Published : 15 May 2020 07:35 AM
Last Updated : 15 May 2020 07:35 AM

காவிரி நதிநீர் ஆணையம்: வீணடிக்கப்படும் நல்வாய்ப்பு

தமிழகத்தின் உயிராதார நதியான காவிரி, தொடர் விவாதங்களுக்கான தோற்றுவாயாகவும் இருக்கிறது. காவிரி விஷயத்தில் தற்போது எழுந்திருக்கும் பிரச்சினை, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசின் நீர்சக்தித் துறை நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான அறிவிப்பு. தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் விவசாயிகள் சங்கங்களும் ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்குத் தங்களது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. தன்னாட்சி மிக்க ஒரு அமைப்பாக உருவெடுப்பதற்குப் பதிலாக டெல்லி அரசியலின் ஒரு பகுதியாக ஆணையம் மாற்றப்படுவதற்கான அச்சாரமாகவே இம்முயற்சியை அவர்கள் பார்க்கிறார்கள். அவர்களது பார்வையில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியமானது 2018 பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரிலேயே உருவாக்கப்பட்டது. அது மத்திய நீர் சக்தித் துறை அமைச்சகத்துடன் சேர்ந்துதான் இயங்கிவந்திருக்கிறது எனினும், மேலாண்மை வாரியமானது மத்திய நீர் சக்தித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டதான எந்த ஒரு குறிப்பும் முன்னதாகக் கிடையாது. ஆனால், இப்போது ஏற்கெனவே நீர் சக்தித் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கிடையிலான எட்டு நதிநீர் வாரியங்களோடு காவிரி நதிநீர் மேலாண்மை வாரியமும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதாவது, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தற்போதைய நிலை என்பது அமைச்சகத்தின் ஒரு பிரிவாக நிர்வாகரீதியில் இயங்குவது என்று தெளிவாகவே தெரிகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் ஆணையத்தின் பணிகளிலோ அதிகாரங்களிலோ இந்த அறிவிப்பு எந்தத் திருத்தங்களையும் செய்யவில்லை; நிர்வாகரீதியிலான மாற்றங்களையே செய்திருக்கிறது என்றாலும், சுயாதீனமாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உருவெடுப்பதற்கான வாய்ப்பை அது பறித்துவிட்டிருக்கிறது. மாநிலங்கள் இடையே பாயும் நதிகளின் நீர்ப் பகிர்வுப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான ஒரு முன்முயற்சியாக காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை இந்தியா விஸ்தரித்திருக்க முடியும். ஆனால், தொடக்கம் முதலாகவே அப்படியான அமைப்பாக அதைக் கட்டமைக்க ஒன்றிய அரசு விரும்பவில்லை; காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட இரண்டாண்டுகளில், அதற்கு முழு நேரத் தலைவர்கள்கூட யாரும் நியமிக்கப்படவில்லை. மாநிலங்கள் பகிர்ந்துகொள்ளும் நதிகளை நிர்வகிக்க இதுவரை அமைக்கப்பட்ட ஆணையங்கள் போதிய பலனைத் தராத நிலையில், அந்த வரிசையிலேயே காவிரி நதிநீர் மேலாண்மை வாரியமும் தள்ளப்பட்டிருப்பதன் மூலம், ஒரு நல்வாய்ப்பு வீணடிக்கப்படுகிறது; இது தவிர்க்கப்பட வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x