டுறவு சார்ந்த கூட்டாட்சி என்பது அருண் ஜேட்லி உருவாக்கிய சுலோகம் ஆகும். ஆனால் இந்த நெருக்கடி காலத்தில் கூட்டுறவும் இல்லை, கூட்டாட்சியும் இல்லை. ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகள் வருவாய் ரீதியான அதிகாரம் இல்லாமல் நிர்வாகத்தை நடத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை. அளவிலும் வளத்திலும் பெரிய மாநிலங்கள் ஜிஎஸ்டி என்பதையே எதிர்த்துக் கேள்விகேட்க வேண்டிய சமயம் இது.

தி இந்து

தமிழில் : ஷங்கர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x