Published : 08 Aug 2015 08:56 AM
Last Updated : 08 Aug 2015 08:56 AM

சட்ட சேவைக்கு கதவு திறப்பா?

வெளிநாட்டு சட்ட நிபுணர்கள் இந்தியாவில் சேவையாற்ற, வரம்புக்கு உட்பட்ட அளவில் அனுமதிக்கும் முடிவை நோக்கி அரசு நகரும் சமிக்ஞைகள் தெரிகின்றன. அதாவது, இந்திய நீதிமன்றங்களில் ஆஜராகி வாதாட வெளிநாட்டினரை அனுமதிப்பதில்லை என்ற முந்தைய அரசுகளின் முடிவு அப்படியே தொடரும். அதேசமயம், அவர்கள் அங்கிருந்து சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கு அனுமதிப்பது நடக்கும்.

சட்டத் துறைக்குள் இது விவாதத்தைக் கிளப்பியிருப்பதில் வியப்பில்லை. “சர்வதேச அளவில் இன்றைக்குச் சட்டத் தொழில் என்பது, ஆண்டுக்குக் கிட்டத்தட்ட ரூ. 1.30 லட்சம் கோடி புரளும் ஒரு துறை.

'ஆகையால், இதில் வெளியாரும் உள்ளே வரக் கூடாது, நாங்களும் வெளியே போகவில்லை' என்ற அணுகுமுறை ஆக்கபூர்வமானது அல்ல. மருத்துவம், பொறியியல்போல சட்டத் துறையிலும் உலகச் சந்தையில் போட்டியிடும் களத்தை நோக்கி நாம் நகர வேண்டும். சட்ட சேவைத் துறையிலும் இந்தியாவுக்குரிய பங்கைப் பெற வேண்டும்” என்பது வெளிநாட்டு வங்கிச் சேவையை ஆதரிப்பவர்களின் வாதம். “வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுக்கிருக்கும் பண வசதி, செல்வாக்கு, வீச்சு காரணமாக நாளடைவில் தொழிலில் ஆதிக்கம் செலுத்தக் கூடும். வெளிநாட்டுச் சட்ட நிறுவனங்களை அனுமதிப்பதால், வழக்குச் செலவுகள் பல மடங்காக உயரக் கூடும். இந்திய வழக்கறிஞர்களுக்கும் வருவாய்க் குறைவு ஏற்படும்” என்பது எதிர்ப்பவர்களின் வாதம்.

இன்றைய சூழலில், இந்திய நீதிமன்றங்களில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் வாதிடுவதற்கு வாய்ப்புகள் குறைவு. தேசிய அடிப்படையில் நடைபெறும் இந்திய வழக்காடு மன்றங்களில் வாதிட வெளிநாட்டுச் சட்ட நிபுணர்கள் பெரிதும் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், நாளைய நிலைமைகள் நம்மால் யூகிக்க முடியாதது அல்ல. இப்போதே, புதிய நிறுவனங்கள் தொடங்குதல், ஏற்கெனவே செயல்பட்டுவரும் நிறுவனங்களை வாங்குதல், இருவேறு நிறுவனங்களை இணைத்தல், புதிய முதலீடுகள் போன்ற விஷயங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் அதிகாரபூர்வமற்ற வகையில் / தனிப்பட்ட வகையில் இப்படியான சேவைகளைப் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. நாளடைவில், இத்தகைய பணிகள் அதிகாரபூர்வமாக நடக்கும்போது, வெளிநாட்டவர்களின் சேவை மேலும் மேலும் அதிகரிக்கும்போது, யாருடைய ஆதிக்கம் மேலே வரும் என்பது நமக்குத் தெரியும்.

இந்தியாவின் ஆகப் பெரும்பாலான வழக்கறிஞர்கள் இன்னமும் உறுதியான / குறைந்தபட்ச வருமானம் எனும் இலக்கையே தொட முடியாத சூழலில் இருக்கிறார்கள். ஆரம்ப ஆண்டுகளில் மூத்த வழக்கறிஞர்கள், இளைய வழக்கறிஞர்களைச் சில ஆண்டுகளுக்குத் தத்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் நீதிபதிகள் பேசும் நிலைதான் இங்கு நிலவுகிறது. மேலும், தொழில்திறன் சார்ந்து நம்மவர்களில் பெரும்பாலானவர்களை மேலே தூக்கிவிடவும் நம் அமைப்பில் இதுவரை இடம் இல்லை. இப்படிப்பட்ட சூழலில், வெளிநாட்டுச் சட்ட சேவை என்பது அச்சுறுத்தலாக இல்லாமல் எப்படியிருக்கும்?

வர்த்தகம், சேவை தொடர்பான பொது ஒப்பந்தத்தில் பெரும்பாலான நாடுகள் கையெழுத்திட்டு உலக வர்த்தக அமைப்பில் எப்போது உறுப்பினர்கள் ஆயினவோ, அப்போதே இந்த எல்லை தாண்டல் விஷயங்கள் நம் கையை மீறிவிட்டன என்பதே உண்மை. ஆனால், வெளிநாட்டினர் உள்ளே நுழையும் முன் நாம் நம் பக்கத்தை வலுவாக்கிக்கொள்வது முக்கியம். இந்திய அரசு முதலில் இந்த விஷயத்தில் தன் கவனத்தைச் செலுத்த வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x