Published : 17 Apr 2020 07:37 AM
Last Updated : 17 Apr 2020 07:37 AM

யாரா இருந்தா என்ன? பசி ஆத்துறதுதான் முக்கியம்!- உதவி வழங்கும் வீரப்பன் கூட்டாளி

கா.சு.வேலாயுதன்

அந்தியூருக்கு மேலே பர்கூர், தாமரைக்கரை, ஈரெட்டி, வந்தனை, கழுதைப்பாலி, காந்திநகர், புதுக்காடு, மைக்கேல்பாளையம் என மலைக்கிராமங்களுக்கு மூட்டை முடிச்சுகளுடன் நகர்கிறது அந்தக் குழு. ஊருக்குள் வயசானவர்கள், உடல் நலம் சுகமில்லாதவர்கள், குறிப்பாக முதியவர்களைத் தேடித்தேடிச் செல்கிறார்கள். அந்தக் குழுவில் அன்புராஜும் ஒருவர்; அந்தக் காலத்தில் வீரப்பனுக்கு ரேஷன் பொருள் கொண்டுபோனதில் தொடங்கி, வீரப்பனின் கூட்டாளியாகி, பிறகு 22 ஆண்டுகள் கர்நாடகச் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்தவர் இவர்.

எப்போதிலிருந்து இந்தச் சேவையைச் செய்கிறீர்கள்?

இங்கே கோவிந்தராஜ்ங்குறவரோட தலைமைல 80 பேர் கொண்ட சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்பு ஒண்ணு இயங்குது. அதன் மூலமா நிறைய பணிகள் தொடர்ந்து நடந்திட்ருக்கு. இப்ப கரோனாவுக்கும் ஆளாளுக்குப் பணம் போட்டு இதைப் பண்றோம். ஊரடங்கு எப்ப தொடங்கிச்சோ அப்போலருந்தே செய்றோம்.

உங்களுக்கு சேவை மனப்பான்மை எப்போது வந்தது? சிறைவாசம் ஒரு காரணமா?

இதுக்கு சிறைவாசமோ திட்டமிடலோ காரணமாக இருக்க முடியாதுனு நெனைக்குறேன். உதவணுங்குற மனப்பான்மை ஒருத்தருக்கு இயல்புலயே இருக்கணும். மக்கள்கிட்ட போறோம். அங்க மக்கள் படற கஷ்டங்களப் பாக்குறப்ப உதவணும்ன்னு தோணுது. அப்படியான மனசு கொண்ட நண்பர்கள்லாம் சேர்ந்து இதைச் செய்யுறோம்.

கரோனா சேவையில் நீங்கள் எதிர்கொண்ட வித்தியாசமான அனுபவம் ஏதாவது உள்ளதா?

ஒரு சம்பவம் ரொம்பவும் நெகிழ வச்சிட்டுது. ஈஸ்வரி அய்யண்ணன்னு ஒரு 85 வயசுப் பாட்டி. மந்தைங்கிற கிராமத்துல இருக்காங்க. பாட்டியோட பசங்க கல்யாணம் ஆகி வேற வேற ஊர்ல இருக்காங்க. இந்தப் பாட்டியோட பக்கத்து வீட்டுக்கு ரேஷன் கொடுக்கப்போனோம். அப்ப இவங்களைப் பாத்தோம். அவங்களோட குடிசைக்கு வெளியே ஒரு மோளி மேல உட்காந்துட்டு இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு கை மணிக்கட்டுக்குக் கீழே உடைஞ்சிருந்தது. அது எப்படியாச்சுன்னு கேட்டா அது பெரிய கதையே இருந்துச்சு. இந்தப் பாட்டி காட்டுக்குள்ளே போய் வெறகு பொறுக்கி ஓட்டல், வீடுகளுக்குப் போட்டு அதுல கிடைக்குற காசு வச்சு சாப்பிடுறாங்க. ஒத்த கையோடவே இப்பவும் காட்டுக்குள்ளே வெறகு பொறுக்கப்போறாங்க. அந்தப் பாட்டி கதையைக் கேட்டுட்டு, ஒரு பாக்கெட் ரேஷன் பொருட்களக் கொடுத்தோம். வாங்கவே மாட்டேன்னுடுட்டாங்க. “என் கையும் காலும் நல்லாத்தானே இருக்கு. பாடுபட்டு உங்கிறேன். நேத்துகூட ரெண்டு செமை வெறகு கொண்டுவந்து போட்டிருக்கேன். ஏதோ இல்லாதபட்டவங்களுக்குக் கொண்டுபோய் கொடு”ன்னுட்டு வூட்டுக்குள்ளே எந்திரிச்சே போயிட்டாங்க. 85 வயசுலதான் அந்தப் பாட்டிகிட்ட இருந்த தன்னம்பிக்கை என்னவோ பண்ணிடுச்சு. மறக்க முடியாத அனுபவம்.

வீரப்பனுக்கு அரிசி கொண்டுபோனது, இப்போது மக்களுக்கு அரிசி கொண்டுபோகுற அனுபவம். எப்படி இருக்கிறது?

அன்னைக்கு அதைச் செய்யுற சூழல். இன்னைக்கு வேற ஒரு சூழல். யாரா இருந்தாலும் வயிற்றுப் பசி ஆத்துறதுதான் என்னைப் பொறுத்தவர முக்கியம். முன்னாடி அதை ரொம்ப ஜாக்கிரதையாச் செய்ய வேண்டியிருந்தது. இப்ப சுதந்திரமாச் செய்ய முடியுது.

மனைவி, இரண்டு குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள். சேவை என்று வெளியே போகும்போது வீட்டில் எப்படிப் பார்க்கிறார்கள்?

கஷ்டம்தான். செக்கு எண்ணெய் தயாரிச்சு சின்ன அளவுல நானும் என் மனைவியும் விக்கிறோம். அதுல பெரிசா வருமானம் இல்லைதான். இருந்தாலும், என் மனைவிக்கு என் சேவை மனசு மேல மரியாதை உண்டு. ஒத்துழைப்பும் கொடுக்கிறாங்க. இப்பக்கூட சிறுசேமிப்பா வச்சிருந்த தொகையை இதுக்காகக் கொடுத்தாங்க.

- கா.சு.வேலாயுதன்,

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x