Last Updated : 25 Aug, 2015 08:31 AM

 

Published : 25 Aug 2015 08:31 AM
Last Updated : 25 Aug 2015 08:31 AM

22 மொழிகளும் ஆட்சிமொழிகளாக முடியும்!

அந்தந்த மாநில மொழியை அரசு மொழியாக்குவதால் நன்மையே விளையும்

பி.ஏ. கிருஷ்ணன், ‘இந்தியும் இந்தியாவும்’கட்டுரையில், ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு விஷயங்களை ஒரே தளத்தில் வைத்துப் பேசியிருந்தார். ஒன்று, இந்தித் திணிப்பு முகாம். இன்னொன்று, இந்தித் திணிப்பு எதிர்ப்பு முகாம்.

அக்கட்டுரையில் அவர் இவ்வாறு சொல்கிறார்: “இந்தி பல்வேறு முறைகளில் நுழைந்து, நமது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது என்பது உண்மை. மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் இந்தியும் ஆங்கிலமும்தான் பெரும்பாலும் ஆட்சி செலுத்துகின்றன. நெல்லை வங்கி ஒன்றில் இந்திப் படிவத்தைப் பார்த்த எரிச்சல் எனக்கு இன்றுவரை அடங்கவில்லை. நண்பர் ஒருவர் காங்கேயத்தில் இந்தி, ஆங்கிலம் மட்டும் அடங்கிய ஓர் அறிவிப்புப் பலகையின் புகைப்படத்தை எடுத்து எனக்கு அனுப்பியிருந்தார்”.

இந்தித் திணிப்புக்கு எதிராக இப்படிப் பேசும் கட்டுரையாளர், இந்தித் திணிப்பை எதிர்க்கும் தமிழ் ஆர்வலர்களை இதே கட்டுரையில் பின்வருமாறு சாடுகிறார்: “இந்த சுதந்திர தினத்தன்று சில போராளிகள் பெங்களூரை மையமாகக்கொண்டு, ட்விட்டர் போர் ஒன்றைத் தொடங்கினார்கள். 50,000 ஆண்டுகள் மூத்த தமிழைக் காக்க உறுதிபூண்டிருக்கும் இனமான இளஞ்சிங்கங்களும் (சில பல் போன சிங்கங்களும் இருக்கலாம்), தங்கள் செல்போன்களைக் கைகளில் எடுத்து ட்விட்டர் கணைகளால் இந்தியை வீழ்த்தும் புனிதப் போரில் தங்களை இணைத்துக்கொண்டனர். இவர்கள் கோரிக்கை விநோதமானது. அரசியல் சட்டத்தின் எட்டாவது பட்டியலில் இருக்கும் 22 மொழிகளும் ஆட்சிமொழிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதுதான் அது”.

மேலும், தமிழ்நாட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் பேசுபவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். கர்நாடகத்திலும் இதே நிலைதான். இந்தியாவில் 22 மொழிகளை ஆட்சிமொழிகளாக அறிவிக்கக் கோரும் போராளிகள், இந்த மாநிலங்களில் இம்மொழிகளை, ஆங்கிலத்துடன் - ஆட்சிமொழிகளாக ஏன் அறிவிக்கக் கூடாது என்று கேட்கிறார்.

வரலாற்று வழியில் வளர்ச்சியடைந்த மொழி (Standard Language) உருவாக்கம் - அதன்வழி தேசிய இன உருவாக்கம் (Nationality) - அதன்வழி தேச உருவாக்கம் (Nation State Formation) என்ற சமூக அறிவியல் கோட்பாடுகள் அனைத்தும் தமது இந்திய தேச வாதத்துக்கு முரண்களாகப் போய்விடும் என்பதற்காக, அவற்றைத் தவிர்த்துவிட்டு, இந்தியாவும் தமிழ்நாடு, கர்நாடகம் போன்ற மாநிலங்களும் ஒன்றுதான் என்ற ஒரு தருக்கமில்லா கருதுகோளை மறைமுகமாக முன்வைக்கிறார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களும், பின்னர் வந்த ஆட்சியாளர்களும்கூடக் கட்டுரையாளர் கூறுவதுபோல், இந்தியாவும் மாநிலங்களும் ஒரே தன்மை உடையவை என்று கருதவில்லை. இந்தியாவைத் தேசம் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் வரையறுக்கவில்லை. ஒன்றியம் என்றுதான் வரையறுத்துள்ளது. அரசமைப்புச் சட்ட உறுப்பு 1 - இந்தியா அதாவது, பாரதம் அரசுகளின் ஒன்றியம் என்றே கூறுகிறது.

மறுசீரமைப்புச் சட்டம்

தனிமொழி, தனிப்பாட்டு, வரலாற்று வழிப்பட்ட தாயகம் ஆகியவற்றைக் கொண்டு வளர்ச்சியடைந்த தேசிய இனமாக விளங்கும் பல தேசிய இனங்களை இந்தியா கொண்டுள்ளது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டதன் விளைவாகவே இந்திய ஆட்சியாளர்கள் 1956-ல் மொழிவழி மாநில அமைப்புக்குரிய மாநிலங்களின் மறுசீரமைப்புச் சட்டத்தை இயற்றினார்கள். இந்தியா ஒரு தேசம் என்ற வரையறைக்குள் வராது என்பதால்தான் ‘இந்தியன்’ என்று ஒரு தேசிய இனம் இருப்பதாக அரசமைப்புச் சட்டம் கூறவில்லை.

ஒரு மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில், 15%-க்கும் அதிகமான மக்களால் வேறொரு மொழி பேசப்பட்டால், அவ்வாறு பேசப்படும் வட்டாரங்களில் (தாலுகாக்களில்) அந்த மொழி துணை ஆட்சி மொழியாக இருக்கும். எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு முழுவதற்கும் தமிழ் ஆட்சிமொழி. வாணியம்பாடி வட்டத்தில் உருது துணை ஆட்சிமொழி; ஒசூர் வட்டத்தில் தெலுங்கு துணை ஆட்சிமொழி. உ.பி. போன்ற மாநிலங்களில் இந்தி ஆட்சிமொழி, உருது துணை ஆட்சிமொழி!

வலுவான வாதம் அல்ல

வரலாற்றின் அடிப்படையில் தனித்தனித் தேசங்களாக இருக்கக் தகுந்த பல தேசிய இனங்கள் இந்தியாவில் மாநிலங்கள் என்ற வரையறைக்குள் இருக்கின்றன. 40 லட்சம், 50 லட்சம், 60 லட்சம் என மக்கள்தொகை கொண்ட நார்வே, டென்மார்க், இஸ்ரேல் போன்ற எத்தனையோ நாடுகள் தனித்தனித் தேசங்களாக இருக்கின்றன. இந்தியாவில் இருக்கும் வளர்ச்சியடைந்த பல மொழிவழித் தேசிய இனங்கள் ஒன்றிணைந்து இருக்கும் சூழலில், அவர்களுடைய பிரதிநிதித்துவத்தை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும். இந்தியாவில் 22 மொழிகளை ஆட்சிமொழிகள் ஆக்க முடியாது என்பது வலுவான வாதம் அல்ல.

இந்திய மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கைக்கொண்டிருந்த சோவியத் ஒன்றியத்தில், 15 மொழிகளை ஆட்சிமொழிகளாக வைத்திருந்தார்கள். அவரவர் மொழியில் நாடாளுமன்றத்தில் பேசினார்கள். 1990-களில் அது உடைந்து நொறுங்க, ரஷ்ய தேசிய இனமும் ரஷ்ய மொழியும் மற்ற தேசிய இனங்களின் மீதும் மொழிகளின் மீதும் ஆதிக்கம் செலுத்தியதும் ஒரு காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இன்றும் சின்னஞ்சிறிய சுவிட்சர்லாந்தில் ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலி, ரோமன்ஷ் ஆகிய நான்கு மொழிகள் ஆட்சிமொழிகளாக இருக்கின்றன.

மாநில மொழியே அலுவல் மொழி

இந்தியாவில் 22 மொழிகள் ஆட்சிமொழிகளாவது என்றால் என்ன? எல்லா மாநிலங்களின் மக்களும் 22 மொழிகளைக் கற்க வேண்டும்; பயன்படுத்த வேண்டும் என்பதா? இல்லை. அந்தந்த மாநிலத்தில் மாநில அரசு அலுவலகமானாலும், மத்திய அரசு அலுவலகமானாலும் அந்தந்த மாநில மொழியே அலுவல் மொழியாக இருக்கும். மத்திய அரசு அலுவலகத்தின் அனைத்திந்தியத் தலைமையகத்தில் ஆங்கிலம் மட்டும் அலுவல் மொழியாக இருக்கும். மாநிலத் தலைமையகங்களிலிருந்து அனைத்திந்தியத் தலைமையகங்களுக்கு வரும் தகவல் தொடர்புகள் மட்டும் ஆங்கிலத்தில் இருக்கும். அன்றாடப் பணிகள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநில மொழியிலேயே மத்திய அரசு அலுவலகங்களை இயக்கும்.

அலுவல் மொழிகள் ஒன்றியத்தின் பயன்பாட்டுக்கான அலுவல் மொழிகள் சட்டம் 1963-ல் இயற்றப்பட்டது. பின்னர், இதில் 1976, 1987, 2007 ஆண்டுகளில் திருத்தங்கள் சேர்க்கப்பட்டன. மாநிலங்களில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் அலுவல் மொழிகளாக இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது பற்றிய சட்டம் இது.

இந்தச் சட்ட விதிகள் தமிழ்நாட்டைத் தவிர, இந்தியா முழுமைக்கும் பொருந்தும். இந்தச் சட்டத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழை அலுவல் மொழியாக ஆக்கிக்கொள்ளலாம். தமிழ்நாட்டில், இந்தி மற்றும் ஆங்கிலத்தை அலுவல் மொழியாக்க வேண்டிய கட்டாயமில்லை. தமிழகத்தில் இந்தி ஆதிக்கத்தை உள்ளே நுழைய விடாமல் தடுப்பதில் இன்றைக்கும் மொழிப் போராளிகளின் போராட்டங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு!

- பெ.மணியரசன், தலைவர்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்,
தொடர்புக்கு: tamizhdesiyam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x