Published : 01 May 2020 07:22 am

Updated : 01 May 2020 07:22 am

 

Published : 01 May 2020 07:22 AM
Last Updated : 01 May 2020 07:22 AM

தமிழர்களின் இன்னொரு முள்ளிவாய்க்கால் ஆகிவிடக் கூடாது தாராவி

mumbai-dharavi

தமிழக வரைபடத்துக்குள் அடைபடவில்லை என்றாலும்கூட, தாராவியும் ஒரு தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் இருக்கிற சாதிச் சங்கங்கள் தொடங்கி அரசியல் கட்சிகள் வரையில் அத்தனைக்கும் அங்கேயும் கிளை உண்டு. வாழ்வதுதான் மஹாராஷ்டிரமே தவிர, இன்னமும் தங்களைத் தமிழ்நாட்டுக்காரர்களாகவே பாவிப்பவர்கள் இவர்கள். இன்னும் ஊரோடு வேர்களை அறுத்துக்கொள்ளாதவர்கள். முக்கியமான காரணம், அங்கேயே நிலைத்திட கனவு காண தாராவி ஒன்றும் சொர்க்கம் அல்ல. ஆசியாவின் மிகப் பெரிய சேரி மட்டும் அல்ல அது; மிக நெரிசலான, நெருக்கடியான பகுதி.

எனது தந்தை ஓராண்டு அங்கே இருந்தவர். என் அண்ணன் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அங்கே வசிக்கிறார் என்பதால், நானும் தாராவி சென்று வாரக்கணக்கில் தங்குவது உண்டு. அங்குள்ள பள்ளி மாணவர்களிடம் பேசும்போது திகைத்திருக்கிறேன். மஹாராஷ்டிர முதல்வரின் பெயரே தெரியாத மாணவர்களும்கூட தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் பெயர்களைச் சொல்வார்கள். இது விசித்திரமாக இருக்கலாம்; ஆனால், மும்பையிலிருந்து வெளியாகும் தமிழ்ப் பத்திரிகைகள் ஏன் ஒரே ஒரு பக்கத்தை மஹாராஷ்டிர செய்திகளுக்கு ஒதுக்கிவிட்டு மீதி பக்கங்களைத் தமிழ்நாட்டுச் செய்திகளால் நிறைக்கிறார்கள் என்று யோசித்தால், அங்குள்ள தமிழர்களின் மனவோட்டம் புரிந்துவிடும்.


கரோனா தொற்று இந்தியாவில் தொடங்கியதுமே தாராவியை நினைத்து நான் கலங்கினேன். ஏனென்றால், நாட்டிலேயே நெரிசலான நகரம் மும்பை என்றால், மும்பையிலேயே நெருக்கடியான பகுதி தாராவி. சுமார் இரண்டு சதுர கிமீக்குள் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வசிக்கிறார்கள். அஞ்சியதுபோலவே, இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிக அதிகமானோர் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது மஹாராஷ்டிரத்தில்தான். எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தொட்டிருக்கிறது; இறந்தவர்கள் 1,075 பேரில் 432 பேர் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள். மும்பை தாராவியில் மட்டும் இதுவரையில் 344 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது; 18 பேர் இறந்திருக்கிறார்கள்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒட்டுமொத்த மாநிலத்திலும் 1.25 லட்சம் பேருக்குத்தான் கரோனா பரிசோதனை நடந்திருக்கிறது. இதில் தாராவியில் 1,000 பேருக்குப் பரிசோதனை நடந்திருந்தாலும் அதிசயம்தான். அதற்குள்ளேயே இந்நிலை என்கிறார்கள் அங்குள்ள ஊடகர்கள். தாராவியில் முதலில் இறந்தது அங்கே கிளினிக் நடத்திக்கொண்டிருந்த மருத்துவர். அதன் பிறகுதான், அங்கே கரோனா தடுப்பு நடவடிக்கைக்குள் இறங்கியது அரசு நிர்வாகம். ஆனால், ரேஷன் பொருட்களை விநியோகித்த மாநகராட்சி அதிகாரி, போலீஸ்காரர் என்று அடுத்தடுத்து கரோனா தடுப்புப் பணிக்காகத் தாராவிக்குள் சென்றவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதோடு, உயிரையும் இழக்க... கிட்டத்தட்ட தாராவியைக் கை கழுவிவிட்டார்கள் ஆட்சியாளர்கள். தாராவியில் வாழும் தமிழர்களோ நிலைகுலைந்து நிற்கிறார்கள்.

100 சதுர அடி வீட்டில் நாலு பேர் வாழும் வாழ்க்கை தாராவியுனுடையது. முக்கால்வாசி வீடுகளுக்குக் கழிப்பறை கிடையாது. பொதுக் கழிப்பறையும் இங்கே கரோனா வேகமாகப் பரவ ஒரு காரணம் என்கிறார்கள், ஆய்வுக்கு வந்த மருத்துவர்கள். இந்தச் சூழலில், சமூக இடைவெளியை எப்படிப் பராமரிப்பது? இது ஒருபுறம் இருக்க, ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் ஊரடங்கு, இங்குள்ள அன்றாடங்காய்ச்சிகளை வேலையிழப்பில் வேறு தள்ளியிருக்கிறது. “கையில் காசும் இல்லாமல், மரண பயம் துரத்த வேறு எங்கும் வெளியேறவும் முடியாமல் முடங்கிக் கிடப்பது பைத்தியம் பிடித்ததுபோல இருக்கிறது” என்கிறார்கள் அங்குள்ளவர்கள். மும்பையைப் பொறுத்தவரையில் தென்மேற்குப் பருவ மழை பேயெனப் பெய்யும் நகரம். இன்னும் மூன்று வாரங்களில் மழை தொடங்கிவிடும். அப்புறம் என்னவாகும் என்ற கவலை வேறு அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது.

தாராவித் தமிழர்களில் பெரும்பாலானோர் கோடை விடுமுறைக் காலத்தில் சொந்த ஊருக்கு வந்துசெல்வது வழக்கம். என் அண்ணன் ஒரு மாதம் முன்னரே அப்படித்தான் குடும்பத்தோடு ஊருக்கு வந்து சேர்ந்துவிட்டார். ஆனால், பள்ளிக்கூடம் செல்லும் வயதில் குழந்தைகளைக் கொண்டவர்கள் மார்ச் இறுதிக்காகக் காத்திருந்தார்கள். அதற்குள் ஊரடங்கு அறிவிக்கப்படவும் பெரும் தொகையிலானவர்கள் அங்கே சிக்கிக்கொண்டார்கள். ஊரடங்குக்கு முன்பு ஒருசில நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தாலும், கணிசமானோர் இங்கே வந்திருப்பார்கள்; அன்றைக்கெல்லாம் தாராவிக்குள் தொற்று பரவியிருக்கவில்லை. இப்போது கிட்டத்தட்ட கூண்டுக்குள் வைத்து அடைத்துத் தீயிட்ட மாதிரி தமிழர்கள் நிலை ஆகிவிட்டிருக்கிறது.

எல்லா மாநிலங்களையும்போல, மஹாராஷ்டிரமும் வெளிமாநிலத் தொழிலாளர்களை அவரவர் ஊருக்கு அனுப்புவதில் அவசரமாக இருக்கிறது. துயரம் என்னவென்றால், ஏனைய மாநிலங்கள் புலம்பெயர்ந்து தம் மாநிலங்களுக்கு வந்து, இன்னும் குடியேறாமல் இருப்பவர்களைத்தான் வெளியேற்ற முனைகின்றன; மஹாராஷ்டிரம் தாராவித் தமிழர்களையும் மனதளவில் அப்படியே பாவிக்கிறது. அங்குள்ளவர்கள் உயிர் பிழைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி, தமிழக அரசு சிறப்பு ரயில்கள் மூலம் அவர்களை இங்கு அழைத்துவருவதேயாகும். வெளிநாடுகளிலிருந்து திரும்புபவர்களை என்னென்ன வழிமுறைகளோடு இங்கே அனுமதிக்கிறோமோ அப்படி உரிய பரிசோதனைகள், தனிமைப்படுத்தல், கண்காணிப்பு வழியே அவர்கள் சொந்த ஊரில் இருக்க அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், ஒரு பெரும் பேரழிவை வேடிக்கை பார்த்தவர்களாக நாம் மாறிப்போவோம்.

மஹாராஷ்டிர மனோபாவம் எப்படி இருக்கிறது என்பதை சிவசேனையின் அதிகாரபூர்வப் பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கம் வெளிப்படுத்திவிட்டது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திருப்பியனுப்பப்பட வேண்டும்’ என்கிறது அதன் தலையங்கம். மராட்டியர்களுக்கு மருத்துவமனை, ஏனையோருக்குத் தற்காலிக முகாம் என்பதே நடைமுறையாகிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் தாராவித் தமிழர்கள். தாராவிக்கு அருகிலேயே பாந்த்ராவில் உள்ள ஒரு மைதானத்தில் அமைக்கப்பட்டுவரும் கூடாரத்தை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மும்பை, புனே போன்ற பெருநகரப் பிராந்தியங்களில் ஜூன் மாதம் வரையில் ஊரடங்கை நீட்டிக்கலாம் என்று மஹாராஷ்டிர அரசு ஆலோசிக்கிறது. மும்பையில் வாழும் பிற மாநிலத்தவர்களை அந்தந்த மாநிலங்களே பஸ்களில் அழைத்துச் செல்லட்டும் என்பது அம்மாநில அரசின் முடிவாக இருக்கிறது.

தொடர்ந்து ஒரு வாரத்துக்குக் கட்டணம் இல்லாமல் சிறப்பு ரயில் இயக்கலாம். அவ்வளவு கூட்டம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். டெல்லியிலிருந்து ஏற்கெனவே 3,000 பஸ்கள் மூலம் கணிசமான உத்தர பிரதேசத் தொழிலாளர்களை அந்த மாநில அரசு ஏற்கெனவே அழைத்துக்கொண்டிருக்கிறது. தாராவியின் அத்தனை கண்களும் இப்போது தமிழ்நாட்டு முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரை நோக்கித் திரும்பியிருக்கின்றன. என்ன செய்யப்போகிறோம் நாம். இன்னொரு முள்ளிவாய்க்கால் ஆகிவிடக் கூடாது தாராவி!

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.inமுள்ளிவாய்க்கால்தாராவிMumbai dharaviதமிழ்நாடுதமிழர்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x