Last Updated : 12 May, 2020 07:32 AM

 

Published : 12 May 2020 07:32 AM
Last Updated : 12 May 2020 07:32 AM

ஒத்த வீட்டுக்காரனுக்கு இப்ப ஊரே சொந்தமாகிடுச்சி!- முடிதிருத்துநர் பி.மோகன் பேட்டி

ஊரடங்கு காரணமாக 50 நாட்களுக்கும் மேலாகத் தொழில்செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சலூன் கடைக்காரர்கள். அவர்களில் ஒருவரான பி.மோகன், மகளின் படிப்புச் செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை எடுத்து, தன்னுடைய பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்குச் செலவிட்டுவருகிறார். இந்தச் செய்தியை நீங்கள் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். இதற்குப் பின்னால் நிச்சயம் ஒரு கதை இருக்குமே என்ற எண்ணத்தில் அவருடன் பேசினேன். ஆம், இருக்கிறது!

உங்கள் பூர்வீகமான ராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு வந்த கதையைச் சொல்லலாமா?

முதுகுளத்தூர் பக்கத்துல மேலச்சிறுபோதுதான் என்னோட சொந்த ஊரு. நாலு அண்ணய்ங்க, ஒரு அக்கா; நான் கடைக்குட்டி. அப்பாவும் ஊர் வேல (கிராமத்தினருக்கு முடிதிருத்தம் செய்வது) பார்த்த வருதான். “குலத்தொழில்லருந்து வெளியேறணும்னா படிப்பு முக்கியம் சாமி”ன்னு சொல்லிச் சொல்லித்தான் வளர்த்தாரு. நாலு அண்ணய்ங்களும் நல்லாப் படிச்சி வேலைக்குப் போயிட்டாங்க. எனக்குப் படிப்பு ஏறல. நான் என்னவா ஆகக் கூடாதுன்னு அப்பா நினைச்சாரோ அதே ஊர் வேலயச் செய்ய வேண்டியதாப் போச்சு. “கிராமத்துல இருந்தா நீ ஊர் வேலதான்டா செய்ய வேண்டியிருக்கும்”னு சொல்லி, அம்மா என்னைய மதுரைக்கு அனுப்பினாங்க. செல்லூர்லயே கல்யாணம் கட்டி மதுரைக்காரனாவே ஆயிட்டேன். அதே வேலதான்னாலும் நகரத்துல கொஞ்சம் கௌரவமா வாழறேன். கடைக்கு வர்றவங்க சொத்து கைமாத்துறதுக்கு உதவி கேட்பாங்க. அப்படியே ரியல் எஸ்டேட் தொழிலும் கைகூடிருச்சி.

‘நம்மை வாழ வைத்த தெய்வங்கள்’ என்கிற சென்டிமென்டில்தான் உங்கள் பகுதி மக்களுக்கு உதவுறீர்களாமே?

அது மட்டும்தான் காரணம்னு சொல்லிட முடியாது. வாழ்க்கையில கிடைச்ச பெரிய அடிதான் முதக் காரணம். மதுரைக்கு வந்ததும் நல்லா சம்பாதிச்சி இன்னொரு கடையும் போட்டேன். ரியல் எஸ்டேட் வருமானம் வேற. காசு சேர்ந்தாத்தான் புத்தி கெட்டுருமே. பொண்டாட்டிகிட்ட சண்ட. அவ கோவிச்சுக்கிட்டுப் போயிட்டா. கையில நிறைய காசு இருக்கிறத தெரிஞ்சுக்கிட்டு, என் நண்பங்களே ஒரு பிரச்சினையில சிக்க வெச்சிட்டாங்க. 2013-ல ஒரு ரவுடிப்பய என்னய கடத்திக்கிட்டுப் போய், அத்தனை பணத்தையும் நகையையும் புடுங்கிட்டான். இதுக்கு அப்புறம் பொண்டாட்டி என்னைய பாதுகாக்கிறதுக்காகவே என்கிட்ட வந்தா. கையில 10 பைசா இல்ல. வேல பாக்கிறவங்களுக்கு சம்பளம் குடுக்க முடியாம ஒரு கடையையே வித்தேன். சம்பாதிச்ச பணத்த அக்கம் பக்கத்துல நாலு பேருக்கு உதவியிருந்தா, இப்படி அனாதையா நிக்குற நிலைமை வந்திருக்குமான்னு அப்பத்தான் உணர்ந்தேன்.

மகளின் படிப்புச் செலவுக்கு வைத்திருந்த பணத்தை நிவாரணம் கொடுக்க குடும்பத்தினர் எப்படிச் சம்மதித்தார்கள்?

மதுரையில மொத கரோனா தொற்றும் சாவும் நடந்தது எங்க தெருவுலதான். அதனால, 28 நாள் எங்க தெருவையே அடைச்சிட்டாங்க. பல பேரு அன்றாடம் உழைச்சி உலை வெக்கிறவங்க. ஒருகட்டத்துல குடும்பக் கஷ்டத்தை வாய்விட்டுச் சொல்லிட்டாங்க. என் பொண்டாட்டி செல்லூர்ல வெறும் 30 ரூவா கூலிக்காகத் தறிக்கூடத்துல துண்டு மடிச்சவ. மக ஒத்த ரூவா முட்டாய் வாங்க முடியாத நிலையைக் கடந்துவந்தவ. அதனால, பக்கத்து வீட்டுக்காரங்களோட கஷ்டத்தைக் கேட்கும்போதே கண்ணீர் விட்டுட்டாங்க. “யப்பா, அவங்களுக்கு உதவலாம். என் படிப்புக்கு நீ தினமும் சம்பாதிக்கிற காசு போதும்பா”ன்னு சொன்னா. பொண்டாட்டியும் அதையே சொன்னா. சட்டுன்னு பேங்கலருந்து பணத்தை எடுத்திட்டு வந்துட்டேன்.

இப்போது உங்களது மனநிலை எப்படியிருக்கிறது?

மக இப்பதான் 9-ம் வகுப்பு படிக்கிறா. ஐஏஎஸ் ஆகணுங்கிறது அவளோட கனவு. அவளோட பணத்தைச் செலவழிச்சதுல சின்ன வருத்தம் இருந்தது உண்மைதான். ஆனா, மக்கள் எல்லாம் மனசார வாழ்த்துனாங்க பாருங்க, அது ஆயிரம் கோயிலுக்குப் போயிட்டு வந்த உணர்வைக் குடுத்துது. “மேற்கொண்டு வேணுமின்னா என்னோட நகையைக்கூட அடகு வெச்சிக்கோங்க”ன்னு பொண்டாட்டி சொல்லிட்டா. 7 வருஷங்களுக்கு முன்னாடி என்னயக் கடத்துன ரவுடிப் பயல்க மட்டும் இப்ப வந்தாங்கன்னு வைங்க, என் ஏரியாக்காரங்களே அவங்கள அடிச்சி துவம்சம் பண்ணிடுவாங்க. ஒத்த வீட்டுக்காரனான எனக்கு இப்ப மேலமடை ஊரே சொந்தமாகிடுச்சி.

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x