Published : 14 May 2020 07:43 AM
Last Updated : 14 May 2020 07:43 AM

நூறு நாட்கள் வேலைத் திட்டத்தில் விவசாயத்தையும் சேர்க்க வேண்டும்!

ஆர்.கோபிநாத்

நூறு நாட்கள் வேலைத் திட்டம் என்ற பெயரில் அழைக்கப்படும் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட’த்தை விவசாயத்தை அழிக்க வந்த திட்டம் என்று விமர்சித்த காலமும் ஒன்றிருந்தது. அரசு வீண் செலவு செய்துகொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அந்த எதிர்ப்புக் குரல்கள் எல்லாம் கடந்த ஒரு வருடத்தில் மந்தமாகிவிட்டன. இந்நாட்களில் ஊரக மக்களிடம் பணப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்வதற்காக மட்டுமின்றி, விவசாயத்தைக் காக்கும் கருவியாகவும் ஊரக வேலை உறுதித் திட்டம் இருக்கிறது. குறிப்பாக, இத்திட்டத்தில் விவசாயத்தையும் சேர்ப்பதன் மூலமாக சிறு - குறு விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1.7 கோடிப் பேர் இந்தத் திட்டத்தின் கீழ் வேலைபார்த்தனர். ஆனால், இந்த ஆண்டு ஊரடங்கின் காரணமாக 30 லட்சம் பேர் மட்டுமே வேலைபார்த்துள்ளனர். விவசாயத்தை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஒரு பக்கமும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் இன்னொரு பக்கமும் அழுத்திக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் விவசாயத்தையும் உள்ளடக்குவதே விவசாயத்தைக் காப்பாற்றும்.

ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தனிநபர்களுடைய நிலங்களில் மேற்கொள்ளப்படும் வேலைகளுக்கான வழிகாட்டுதல் வரைவு, 2009-ன் வழிகாட்டுதலின்படி: 1. பாசன வசதிகளை உருவாக்குதல் (கிணறு வெட்டுதல், பண்ணைக்குட்டை அமைத்தல், பாசன வாய்க்காலைச் சீர்ப்படுத்துதல் போன்றவை); 2. நில மேம்பாடு (நிலத்தைச் சமன்படுத்துதல், வடிகால் வாய்க்கால் அமைத்தல், அருகில் உள்ள ஏரிகளிலிருந்து வண்டலைக் கொண்டுவந்து நிலங்களில் இடுதல், தரிசு நில மேம்பாடு போன்றவை); 3. தோட்டக்கலைத் தோட்டம் அமைத்தல் (தோட்டக்கலை தொடர்பான அனைத்துப் பணிகள், பட்டு வளர்ப்பு சார்ந்த பணிகள், தோட்டக்கலை நாற்றங்கால் அமைத்தல்) ஆகியவை அடங்கும்.

மேற்கூறிய வேலைகள் நடைபெற, அந்த நிலத்தின் உரிமையாளர் ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான வேலை அட்டையை வைத்திருக்க வேண்டும். தமிழகத்தில் இந்த வேலைகளின் மூலம் 2019-20-ம் நிதியாண்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மொத்த செலவில் 11% செலவிடப்பட்டதை அறிய முடிகிறது. எனவே, ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் வேலைகளில் மற்ற வேளாண் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே தற்போதைய தேவை.

உதாரணமாக, மலர் சாகுபடி செய்த விவசாயிகள் பலரும் ஊரடங்கு காரணமாக சந்தை வாய்ப்பு இல்லாததால் மலர்களைப் பறிக்காமல் நிலங்களிலேயே விட்டுவிட்டுள்ளனர். அது போன்ற ஊர்களில் மலர்களைப் பறித்து, செடிகளைப் பண்படுத்தினால் அடுத்த பருவத்துக்கான செடிகளைத் தயார்செய்ய முடியும். ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலமாகவே அந்த வேலைகளைச் செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் வேளாண் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, நிலத்தின் உரிமையாளர்களான சிறு - குறு விவசாயிகளுக்கும் ஊதியம் கிடைக்கும். இதுபோல், ஏனைய பயிர்களுக்கான விவசாயப் பணிகளிலும் ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் மனித உழைப்பு சார்ந்த வேலைகள் செயல்படுத்தப்பட வேண்டும்.

இத்தகைய முன்னெடுப்புக்கு மற்ற விவசாயிகளிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்குமா என்ற கேள்வி முக்கியமானது. ஊரக வேலை உறுதித் திட்டத்திலேயே அதற்கு முன்னுதாரணங்கள் உள்ளன. அரசாங்கத்தின் மூலம் கட்டித்தரப்படும் வீடுகள் - கழிப்பறைகளில் மனித உழைப்புக்கான கூலி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் தரப்படுகிறது.

ஊரக வேலை உறுதித் திட்டம் சார்ந்து நடைபெறும் வேலைகளின் தன்மைகள் குறித்துக் குறைகூறுபவர்கள்கூட தனிநபர்களின் சொத்து மேம்பாட்டின் கீழ் நடைபெறும் வேலைகளின் தன்மையைப் பற்றியோ, வீடு/கழிப்பறை கட்டுவதில் ஈடுபடும் ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளியின் உழைப்பைப் பற்றியோ குறைசொல்வதில்லை. ஊரகப் பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டப்படுவதில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களின் பங்கு இன்றியமையாதது. அதுபோலவே, வேளாண் பணிகளையும் முன்னெடுக்கலாம்.

- ஆர்.கோபிநாத், ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

தொடர்புக்கு: gopidina@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x