Last Updated : 29 Apr, 2020 08:38 AM

 

Published : 29 Apr 2020 08:38 AM
Last Updated : 29 Apr 2020 08:38 AM

தொட்டுக் கும்பிட வேண்டாம்; சக மனுஷனா நெனச்சா போதும்!- மாநகராட்சி தூய்மைப் பணியாளருடன் ஓர் உரையாடல்

கரோனா எதிர்ப்புப் போராட்டத்தில் அர்ப்பணிப்போடு பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள் நம்முடைய தூய்மைப் பணியாளர்கள். மதுரை எல்லீஸ் நகர் பகுதியில், கையுறைகூட இல்லாமல் புதைசாக்கடையைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்த பணியாளர்களில், மதுரை மஞ்சம்பட்டிமேட்டைச் சேர்ந்த க.கோபிநாத்தும் ஒருவர். எந்த நம்பிக்கையோடு அவர்கள் இந்தப் பணியைத் தொடர்கிறார்கள் என்று உரையாடினேன்.

உங்கள் குடும்பப் பின்னணி பற்றியும், எப்படி இந்த வேலைக்கு வந்தீர்கள் என்றும் சொல்லுங்கள்…

அப்பா சமையல் வேலைக்குப் போயிட்டு இருந்தாரு. அம்மா என்னை மாதிரியே மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர். நான் ஒரே பிள்ளை. என்னைய எப்படியாவது இந்தத் தொயரத்துலருந்து வெளியேத்திப்புடணும்னு படிக்கவெச்சாங்க. நமக்கு இங்கிலீஷ் வரல. இங்கிலீஷ்ல பெயிலாகி பெயிலாகி படிப்பு மேலயே வெறுப்பு வந்துருச்சி. எட்டாப்போட நின்னுட்டேன். கொஞ்ச நாள்ல அப்பாவும் இறந்திட்டாரு. சும்மா சுத்துறேன்னு என்னையும் துப்புரவுப் பணியில சேர்த்துவிட்டாங்க அம்மா. இப்ப எனக்கு 32 வயசு. நாலு பொம்பளப் பிள்ளைங்க இருக்காங்க. மூத்தவள எட்டாம் வகுப்போட நிப்பாட்டிட்டோம். மத்த மகளுங்க ஸ்கூல் போயிட்டு இருக்காங்க. ச்சே, இப்படிப் படிக்காம விட்டுட்டோமேன்னு இப்பவும் கவலைப்படுறேன். ஆனா, பிள்ளைங்களப் படிக்க வெக்க முடியுதான்னு பாருங்களேன்.

இந்த நேரத்தில் உங்கள் வேலை எப்படி இருக்கிறது?

அம்மாவுக்குத் தெரு கூட்டுறது, குப்பை அள்றதுதான் வேலை. நான் புதைசாக்கடையைச் சுத்தம் பண்றேன். மாநகராட்சியில மட்டும் கிட்டத்தட்ட 3,000 பேரு வேலை பாக்குறோம். செய்ற வேலை ஒண்ணுதான்னாலும் வித்தியாசம் இருக்குது. நிரந்தரப் பணியாளர், தொகுப்பூதியப் பணியாளர், ஒப்பந்தப் பணியாளர், தினக்கூலின்னு. நான் ஒப்பந்தப் பணியாளர்ங்கிறதால, வார விடுப்புன்னு தனியா கெடையாது. எடுத்துக்கிடலாம், ஆனா சம்பளம் கெடையாது. மாசத்துல 30 நாளும் சரியா வேலைக்குப் போனா, 15 ஆயிரம் சம்பளம்; 11,500 ரூபா கையில கிடைக்கும். கடன்காரன் வாசல்லயே நின்னு வாங்கிட்டுப் போயிடுவான். அம்மா சம்பளத்தை வெச்சுத்தான் வண்டி ஓடுது. இந்த நேரத்துல எங்களப் பத்தி உயர்வா எழுதுறாங்க. எம்எல்ஏ, அமைச்சர் எல்லாம் காலைத் தொட்டுக் கும்பிடுறாங்க. அதையெல்லாம் படிக்கும்போது கூச்சமா இருக்குது. எங்களை சக மனுஷனா நெனைச்சு, வாழ்றதுக்குத் தேவையான சம்பளம் கொடுத்தாப் போதும்.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறீர்கள்?

10 முகக்கவசம், 1 கையுறை கொடுத்தாங்க. ரொம்ப அழுக்காகிடுச்சி. தொவைச்சித் தொவைச்சு மாட்டிக்கிறோம். அப்புறம், கார்ல போய்ட்டு வர்றவங்களாலயே எதை எதையெல்லாம் தொட்டோம்னு ஞாபகம் வெச்சுக்க முடியாது. குப்பை, சாக்கடை அள்ளுற நாங்க எப்படி எதையும் தொடாம வேலை பாக்க முடியும்? அதுவும் முகமெல்லாம் வேத்துக்கொட்டி எறும்பு, பூச்சி கடிக்கும்போது முகத்தைத் தொடாம இருக்க முடியுமா? ஏதோ தெய்வத்துக்குக் கட்டுப்பட்டு ஓடிட்டு இருக்கு. கரோனாக்கு அப்புறம் வேலை அதிகமாகிடுச்சி. ஆனா, வேலைக்குப் போறதுக்கு வண்டி வசதி இல்ல. ஆஸ்பத்திரியில வேலை பாக்கிறவங்களுக்குத் தனியா பஸ் விடுறாங்க. நான் நடந்தோ சைக்கிள்லயோ போயிடுறேன். அம்மா மாதிரியான பெண்கள் இன்னமும் குப்பை வண்டியிலதான் போறாங்க. அதுல எங்கிட்டு சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குறது?

சிறப்பு ஊதியம், கரோனாவால இறந்தால் ரூ.50 லட்சம் நிவாரணம் என்று அரசு அறிவித்தது உங்களுக்கும் பொருந்தும்தானே?

அதெல்லாம் அரசாங்க ஆஸ்பத்திரி கரோனா வார்டுல வேலை பாக்குறவங்களுக்கு மட்டும்தாம் பொருந்துமாம். முழு விவரம் தெரியல. நீங்க எங்க சங்கத்துல கேட்டு எழுதுங்க. நாம எதுவும் தப்பாச் சொல்லிடக் கூடாது பாருங்க.

மதுரை மாநகராட்சி ஊழியர்கள் சங்கப் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன்: தூய்மைப் பணியாளர்களின் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. போதிய பாதுகாப்பு உபகரணங்கள் அவர்களுக்குத் தரவில்லை. மருத்துவப் பணியாளர்களுக்கும் போலீஸாருக்கும் செய்வதுபோல தூய்மைப் பணியாளர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றோம். வெறுமனே டெம்ப்ரேச்சர் பார்க்கும் கருவியை முகத்துக்கு நேராக நீட்டிவிட்டு அனுப்பிவிடுகிறார்கள். இதையெல்லாம் முறைப்படுத்த வேண்டும். சிறப்பூதியம், 50 லட்சம் நிவாரண அறிவிப்புகளிலும் உள்ளாட்சி தூய்மைப் பணியாளர்கள் இல்லை. அவர்களையும் சேர்த்து அரசாணை வெளியிட வேண்டும்.

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x