Published : 10 May 2020 12:51 PM
Last Updated : 10 May 2020 12:51 PM

அனைவரும் குணமாகி வீடு திரும்பிவிட்டார்கள்; நாங்கள் இன்னும் ஹாஸ்டலில் தனிமையில் இருக்கிறோம்!- மேட்டுப்பாளையம் தலைமை மருத்துவர் சேரலாதன் பேட்டி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ஒரே நேரத்தில் 46 கரோனா நோயாளிகளைக் கண்டது. தமிழகத்தில் ஒரு சிறிய நகரில், ஒரே நேரத்தில் அதிகத் தொற்று ஏற்பட்டது இங்குதான் என்று சொல்லலாம். தற்போது அந்த 46 கரோனா நோயாளிகளும் குணமடைந்துவிட்டார்கள். இங்கு பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர் யாருக்கும் கரோனா தொற்று இல்லை. மகத்தான இந்த மருத்துவ சாதனை குறித்து, இம்மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் சேரலாதனிடம் பேசினோம்.

உங்கள் மருத்துவமனையில் உள்ள வசதிகள் பற்றி?

146 படுக்கைகள். 20 மருத்துவர்கள், 60 செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களைச் சேர்த்தால் 110 பேர். கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் குவிந்த வேளையில், மருத்துவமனை இரண்டு வெவ்வேறு இடங்களில் இயங்கியது. அதனால், தினம் ஒரு மருத்துவர், 2 செவிலியர்கள் வீதம் பத்து நாளைக்கு வெளியிடங்களிலிருந்து வந்து பணிபுரிந்தார்கள்.

கரோனா தொற்றுடன் இவ்வளவு பேர் மருத்துவமனைக்கு வருவார்கள் என முன்னரே கணித்திருந்தீர்களா?

இல்லைதான். ஆனால், இந்நோய் வந்தால் என்ன செய்வது என்பதை ஜனவரியிலேயே விவாதித்திருந்தோம். முகக்கவசம், கையுறை மட்டுமல்லாமல், பிபிஇ ஆடையைக் கூட ஸ்பான்ஸர்கள் உதவியுடன் வாங்கி வைத்திருந்தோம். கரோனா தொற்றுள்ளவர் இங்கே வந்தால் பொது நோயாளிகளையும் ஒரே வளாகத்தில் மருத்துவம் பார்ப்பது சாத்தியமில்லை என்று ஒரு தனியார் மருத்துவமனையையும் அப்போதே பேசி வைத்திருந்தோம்.

நம்ப முடியவில்லையே, அது எப்படி சாத்தியம்?

எங்கள் மருத்துவமனையில் மாதம் ஒரு வியாழன் 2 மணி நேரம் மருத்துவப் பணியாளர் சந்திப்பு நடக்கும். அதில் அடுத்து நாங்கள் சந்திக்கப்போகிற பிரச்சினை விவாதப்பொருளாக இருக்கும்.

டிசம்பர் கடைசியில் பத்திரிகைச் செய்திகள் சீனாவில் கரோனா வைரஸ் பரவியது பற்றிப் பேச, அது தொடர்பாக ஜனவரி மாதத்தில் விவாதம் செய்தோம். வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் பயண விவரம், சீனாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக நம் ஊருக்கு வருவதற்கான வாய்ப்பு, கரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்குச் சிகிச்சை கொடுப்பதுடன், நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது என்பது பற்றியும் பேசினோம்.

அப்போதே முகக்கவசம், கையுறை எல்லாம் வாங்கிவிட்டீர்களா?

அதற்கு முன்பே அவை எங்களிடம் இருந்தன. மேட்டுப்பாளையத்தில் எச்ஐவி கேஸ் நிறைய உண்டு. அதற்குப் இந்தப் பாதுகாப்புக் கவசங்கள் கொஞ்சம் வைத்திருப்போம். முகக்கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு சாதனங்களில் எவற்றை முதலில் அணிவது என்பதைப் பற்றியெல்லாம் புரிதல் ஏற்பட ஜனவரியிலேயே ஒரு மாஸ்க் டிரில் பண்ணினோம். வெளிநோயாளிகள் பிரிவு இருந்த அறையை மருத்துவமனை வளாகத்திலேயே வெட்ட வெளிக்கு மாற்றினோம். அங்கே கார் ஷெட்டிலயே வெளிநோயாளிகளை தனிமனித இடைவெளிவிட்டுப் பரிசோதிக்கவும் ஆரம்பித்தோம்.

அப்போதுதான் டெல்லி மாநாட்டுக்குச் சென்றுவந்த சிலர் வைரஸ் தொற்றுடன் வர ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்கும்போது நாங்கள் பக்காவாகப் பாதுகாப்புக் கவசங்கள் அணிந்திருந்தோம். இல்லையென்றால், பரிசோதனை மையத்தில் பணிபுரிந்தவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் எல்லாருக்குமே வைரஸ் பரவியிருக்கும்.

46 பேருக்குக் கரோனா என்று உறுதிசெய்யப்பட்டபோது அதிர்ச்சியாக இல்லையா?

முதல் கட்டமாக 26 பேர், அடுத்ததாக 20 பேருக்கு என்று கரோனா உறுதிசெய்யப்பட்டதும் கொஞ்சம் அதிர்ச்சிதான். இதை முன்பே ஊகித்திருந்ததால், ஏற்கெனவே இரண்டு வார்டுகள் தயார் செய்திருந்தோம். ஆனாலும் ஓர் உறுத்தல். சாதாரண நோயாளிகளுக்கும் கரோனா தொற்று ஏற்படலாம் என்று அச்சம் ஏற்பட்டது. இதற்காகவே ஒரு கிலோ மீட்டர் தள்ளி 70 படுக்கை வசதிகளுடன் காலியாக இருந்த ஹிந்துஸ்தான் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினோம். மாவட்ட நிர்வாகம் முறையாக அணுகி அனுமதி பெற்றுத்தர, இங்கிருந்த கோவிட்-19 நோயளிகளை அங்கே மாற்றிட்டோம். ஆனாலும் அங்கொரு டீம், இங்கொரு டீம் வேலை செய்ய வேண்டியதாயிற்று. பின்னர் அவர்களை மாவட்ட கரோனா சிகிச்சை மையமான இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.

கரோனா சிகிச்சைப் பணியில் இருந்த மருத்துவப் பணியாளர்களைத் தனிமைப்படுத்த வேண்டியிருந்திருக்குமே?

ஆமாம். கரோனா நோயாளிகளைக் கவனித்த மருத்துவர், செவிலியர்கள் தங்குவதற்கு, அருகில் இருந்த சுபா மருத்துவமனை தன் புதுக்கட்டிடம் ஒன்றைக் கொடுத்து உதவியது. உணவுக்கும் சில ஸ்பான்சர்ஸ் உதவி செய்தார்கள். ரோட்டரி, இன்னர்வீல் போன்ற அமைப்புகள் நிறைய உதவி செய்தன. தீயணைப்புத் துறையினர் சக்திவாய்ந்த கிருமிநாசினியை மருத்துவமனை முழுக்க தெளித்தார்கள். எல்லாவற்றையும் முன்னெச்சரிக்கையுடன் செய்ததால், எங்களில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. தற்போது கரோனா நோயாளிகள் எல்லாம் குணமாகி வீடு திரும்பிவிட்டார்கள். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மட்டும் இன்னமும் தனிமையில் ஹாஸ்டலில்தான் தங்கியிருக்கிறோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x