Published : 24 Apr 2020 07:54 AM
Last Updated : 24 Apr 2020 07:54 AM

பாதுகாப்பு உடைகளைக் களப்பணியில் அல்லாதோர் பயன்படுத்திடல் குற்றம்

தார்மீக அறத்தைச் சமூக ஒழுக்கமாகக் கருதிடாத பணிக் கலாச்சாரத்தில் ஊறிய ஒரு சமூகத்துக்குக் கொள்ளைநோய் போன்ற ஒரு இக்கட்டான காலகட்டத்தில் எதையெல்லாம் சட்டரீதியாக வலியுறுத்த வேண்டும் என்றே புரியவில்லை. கரோனாவை எதிர்த்துத் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றிக்கொண்டிருக்கும் மருத்துவர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரையிலான முன்களப் பணியாளர்களுக்கு உலகம் முழுவதுமே பாதுகாப்புக் கவச உடை கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், தமிழகச் சூழலை விவரிக்க வேண்டியதில்லை. கரோனா நோயாளிகள் தங்கியிருக்கும் இடங்களைச் சுத்தப்படுத்துவதுடன் மருத்துவமனைகளிலுள்ள மருத்துவக் கழிவுகள் தொடங்கி, ஊர் மக்கள் கொட்டும் குப்பைகள், கழிவுகள் வரை எல்லாவற்றையும் கையால் அள்ளும் தூய்மைத் தொழிலாளர்கள் பல இடங்களில் வெறும் கையுறைகூட இல்லாமல் பணியாற்றிடும் நிலையைப் பார்க்கிறோம். ஆனால், அரசு அதிகாரிகள் மூலம் இப்படியான களப் பணியாளர்களுக்கு அனுப்பப்படும் பாதுகாப்பு உடைகளை விநியோகத்துக்கு இடையில் அதிகார வர்க்கமே உருவிப் பயன்படுத்துகிறது என்று வெளிவரும் செய்திகள் கடும் கோபத்தை உண்டாக்குகின்றன.

அரசு மூலம் மாவட்டவாரியாகப் பகிர்ந்தளிக்கப்படும் முகக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மாவட்ட ஆட்சியரகம் வழியாகவே மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இந்த விநியோகத்தின் ஒவ்வொரு நிலையிலும் முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள் அதிகார வர்க்கத்தால் உருவப்படுகின்றன என்கிறார்கள். விளைவாகவே, அதிகாரிகள் ‘என்95’ முகக்கவசங்கள் அணிந்திருக்க, அரசு மருத்துவர்கள் சாதாரண துணிக்கவசங்களைப் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகிறது. பல மருத்துவர்கள் தங்களது சொந்தச் செலவில் இவற்றை வாங்க முயன்றாலும்கூட சந்தையில் தட்டுப்பாடு நிலவும் காலம் இது. சாதாரணர்களுக்கு இத்தகைய முகக்கவசங்களோ உடைகளோ தேவையே இல்லை. ஆனால், இது தொடர்பில் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டியவர்களே வழிப்பறியில் இறங்கினால் என்ன செய்வது?

பல மாதங்கள் நீளக்கூடிய பிரச்சினை இது. கரோனா எதிர்ப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரை அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு உடைகள், உபகரணங்கள் கிடைக்க எல்லா ஏற்பாடுகளையும் முடுக்கிவிடுவதோடு அரசு உடனடியாகச் செய்ய வேண்டிய இன்னொரு காரியமும் உண்டு. இந்தக் களப் பணியாளர்கள் தவிர, ஏனையோர் எவரும் பாதுகாப்பு உடைகள் பயன்படுத்துவதற்குத் தற்காலிகத் தடை விதிப்பதே அது. குறிப்பாக, அரசு விநியோகிக்கும் பொருட்களைத் தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கு உருவுவோர் மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுப்பதற்கான விதிமுறைகளையும் அரசு உருவாக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x