Last Updated : 13 May, 2020 07:35 AM

 

Published : 13 May 2020 07:35 AM
Last Updated : 13 May 2020 07:35 AM

சீர்திருத்தம் கோரும் இந்திய உணவுக் கழகம்

அரசுசார் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை இந்த கரோனா காலகட்டம் தீவிரமாகவே மக்களுக்கு உணர்த்திவருகிறது. அரசு மருத்துவமனைகள் தொடங்கி ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனம் வரை கடந்த காலத்தில் மக்கள் துச்சமாக நினைத்த பல நிறுவனங்கள், அமைப்புகள் இன்று எவ்வளவு முக்கியமானவை என்பதை மக்கள் உணர்கிறார்கள். இந்தப் பட்டியலிலும் நாம் தவறவிடும் ஒரு பெயர், ‘இந்திய உணவுக் கழகம்’.

மக்கள் எல்லோரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்ததையொட்டித்தான் பலருக்குள் அந்தக் கேள்வி முளைக்கலானது, ‘எல்லோரும் வீட்டுக்குள் இருந்தால், சாப்பாடு எப்படி வரும். தவிர, அப்படி வீட்டுக்குள்ளேயே விவசாயிகளும் இருக்க நேர்ந்தால், தானியக் கையிருப்பு போதிய அளவுக்கு நம்மிடம் இருக்கிறதா?’

நம்மிடம் போதிய கையிருப்பு இருந்தது; ஊரடங்குக்குப் பிறகும் உணவு தானியங்கள் சேர்ந்தன. நம்மிடம் இன்று 5.64 கோடி டன் தானியம் உள்ளது. ஆனால், இது இன்றைய அரசுகளின் அரும்பணி அல்லது சாதனையின் விளைவு அல்ல. இதற்குப் பின் ஒரு வரலாறும் நெடிய தொலைநோக்குப் பார்வையும் இருக்கிறது. அதுதான் இந்திய உணவுக் கழகத்தின் கதை. இந்திய உணவுக் கழகத்தின் உருவாக்கத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சி.சுப்பிரமணியம் மத்திய வேளாண் அமைச்சராகப் பணியாற்றிய காலம் அது. பசுமைப் புரட்சி நோக்கி நாட்டை நகர்த்திய சுப்பிரமணியம், அதே காலகட்டத்தில்தான் இந்திய உணவுக் கழகத்தின் எழுச்சிக்கும் வித்திட்டார்.

இந்திய உணவுக் கழகம் 1965-ல் தொடங்கப்பட்டது. அப்போது அதன் தலைமை அலுவலகம் சென்னையிலும், முதல் மாவட்ட அலுவலகம் தஞ்சாவூரிலும் அமைக்கப்பட்டது. ஏழை விவசாயிகளின் நலன்களைக் காக்கும் வகையில் நெல், கோதுமைக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்தல், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உணவு தானியங்களை விநியோகித்தல், தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதத்தில் போதுமான அளவு கையிருப்பு வைத்திருத்தல், நுகர்வோருக்குக் கட்டுப்படியாகும்படி சந்தை விலையை நிர்ணயித்தல் ஆகியவை இந்திய உணவுக் கழகத்தின் பிரதான நோக்கங்கள். அடிப்படையில் இது உணவு தானியங்களைத் தேக்கி வைக்கும் அமைப்பு. அரசு உத்தரவிட்டால், தானியங்களை விநியோகத்துக்காக விடுவிக்கும். இப்படித்தான் இந்திய உணவுக் கழகம் செயலாற்றுகிறது.

துரதிர்ஷ்டவசமாக டெல்லியை மையமிட்டே சிந்திக்கும் நோய், இந்த நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை. விளைவாக, சீக்கிரமே அதன் தலைமையகம் டெல்லிக்கு மாற்றப்பட்டது. மேலும், அதன் செயல்பாடுகளும் மாநிலங்கள் தானியங்களுக்காக டெல்லியின் கண்ணசைவை எதிர்பார்த்து நிற்கும் வகையிலேயே அமைந்தன. ஒவ்வொரு மாநில முதல்வரும் அரிசிக்காகவும் கோதுமைக்காகவும் டெல்லியில் உள்ள அமைச்சர்களைச் சந்தித்து, இறைஞ்சும் நிலை நீண்ட காலத்துக்குத் தொடர்ந்தது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகுதான், அது உரிமை சார்ந்த விஷயமாகி, நிலைமை இன்று கொஞ்சம் மாறியிருக்கிறது.

இந்திய உணவுக் கழகம் உலகிலேயே மிகப் பெரிய விநியோக அமைப்புகளில் ஒன்று. முறையான கிடங்கு வசதிகள் இல்லாமல் தானியங்கள் வீணாவது, தானியங்கள் எலிகளுக்கு இரையாவது, நுகர்பொருள் வாணிபக் கழகங்களிலே தடையின்றி நடக்கும் ஊழல் என்று இந்த அமைப்பு நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. மிக முக்கியமாக ஒவ்வொரு மாநிலத்துக்குமான அமைப்பாக இது விஸ்தரிக்கப்பட்டு, அதிகாரப் பரவலாக்கலும், அமைப்பு விரிவாக்கமும் நடக்க வேண்டும் என்ற யோசனை ஆட்சியாளர்களால் பொருட்படுத்தப்படாமலேயே இருக்கிறது. இதற்கெல்லாம் முக்கியமான காரணம், மக்களுடைய கவனத்தை அந்த அமைப்பு போதிய அளவுக்குப் பெறாததும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக நம்முடைய சமூகம் உணராததுமே ஆகும். இடைப்பட்ட காலத்தில் இந்த அமைப்பையே இல்லாமலாக்கிவிடும் அளவுக்கான காரியங்களும் நடந்தன. கரோனா கால நெருக்கடியில் உணவுக் கழகத்தின் இன்றியமையாத இடத்தை உணர்கிறோம்.

தானியங்களைச் சேகரித்து வைப்பதற்கான அதிநவீனக் கட்டுமானங்களை உருவாக்குவது, ஊழல்கள் அற்ற விநியோக நரம்புகளை உருவாக்குவது, அதிகாரங்களை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பது என்று இந்திய உணவுக் கழகம் பல சீரமைப்புகளை எதிர்பார்த்து நிற்கிறது. இந்த அமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை கரோனா காலம் நமக்கு உணர்த்தியிருக்கிறது.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x