Published : 13 May 2020 07:31 AM
Last Updated : 13 May 2020 07:31 AM

காவிரி ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம் மீட்டெடுக்கப்பட வேண்டும்!

கோமல் அன்பரசன்

கரோனாவால் தேசமே உறைந்துகிடக்கும் நேரத்தில், தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரிப் பிரச்சினையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திடீர் முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. தமிழ்நாட்டின் நீண்ட சட்டப் போராட்டத்தின் முடிவில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் ‘ஜல்சக்தி’ எனப்படும் மத்திய நீர்வளத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ‘இது சாதாரண அலுவல் நடைமுறைதான்’ என்று தமிழக அரசும் அவசர அவசரமாக வழிமொழிந்திருக்கிறது.

ஏனைய நதி நீர் ஆணையங்கள் உருவாக்கப்பட்டதற்கும், காவிரி ஆணையம் உருவாக்கப்பட்டதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. நதி நீர்ச் சிக்கல்களில் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்துக்கும் இப்படியொரு துயரம் நேர்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்குத் தமிழகம் போராடியிருக்கிறது. பேச்சுவார்த்தைகள், வழக்குகள், நீதிமன்ற உத்தரவுகள், மத்திய அரசின் தலையீடுகள் என எல்லாவற்றையும் கடந்து 2018 பிப்ரவரி 16-ல் காவிரி நதி நீர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பளித்தது.

நீண்ட நெடிய போராட்டம்

நீதிமன்றத் தீர்ப்பின் வழியாகத் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய முழு நீதியும் கிடைக்கவில்லை என்றாலும், அரை நூற்றாண்டாகக் காவிரி விவகாரத்தில் பலவற்றை இழந்து நின்ற தமிழ்நாட்டுக்கு, இந்தத் தீர்ப்பாவது செயல்படுத்தப்பட்டால் போதும் என்ற நிலை ஏற்பட்டது. அதிலும்கூட, தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவில் ‘வாரியம்’ என்ற வார்த்தையை ஏற்காமல், மத்திய அரசு பிடிவாதம் பிடித்தது. கடைசியில்தான், காவிரி மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டது.

இறுதித் தீர்ப்பில் காவிரி ஆணையம் எப்படி இயங்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் வரையறுத்திருந்தது. அதில், ‘நீர்ப் பாசனத்தில் அனுபவம் கொண்ட ஓய்வுபெற்ற ஓர் உயர் அதிகாரியைத் தலைவராக மத்திய அமைச்சரவை தேர்ந்தெடுத்து, உச்ச நீதிமன்ற அனுமதியோடு பணியமர்த்த வேண்டும். மத்திய அரசின் பிரதிநிதி என்ற அடிப்படையில் நீர்சக்தித் துறைச் செயலாளர், ஆணையத்தில் நிரந்தர உறுப்பினராக இருப்பார். எந்த வகையிலும் நீர்சக்தித் துறையின் அலுவலக நிர்வாகத்துக்குள் ஆணையத்தின் செயல்பாடு இடம்பெறாது. ஆணையம் எடுக்கும் முடிவுகளை நிறைவேற்றத் தேவையான உதவிகளை மட்டுமே மத்திய அரசு செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசோ, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோ கட்டுப்பட மறுத்தால், ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுத் தீர்வு காணலாம்’ - இப்படி காவிரி ஆணையத்தைத் தன்னாட்சியோடு இயங்கச் சொன்ன உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரே உத்தரவின் மூலம் இல்லாததாக்கி இருக்கிறது மத்திய அரசு.

மத்திய அரசின் பாரபட்சம்

காவிரி விவகாரத்தில், ஆரம்பத்திலிருந்தே மத்திய அரசின் நிலைப்பாடு குறித்துத் தமிழ்நாட்டுக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் இருக்கின்றன. இந்திரா காந்தி தொடங்கி மோடி வரை வி.பி.சிங் ஒருவரைத் தவிர, வேறு எந்தப் பிரதமரும் காவிரி விவகாரத்தில் நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை. காங்கிரஸ், பாஜக இரண்டுமே கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கிற சக்தி கொண்ட கட்சிகள் என்பதால், மத்திய அரசின் செயல்பாடுகள் எப்போதுமே கர்நாடகாவுக்கு ஆதரவாகவே இருந்திருக்கின்றன.

தமிழ்நாடு 1970-ல் அமைக்கக் கோரிய நடுவர் மன்றத்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அதுவும் உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுக்குப் பின்னரே மத்திய அரசு அமைத்தது. 2007-ல் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை உடனடியாக அரசிதழில் வெளியிட்டால் நடைமுறைக்கு வந்துவிடும் என்று அதைச் செய்யாத மத்திய அரசு, கர்நாடகாவுக்கு ஆதரவாக 6 ஆண்டுகள் இழுத்தடித்தது. 2012-ல் மத்திய அரசிதழில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்ட உடனேயே, அதில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் விட்டது மட்டுமல்ல, 2016-ல் உடனடியாக மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட, அதை நிராகரித்து நீதிமன்றத்தில் மத்திய அரசு கருத்துத் தெரிவித்தது.

தமிழகத்தின் உயிராதாரம்

காவிரிப் பிரச்சினை என்பது தஞ்சாவூர் விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல; ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் பிரச்சினை. சென்னை தொடங்கி ராமநாதபுரம் வரையிலும், திருப்பூரிலிருந்து வேலூர் வரையிலும், ஒகேனக்கல் முதல் நாகப்பட்டினம் வரையிலும் தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறையையும் சேர்த்து 31 மாவட்டங்கள் குடிநீருக்காகவோ விவசாயத்துக்காகவோ அல்லது இரண்டுக்கும் சேர்த்தோ காவிரியைத்தான் நம்பியிருக்கின்றன. தமிழகத்தின் 25 லட்சம் ஏக்கர் நிலங்களுக்குக் காவிரித் தண்ணீரை விட்டால் பாசனத்துக்கு வேறு வழியில்லை. தமிழ்நாட்டின் நெல் உற்பத்திக்குக் காவிரியே மூல காரணம். தமிழக மக்களில் ஏறத்தாழ 5 கோடி மக்களுக்குக் காவிரித் தண்ணீரே குடிநீர். இதையெல்லாம்விட, தமிழகத்தில் அதிக தூரம் ஓடும் ஒரே நதி காவிரி மட்டுமே. அதில் தண்ணீர் ஓடாவிட்டால் ஏற்கெனவே கீழே போய்க்கொண்டிருக்கும் நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்குப் போய்விடும்.

ஏனைய மாநிலங்களுக்கிடையிலான நதி நீர்ப் பிரச்சினைகளில் மத்திய அரசு இப்படிப் பாரபட்சத்துடன் நடந்துகொண்டதாகத் தெரியவில்லை. அதனால்தான், காவிரி மேலாண்மை ஆணையமானது, மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பது நமக்கு அச்சத்தையும், கவலையையும் அளிக்கிறது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு, மீண்டும் ஒரு சட்டப் போராட்டத்தை நோக்கி நம்மைத் தள்ளியிருக்கிறது.

- கோமல் அன்பரசன், ஊடகவியலாளர், ‘காவிரி அரசியல்: தமிழகம் வஞ்சிக்கப்பட்ட வரலாறு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: komalrkanbarasan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x