Last Updated : 12 May, 2020 11:19 AM

 

Published : 12 May 2020 11:19 AM
Last Updated : 12 May 2020 11:19 AM

செவிலியர்கள் நமது மருத்துவ சமூகத்தின் உயிர்நாடி!

பிரதிநிதித்துவப் படம்.

உலக செவிலியர் தின சிறப்புக் கட்டுரை

செவிலியர் பணி என்பது ஊதியத்திற்கு அப்பாற்பட்ட ஒரு தொண்டு. சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை செய்யும் முழு அர்ப்பணிப்பு! சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்புத்தன்மையுடன் ஆற்றும் மகத்தான சேவையே செவிலியர் பணி.

கை விளக்கேந்திய காரிகை (பிளாரன்ஸ் நைட்டிங்கேல்) - அதன் முத்தாய்ப்பாக அமைந்தது ஒரு சம்பவம். 1854-ல் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. கிரிமியன் போரில் பாதிக்கப்பட்ட படைவீரர்கள் குத்துயிரும் குலையுயிருமாக வீழ்ந்து கிடந்தனர். அவர்களுக்கு யாருமே உதவ முன்வரவில்லை. இறக்கும் தருவாயில் பலர் முனகலுடன் இருந்தனர். அந்த ராணுவ மருத்துவமனைக்கு 38 செவிலியருடன் சென்றார் பிளாரன்ஸ். வசதிக்குறைவுகள் அங்கு காணப்பட்டாலும் தன்னால் முடிந்தவரை ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை வழங்கினார். உயிருக்குப் போராடிய முழு படையையும் தன்னிடமிருந்த குறைந்த மருத்துவ வசதி மற்றும் நிறைந்த அன்பிலும் குணப்படுத்தினார். அந்த இரவு வேளைகளில் கையில் விளக்கு ஒன்றை ஏந்திய வண்ணம் நோயாளிகளிடம் சென்று நலம் விசாரித்து மருந்துகளையும் வழங்கி வந்தார்.

நைட்டிங்கேல்

தங்களைக் காக்க 'விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு வந்த தேவதை' என ராணுவ வீரர்கள் நைட்டிங்கேலைக் கவுரவித்தனர். அதனால்தான் அவர் "கைவிளக்கு ஏந்திய காரிகை" என்றும் அழைக்கப்பட்டார். அவர் பிறந்த மே 12 ஆம் நாளே உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. செவிலியர்களுக்கென்றே தனி மரியாதையும், கண்ணியத்தையும் உருவாக்கிக் கொடுத்தவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். அவர் இல்லாவிட்டால் செவிலியர் துறை இந்த அளவுக்கு இவ்வளவு காலம் நீண்டு வளர்ந்திருக்காது.

இந்த ஆண்டு 'செவிலியப் பணி மூலம், உலக ஆரோக்கியம்' என்ற மையக்கருத்தை, உலக செவிலியர் அமைப்பு முன்வைத்துள்ளது. தற்போது, 'கோவிட் - 19' வைரஸ், உலகையே உலுக்கி வரும் நிலையில், செவிலியப் பணி, போற்றுதலுக்கு உரியதாக மாறியிருக்கிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் சுகாதார செவிலியர்கள், அரசு மற்றும் தனியார் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் வரை தங்களது உயிரைப் பணயம் வைத்து, இரவு, பகலாகப் பணியாற்றி வருகின்றனர். மருத்துவர்கள், அவர்ளின் சேவையைப் பாராட்டும் வகையில் நமது பாரதப் பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் சில தினங்களுக்கு முன்னர் நாட்டு மக்கள் அனைவரும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் சேவையைப் போற்றும் வகையில் கை தட்டியும், விளக்கு ஏந்தியும் கவுரவம் செலுத்தினோம். ராணுவ ஹெலிகாப்டர் மூலம், மலர் தூவி கவுரவம் செலுத்தப்பட்டது. இந்த ஆண்டு 2020 உலக செவிலியர் தினம், வழக்கத்தைக் காட்டிலும், கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

செவிலியர்கள் நமக்கு மற்றொரு தாய் மற்றும் சகோதரி. அவர்களது பணி என்றும் போற்றத்தக்கது!! மதிக்கத்தக்கது!! வணங்கத்தக்கது!!

இந்த ஆண்டு சர்வதேச செவிலியர்கள் கவுன்சிலின் 120-வது ஆண்டு விழாவாகவும் உள்ளது. இந்த கொரோனா தொற்றுநோய்களின் போது நம் சமூகத்திற்கு செவிலியர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள் தான் நமது மருத்துவ சமூகத்தின் உயிர்நாடி

இந்த உலக செவிலியர் தின நன்னாளில் நாம் அனைவரும் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்வோம். அவர்கள் நீடுழி நலமுடன் வாழ நாம் ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்வோம்.

- அ.மகாலிங்கம்,

இயக்குநர், டுவின்டெக் அகாடமி

தொடர்புக்கு: mahali@mahali.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x