Published : 22 Apr 2020 07:50 AM
Last Updated : 22 Apr 2020 07:50 AM

வேலையைப் பறித்துச்செல்லக் காத்திருக்கும் கரோனா

சமைக்கலாம் வாங்க!

கரோனாவால் சில நல்ல விளைவுகளும் நடந்திருக்கின்றன. மேற்கத்திய நாடுகளிலெல்லாம் வீட்டில் சமைப்பது வழக்கமாக மிகவும் குறைவு. கரோனாவால் மேற்கத்தியர்கள் பலரும் சமையலறைக்குள் அடைக்கலம் புகுந்திருக்கின்றனர். குறிப்பாக, அமெரிக்காவில். சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி கொள்ளைநோய்க்கு முந்தைய காலகட்டத்தைவிட அதிகமாக இப்போது சமைப்பதாக 54% தெரிவித்துள்ளனர், இந்த நெருக்கடி முடிவுக்கு வந்த பிறகும் சமையலைத் தொடரப் போவதாக 51% பேர் தெரிவித்திருக்கின்றனர். ஜோவன்னா கெயின்ஸின் சமையல் புத்தகம் அமேஸானின் இணைய விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இணைய சமையல் வகுப்புகளில் பங்குகொள்வது ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது. வீட்டிலேயே சமைப்பதால் அமெரிக்கர்களின் பொழுதும் போகிறது, அவர்களின் ஆரோக்கியமும் வலுப்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

வேலையைப் பறித்துச்செல்லக் காத்திருக்கும் கரோனா

தொடர் ஊரடங்கின் விளைவாக இந்தியாவில் 40 கோடித் தொழிலாளர்கள் கடும் வறுமையில் சிக்குவார்கள் என்று எச்சரிக்கிறது சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ). இந்தியத் தொழிலாளர்களில் 90% அமைப்புசாராத துறைகளில்தான் வேலை செய்கின்றனர். இவர்கள் சுமார் 40 கோடிக்கும் மேல். இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் கிட்டத்தட்ட 19.5 கோடிப் பேர் முழு நேர வேலையை இழக்கக்கூடும். ஆட்குறைப்பு, வேலைநேர அதிகரிப்பு, ஊதிய வெட்டு ஆகியவற்றின் மூலம் இழப்புகளைச் சரிக்கட்ட நிர்வாகங்கள் முயலும். இந்த நிலைமையிலிருந்து தொழிலாளர்களைக் காக்க நான்கு அம்ச நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்கிறது ஐஎல்ஓ. முதலாவது, தொழில் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு, வருவாய் ஆகியவை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, பொருளாதாரத்தையும் வேலைவாய்ப்புகளையும் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவதாக, பணியிடங்களில் தொழிலாளர்களின் நலன், உயிர், உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கத் தனி கவனம் செலுத்த வேண்டும். நான்காவதாக, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசு, தொழிலாளர்கள், நிறுவன உரிமையாளர்கள் இடையே முத்தரப்பு ஆலோசனைகளும் பேச்சுகளும் நடைபெற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x