Published : 12 May 2020 07:34 AM
Last Updated : 12 May 2020 07:34 AM

நைட்டிங்கேல்: காலத்தைத் தாண்டிய ஒளி

பள்ளிப் பாடப்புத்தகங்களின் வாயிலாக ‘கை விளக்கேந்திய காரிகை’ என்ற பெயரில் நமக்கு அறிமுகமானவரும், தாதியர்களுக்கு லட்சிய உருவமாக இருப்பவருமான ப்ளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200-வது பிறந்த நாள் இன்று. ஒரு பெருந்தொற்று காலத்தில், கைகள் கழுவுவது உள்ளிட்ட அடிப்படையான பழக்கவழக்கங்கள் குறித்துப் பேசும் இந்நாட்களில், ப்ளாரன்ஸ் நைட்டிங்கேலை நினைவுகூர்வது இன்னமும் பொருத்தமானது. பொதுச் சுகாதாரத்தையும் சுத்தத்தையும் மேம்படுத்துவதன் மூலம், தொற்றுநோய்ப் பரவலைக் குறைக்க முடியும் என்பதைத் தனது செயல்பாடுகளின் வழியாக நிரூபித்துக் காட்டிய முதன்மையான நவீன தாதி அவர்தான். சுகாதாரமாக இருப்பதற்கும் நோய் குணமாவதற்கும் இடையிலான தொடர்புகள் அறியப்படவோ... சொன்னால் நம்பவோபடாத 1800-கள் அது. தாதிப் பணிக்கு வருவதற்கு முன்னர் கணிதத்தில் ஈடுபாடு மிக்க அவர், தொற்றுநோய்கள் பரவுவது, குணமாவது தொடர்பில் புள்ளியியலையும் விளக்கப்படங்களையும் பயன்படுத்திய முன்னோடி.

ரஷ்யாவுக்கு எதிராக துருக்கியுடன் பிரிட்டனும் பிரான்ஸும் சேர்ந்து போரிட்ட கொடூரமான கிரீமியன் போர்தான் கணிதம் போதித்துவந்த நைட்டிங்கேலை மருத்துவ சேவை நோக்கி ஈர்த்தது. 1854-ல் துருக்கியில் உள்ள ராணுவ மருத்துவமனைகளில் ஆங்கிலேயப் படை வீரர்கள் சந்தித்த மோசமான சூழ்நிலையைப் பற்றி போர்ச் செயலரான சிட்னி ஹெர்பர்ட் ஒரு பத்திரிகை செய்தியைப் படித்து வேதனை அடைந்தார். அவர் தனது தோழி நைட்டிங்கேலை அழைத்தார். நைட்டிங்கேலின் தலைமையில் துருக்கிக்குச் சென்ற 38 மருத்துவத் தாதிகள், ராணுவ மருத்துவமனைகளில் இருந்த நிலையைப் பார்த்துத் திகிலடைந்துபோனார்கள். காயமடைந்த வீரர்கள் ஒருவரின் மூச்சு இன்னொருவருக்குப் படும்படி படுத்திருந்த அறைகள், அழுக்கும் கழிவுநீரும் ஓடும் தரை, எலிகள் ஓடும் தாழ்வாரம் என ராணுவ மருத்துவமனை நரகம்போல இருந்தது.

நோயை விரட்டிய கணிதம்

நைட்டிங்கேலின் கணிதத் திறன், ராணுவ மருத்துவமனையில் நோயோடு போராடிக்கொண்டிருந்த வீரர்களைக் காப்பாற்றுவதற்காகச் செயல்படத் தொடங்கியது. மரணங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, அதற்கான காரணங்கள் என்ன என்பதையும் அவர் பட்டியலிட்டார். போர்க்களத்தில் அடைந்த காயங்களால் விளைந்த மரணங்களைவிடவும் மருத்துவமனைக்கு வந்த பின்னர் ஏற்பட்ட நோய்களால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை அவரால் கணக்குகள் வழி மருத்துவமனை நிர்வாகத்துக்கும் அரசுக்கும் நிரூபிக்க முடிந்தது.

நைட்டிங்கேல் உருவாக்கிய போலார் விளக்கப்படத்தில், நீல வண்ணமிட்ட பகுதிகள் முன்கூட்டியே தடுக்கக்கூடிய வியாதிகளைக் காட்டக்கூடியதாகவும், சிவப்பு வண்ணம் போரில் பட்ட காயங்களால் ஏற்பட்ட மரணங்களையும், கருப்பு வண்ணம் பிற காரணங்களால் ஏற்பட்ட மரணங்களையும் காட்டுவதாகவும் இருந்தன. ராணுவ நிர்வாகத்திடம் போலார் வரைபடத்தைக் காட்டிப் பேசி, மருத்துவமனைகளின் சுகாதார நிலையை மேம்படுத்தியதுதான் நைட்டிங்கேலின் முதல் வெற்றிகரமான தலையீடு. மருத்துவமனைக்கு வந்த பிறகு போர் வீரர்களுக்கு வரும் நோய்களை, அவர் சுகாதாரத்தை மேம்படுத்திக் குறைத்ததன் வழியாக இறப்பு விகிதம் ஆண்டுக்கு 40%-லிருந்து வெறும் 2.2%-ஆகக் குறைந்தது. போலார் விளக்கப்படம் இன்றும் புள்ளியியல் கணக்கீட்டில் நைட்டிங்கேலின் பெயராலேயே அறியப்படுகிறது.

புள்ளியியல் தரவுகள்

கிரீமியன் போருக்குப் பின்னர், மருத்துவரீதியான திட்டங்களை இடுவதற்குப் புள்ளியியல்ரீதியான தரவுகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தார் நைட்டிங்கேல். லண்டனில் உள்ள ‘இன்டர்நேஷனல் ஸ்டேடிஸ்டிக் காங்கிரஸ்’ மூலமாக அனைத்து மருத்துவமனைகளின் புள்ளிவிவரங்களையும் ஒரேமாதிரியாகச் சேகரிக்கும் திட்டத்தை முன்வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ஒரு நோயாளியின் விவரங்களை மருத்துவமனை அடிப்படையிலும் பிராந்திய அடிப்படையிலும் தேச அடிப்படையிலும் ஒப்பிடும் சூழல் ஏற்பட்டது.

1857-ல் நைட்டிங்கேலை ப்ரூசெல்லோசிஸ் நோய் தாக்கியது. பாக்டீரிய நோய்த்தொற்று கொண்ட இறைச்சி, பால் பொருட்களை உண்பதன் வாயிலாக ஏற்படும் நோய் அது. காய்ச்சல், சோர்வு, உடல் வலி தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இந்த நோய்த்தொற்று நைட்டிங்கேலுக்கு கிரீமியன் போரில் காயமடைந்த வீரர்களுக்குச் சேவையாற்றிய காலகட்டத்தில் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. படுத்த படுக்கையாக இருந்தும் வீட்டிலிருந்தபடி பணிகளைத் தொடர்ந்தார். இங்கிலாந்து அரசின் சுகாதாரச் சீர்திருத்தத்தை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான நூல்கள், அறிக்கைகள், துண்டுப் பிரசுரங்களைத் தனது வாழ்நாள் முழுவதும் எழுதி வெளியிட்டார். இங்கிலாந்தில் தாதியருக்கான புகழ்பெற்ற கல்லூரிகள் அவரது முயற்சியின் வாயிலாகவே தொடங்கப்பட்டன.

சுகாதாரம் தொடர்பான உணர்வு பொதுமக்களிடம் பரவலாவதை நைட்டிங்கேல் தனது வாழ்நாளிலேயே பார்த்தார். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பெட்பேன் எனப்படும் கழிகலங்கள் வழங்கத் தொடங்கியிருந்தனர். காற்றோட்டமான இடமும், சுத்தமான போர்வைகளும், உணவுக் கிண்ணங்களும் நோயாளிகளுக்கு அவசியம் என்ற எண்ணம் உருவாகியிருந்தது. நைட்டிங்கேலின் கவனம் இந்தியாவில் உள்ள படை வீரர்களின் ஆரோக்கியம் சார்ந்தும் திரும்பியது. இங்கிலாந்தின் ஆதிக்கம் இருந்த எல்லா நாடுகளிலும் உள்ள ராணுவக் குடியிருப்புகளில் சுகாதாரம், சுத்தமான நீர் வழங்கப்படுவதற்கு அவர் காரணமாக இருந்தார்.

பெருந்தொற்று அறிவியல்

நைட்டிங்கேலின் புள்ளியியல்ரீதியான பகுப்பாய்வு, பெருந்தொற்று அறிவியலில் மிக முக்கியமான கணக்கீடாக விளங்குகிறது. இப்போது கரோனா பரவலைக் கணக்கிடக்கூட அவர் உருவாக்கிய கணக்கு மாதிரிகள் உதவுகின்றன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, வீழ்ச்சி அடைவது, எதிர்கால நிலைமை பற்றிக் கணிப்பது என எல்லாவற்றுக்கும் இந்தக் கணக்கீடு உதவுகிறது.

சுகாதாரப் பணியாளர்கள், அரசியலர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை பெருந்தொற்றுகள் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குக் கணிதத்தைத்தான் முதன்மையான கருவியாகப் பெருந்தொற்றியலாளர்கள் பார்க்கின்றனர். கைவிளக்கேந்திய காரிகையின் 200-வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், ஒரு பெருந்தொற்றுக் காலத்தில் அவர் தனது கணிதத்தின் மூலம் பரப்பிய ஒளிக்காக அவருக்கு நன்றி சொல்வோம்.

- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x