Published : 25 Apr 2020 11:35 AM
Last Updated : 25 Apr 2020 11:35 AM

கல்லூரி மாணவர்களின் பருவத்தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா? 

உயிர்க்கொல்லி நோயான கோவிட்-19 உலகையே மரண பயத்தால் திணறடித்துக்கொண்டிருக்கிரது. வைரஸ் தொற்றுநோய் பரவாமல் இருக்க சமூக இடைவெளியோடு வீட்டிலேயே தனித்து இருத்தல், விலகி இருத்தல், அடிக்கடி கை கழுவுதல், கண், வாய், மூக்கினைத் தொடாமல் இருப்பது என மருத்துவ முறை உச்சரிக்கப்படுகிறது.

மனித உயிர் காக்கும் தடுப்பு நடவடிக்கையாக கரோனா ஊரடங்கு தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் உலகெங்கிலும் மரணத்தோடு வாழ வேண்டிய அவலநிலை. கரோனா வைரஸ் சமூகப்பரவல் ஆக்கப்படாமல் இருக்க பல்வேறு வகையான அரசின் கெடுபிடியான நடவடிக்கை தேவைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மையோர் கூலி வேலைக்குச் சென்று ஊதியம் பெறுகின்றனர். இந்த ஊரடங்கால் அவர்களின் வாழ்க்கை நிலை ஸ்தம்பித்துக் கிடக்கிறது.

2020 மார்ச் மாதம் தொடங்கிய தொடர் ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரையிலும் நீட்சி கொள்கிறது. மாணவர் சமூகத்தின் தேர்வுக் காலத்தில் அவர்களைத் திக்குமுக்காடச் செய்திருக்கிறது. இது துயரத்தின் காலம். அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் பலரும் பருவத்தேர்விற்கான கட்டணத்தை இன்னும் செலுத்தாத நிலையில் கல்லூரிகள் மூடப்பட்டு விட்டன. வரும் ஜூன் மாதம் கல்லூரிகள் இயங்கத் தொடங்கியவுடன் பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின்படி தேர்வுகளை நடத்திட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கல்லூரி திறந்து பருவத் தேர்வுக் கட்டணம் செலுத்தக் கால அவகாசம் அளிக்கப்பட்டாலும், அரசுக் கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் குடும்பங்கள் பொருளாதாரச் சீர்குலைவால் நிலைகுலைந்துள்ளன. கட்டணம் செலுத்த இயலாமல் பொருளாதாரம் இழந்த நெருக்கடியுடன் பெற்றோர்களும் உள்ளனர். மூன்று மாதங்களாக கூலி பெற இயலாத நிலையில் பெற்றோர்கள் இருக்கும் சூழலையும் இத்தருணங்களில் கருத்தில் கொண்டு மாணவ மாணவியரின் கட்டணம் ரத்து குறித்து எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

ஜூன் மாதத்தில் பருவத் தேர்வுகள், ஜூன் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் என மாணவரின் உயர் கல்விக்கு இடையூறு வந்து விடக்கூடாது என்ற தொலைநோக்குப் பார்வை அரசிடம் உள்ளது. அதனைக் கல்வியாளர்கள் வரவேற்கிறார்கள். அடுத்த கணப்பொழுதில் விடுதிகளில் இருந்து கரோனா ஊரடங்கின் கெடுபிடியால் அவசரகதியில் சொந்த ஊர்களைத் தேடி ஓடிய மாணவர்களின் தேர்வுக்கான புத்தகங்கள் விடுதியிலேயே தங்கிவிட்டன. படித்துத் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள், அதிக விழுக்காடு பெற முடியாமல் போய்விடுமே என ஏக்கப் பெருமூச்சு பேராசிரியர்களையும் வருத்துகிறது.

மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்ற ஆக்கபூர்வமான உரையும் உயர் கல்வி அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது. இவ்வேளையில் தேர்வுக் கட்டணம் செலுத்தினால் தேர்வு எழுத முடியும் என்ற பல்கலைக்கழகம்/ கல்லூரியின் பொதுவான விதியை ரத்து செய்து மாணவ சமுதாய நலன் காக்கும் அரசாணையும் அமைந்தால் அதுவே காலத்தின் தேவையாக இருக்கும். நலன் நோக்கும் அரசு மாணவர்களது மனக் குரலைக் கேட்டு ஆவன செய்ய வேண்டும். இவ்வேண்டுதல் மாணவர்களின் கோரிக்கையாகவும் முன்வைக்கப்படுகிறது.

இதுவரை தேர்வுக் கட்டணம் செலுத்திடாத மாணவர்களால் இந்தப் பருவத் தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாது. அவர்களின் பெற்றோர் மூன்று மாத காலம் ஊதியம் ஈட்ட முடியாமல் வாழ்வாதாரம் நிலைகுலைந்துள்ளது. மார்ச் 17 ஆம் தேதி தொடங்கி அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள், அதற்கடுத்த வாரம், மாதம் என வாழ்வாதாரத்தைத் தேடியே மக்கள் பயணிக்கும் நிலையினை ஊரடங்கு விதைத்து விட்டது. நீண்டநாள் தனித்திருத்தலில் உற்றாரோடு உறவு உணவு பகிர்வு கொள்ள முடியாத இருண்மையான சூழல் பற்றிக்கொண்டுள்ளது.

கரோனாவின் வீரியம் விழிப்புணர்வு சமூகப் பரவலாக்கப்படாததால் முதலில் அறிவித்த ஊரடங்கின்போது கட்டாயப்படுத்தி பாதுகாப்புக் கருதி வீட்டுக்கு அனுப்பப்பட்ட கல்லூரி விடுதிகளிலிருந்து சென்ற மாணவர்கள் ஊரடங்கு கடைப்பிடிப்பதே நமது கடமை என்பதைக் கட்டளையாக்கிக்கொண்டு சென்றுவிட்டனர். 'ஊரடங்கு முடிந்துவிடும் இயல்புநிலை வந்துவிடும்' என எண்ணிய மாணவர்களுக்கு இது எப்பொழுதோ ஒரு முறை நடந்த காலவரையறையற்ற விடுமுறைபோல் இல்லை என்பது புரியாமல் போனது.

ஊரடங்கு முடிந்தால் விடுதிகளில் தங்கிப் படித்துத் தேர்வு எழுதி பட்டம் பெறலாம் என்ற எண்ணம் இப்போது ஏமாற்றத்தைத் தந்துள்ளது. மூன்றாம் ஆண்டு பருவத் தேர்வு முடித்து பணியில் சேர்வது, பட்ட மேற்படிப்பு, ஆய்வுக் கல்வி, பணித் தேர்வு என எதிர்நோக்கிக் காத்திருந்த ஜூன் மாதம் இப்போது மாணவர்களை ஏமாற்றத்தில் நிறுத்தியிருக்கிறது. 133 அரசுக் கல்லூரிகள் அரசு உதவி பெறும் கல்லூரிகள் நூற்றைத் தொடும் எண்ணிக்கை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் இருபதிற்கும் மேல் சுயநிதி கல்லூரிகள் 1500ஐத் தாண்டும் எண்ணிக்கை என சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 2020 ஏப்ரல் பருவத் தேர்வுக்காகக் காத்திருக்கின்றனர்.

எதிர்பாராத வைரஸ் தாக்கத்திலிருந்து தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு செய்துவருகிறது. தவிர்க்க முடியாத வகையில் வேலைக்குச் செல்ல முடியாமலும் கூலிகளைப் பெற்று பிள்ளைகளுக்குக் கல்விக் கட்டணங்களைச் செலுத்த முடியாமல் தவிக்கும் காலகட்டத்தில் பருவத்தேர்வுக் கட்டணத்தை ரத்து செய்திட வேண்டும் என்ற வேண்டுதல் அனைத்து மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. கரோனாவை வெல்வோம் என்ற உறுதியோடு மாணவர் குலமும் எதிர்த்து நின்று போராடிக் கொண்டிருக்கிறது.

ஊரடங்கை மதித்து வீட்டிற்குள்ளேயே தனித்திருத்தலைக் கடைப்பிடித்து வரும் மாணவச் செல்வங்களிடம் கரோனா குறித்ததான சம்பவங்களே மனனமாகிக்கிடக்கிறன. கால அட்டவணை போட்டு படிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்த மாணவர்களின் தேர்வுக் காலத்தை கரோனா காலன் கவ்விக்கொண்டது. அதனை விரட்டியடிக்க ஊரடங்கில் தொலைந்து போய்க் கொண்டிருக்கிறது காலம். ஆனால் அரசின் இணைகரமாக ஆங்காங்கே தங்களது இருப்பிடங்களில் இருந்தபடி அக்கம்பக்கத்து மக்களின் அன்றாட உணவுத் தேவைகளுக்காக பணம் படைத்தோரிடமிருந்து இல்லாதோருக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வழங்கிடும் பகிர்மானப் பணியாளர்களாகவும் மாணவ சமுதாயம் பயணிக்கிறது.

ஜோதிராணி

கிராமங்களிலும் கரோனா தொற்று விழிப்புணர்வுக் கல்வி மாணவர்களால் வீடுகளுக்குள்ளும் அறிவுறுத்தப்படுகிறது என்பதில் 'வகுப்பறைக் கல்வி வாழ்நாள் முழுவதும்' எனப் பேராசிரியர்களின் மனத்துள் விழிவிரித்து பெருமிதத்தோடு நோக்க வைக்கிறது. தேர்வுக்குரிய புத்தகங்களைக்கூட அள்ளி எடுத்துக் கொள்ள அவகாசம் இல்லாத மாணவர்கள், இன்று பட்டினியை விலக்கவே பெற்றோர்களுடன் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர் எனும் செய்தி பேராசிரியர்களின் செவிகளில் குமைந்து கொண்டிருக்கிறது.

மாணவர்கள் தேர்வுக் கட்டணங்களைச் செலுத்திடாத நிலை. இயலாத சூழல். உணவுத் தேவைகளை முழுமையாகவே பெற்றுக் கொள்ள முடியாமல் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அபாயமான சூழல். பெற்றோருக்கு வருவாய் இல்லாமல் போன அவசர ஊரடங்கு‌ காலம் மாணவர்களின் வாழ்வாதாரம் அற்ற இச்சூழ்நிலையைப் புரிந்து கொண்டு பருவத்தேர்வுக் கட்டணத்தை மாணவர்கள் செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்திலி ருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுமேயானால் அதுவே இன்றைய இக்கட்டான சூழலில் மாணவ சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய கல்விப்பணி ஆகும். அது நடந்தேற வேண்டும்தான்.

'ஊரடங்கு தளர்வு இல்லை' என்ற அரசின் அறிவிப்பால் அன்றாடக் கூலி வேலைக்குத் தடை, சமுதாய இடைவெளி என்ற கட்டுப்பாட்டால் தினந்தோறும் வீட்டுவேலைக்குச் சென்று கூலி பெறத்தடை, மீன்பிடித் தொழிலுக்குத் தடை, தனியார் நிறுவனங்களில் தொழில் செய்து ஊதியம் பெறுவது தடை இன்னும் பல்வேறு இக்கட்டான சூழல்களில் தான் தமிழக மாணவர்கள் பருவத்தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும் என மனக்குரலை எழுப்புகின்றனர். அவர்களது நியாயமான உரிமை கோரல் செவி மடுக்க பட வேண்டியதே. அரசு ஆவன செய்யும், ஆணை பிறப்பிக்கும் என நாம் நம்பிக்கை கொள்வோம்.

- முனைவர் க.அ.ஜோதிராணி, இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை,

காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, சென்னை-2.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x