Last Updated : 09 Apr, 2020 08:26 AM

 

Published : 09 Apr 2020 08:26 AM
Last Updated : 09 Apr 2020 08:26 AM

கரோனா காலத்தில் எனக்கு வயது எழுபது

நான் இருக்கிறேன் என்பது இந்த கரோனா காலத்தில்தான் எனக்கு முழுமையாக உறைக்கிறது. இதற்கு முன்பு என் நினைவில் நான் அதிகம் இருந்ததில்லை. செய்யும் வேலையே நினைவாக நிற்கும். நண்பர்கள் நலம் விசாரிக்கிறார்கள். வெளியே போகாதீர்கள் என்று உறவினர்கள் எச்சரிக்கிறார்கள். அவற்றைக் காதில் வாங்கிக்கொள்கிறேன். “சரி, சரி” என்று பதில் சொல்கிறேன். நான் அறியாமலிருந்த என்னை இப்படி ஒரு போக்குவரத்து மூலமாகத் திரண்டு உருவாகுமாறு செய்துவிட்டார்கள். எப்படியோ எனக்குத் தற்சுரணை கிட்டிவிட்டது. இருக்கிறேன் என்ற நினைவே எடை கூடி, இப்படித் தடித்துப்போய் இதற்கு முன்பு வந்ததில்லை.

என்னைப் போன்ற முதியவர்களை எப்படிச் சமாளிப்பது என்பதில் உலகத்துக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள். இவற்றில் மருத்துவப் பிரச்சினைகள், பொதுச் சுகாதாரப் பிரச்சினைகளெல்லாம் சொற்பம். என்னைச் சந்திக்க வேண்டுமென்றால் நீங்கள் கைகளைச் சுத்தமாக்கிக்கொள்ள வேண்டும். கொஞ்சம் எட்டவும் நிற்க வேண்டும். நான் கரோனா தொற்றுக்கு இலகுவான இலக்கு. தொற்று கடத்துநராகவும் ஆகிவிடக்கூடும். நான் எச்சரிக்கையாக இருக்கும் சிறிய காரியம் உலகத்துக்குப் பெரிய பாதுகாப்பு.

விலகாமல் எட்ட நிற்பது

நோய்த் தொற்றுக் காலங்களில் நாமாகச் சமூகத்திலிருந்து விலகுவது புதிதல்ல. பூஜை அறை என்று இப்போது சொல்வதை நான் சிறுவனாக இருந்தபோது ‘சாமி வீடு’ என்பார்கள். எங்கள் வீட்டில் அதை ‘கோவிந்தன் வீடு’ என்போம். அதுவன்னியில், ‘மகமாயி வீடு’ என்று இன்னொரு அறையும் இருந்தது. அங்கேயும் நாள்தோறும் விளக்கேற்றுவோம். அப்போதெல்லாம் அடிக்கடி வைசூரி வரும். அம்மை போட்டிருந்தால் அந்த மகமாயி வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கொள்வோம்.

வேளாவேளைக்குச் சோறும் தண்ணீரும் கொண்டுவந்து அங்கே வைத்துவிடுவார்கள். வீட்டில் இருக்கும் மற்றவர்கள் அதிகம் வெளியே செல்ல மாட்டார்கள். வெளி நபர்களும் வீட்டுக்கு வர மாட்டார்கள். எச்சரிக்கையின் அடையாளமாக வீட்டுக் கூரையில் வேப்பிலை செருகிவிடுவார்கள். பிச்சை கேட்பவர்கள்கூட இதைப் பார்த்துவிட்டுத் தெருவோடு போய்விடுவார்கள். யாருக்கும் எதையும் வீட்டிலிருந்து கொடுக்க மாட்டோம். குறிப்பாக, நெல் போன்ற தானியங்களைத் தரவே மாட்டோம். அவசர காரியமாக உறவினர்கள் வந்துவிட்டால் இராத்தங்கலுக்குத் தடை. உறவுமுறையார்கள் விஷயத்தில் இந்தக் கெடுபிடி அதிகம்.

ஒருமுறை எங்கள் குடும்பம் அடங்கலும் வைசூரி வார்த்து மகமாயி வீட்டிலேயே முடங்கியிருந்தோம். அடுத்த வீட்டுக்காரர் பெரிய தூக்குவாளி ஒன்றில் சாதமும், இன்னொன்றில் காரமில்லாத குழம்பும் திண்ணையில் வைத்துவிட்டுக் கதவைத் தட்டிவிட்டுச் செல்வார். இரவில் அவர் வேறு இரண்டு வாளிகளில் உணவைக் கொண்டுவந்து வழக்கம்போல் கதவைத் தட்டிவிட்டு ஓடிவிடுவார். பத்து நாட்கள் வரை நாங்களும் அவரும் முகம்கூட பார்த்துக்கொண்டதில்லை. இந்த முழுச் சமூக விலகலைச் சொல்லி, பிற்காலத்தில் அவரை நாங்கள் கேலிசெய்தாலும் அந்த நேரத்தில் அதற்கு நல்ல பலன் இருந்தது.

தார்மீகப் பிரச்சினையாகுமோ?

பொதுச் சுகாதாரப் பிரச்சினை என்ற அளவில் நின்றுகொள்ளும் சங்கதியல்ல கரோனா. எத்தனை வயது ஆகியிருந்தால் ஒருவர் முதியவராவார் என்பது உலகளாவிய விவாதமாகும்போல் இருக்கிறது. ஆண்டுகளை எண்ணுவதோ கூட்டலோ கழித்தலோ அல்ல பிரச்சினை. இது மனித வர்க்கம் எளிதில் தீர்க்க இயலாத தார்மீகப் பிரச்சினையாகும் என்று இதற்கு முன் தெரிந்திருக்காது. பத்துப் பேருக்கு மட்டும் சிகிச்சை செய்ய வசதியுள்ள இடத்தில் ஒரு முதியவரையும் சேர்த்துப் பதினோரு நபர்கள் வந்துவிட்டால் என்ன செய்வது? அல்லது பத்தாவதாக அறுபது வயதில் ஒருவரும், பதினொன்றாவதாக எழுபது வயதில் ஒருவரும் வந்தால் கையைப் பிசைந்துகொண்டு நிற்போமா?

ஆயிரக்கணக்கில் தொற்றுக்கு ஆளாகும்போது இப்படி ஒரு நிலைமை உருவாகக்கூடியதுதான். மூப்பின் அளவை வைத்து இவர்களில் யாருக்கு சிகிச்சை தருவது என்று தீர்மானிக்க வேண்டியிருக்கும். யார் முதியவர் என்பதற்கெல்லாம் அகராதி விளக்கத்தை நம்ப முடியுமா? உலக நாடுகள் இதை எப்படிச் சமாளிக்கின்றன என்பது வரலாற்றில் பெரிய தகவலாகப் பதிவாகும்போல் இருக்கிறது.

யாராக மீள்வோம்?

“என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள். நீங்கள் எல்லாம் கரோனா காலத்தில் ஜாக்கிரதையாக இருங்கள்” என்று சொல்லத் தோன்றுகிறது. எனக்குச் சாதாரணமாகத்தான் அப்படித் தோன்றுகிறது. என் பெருந்தன்மைக்காக ஒரு ரகசிய பூரிப்பு எனக்குள் வந்து இந்தச் சாதாரணத்தன்மை கெட்டுவிடாமலிருக்க நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லில் எப்படியும் அசத்தியம் கலந்துவிடுவதால் வாய்விட்டு எதையும் இப்போது சொல்ல இயலாது. மனிதனுக்கு இது நிரந்தரச் சங்கடம் என்று நினைக்கிறேன். ஆயுள் அநியாயத்துக்கு நீண்டுவிட்டது. உயிரியல்ரீதியாக உடம்புக்கு ஆன ஆயுளைச் சொல்லவில்லை. அது வெளிப்படை. சிக்குவிழுந்த சம்பவ நூல்களாக அனுபவத்தில் ஆயிரத்தெட்டு முடிச்சுகள். நினைவில் பின்னோக்கிச் செல்ல பயம். இந்தப் பயணத்தில் செல்லப் பிராணியாகப் பின்தொடரும் தத்துவ விசாரத்தைப் பற்றி பயம். பயந்துகொண்டே எவ்வளவு தூரம் நினைவில் பயணிப்பது? இந்த வகை ஆயுள் நீட்சியைத்தான் சொன்னேன்.

எனக்குத் தெரிந்த பாஞ்சாலை என்ற மூதாட்டி ஒருவர், தள்ளாத காலத்தில் வீட்டுக்கு முன்னால் இருந்த மர நிழலிலேயே படுத்திருப்பார். ஒருநாள் அவருக்கு ஏதோ தோன்றியிருக்கிறது. வீட்டில் இருந்தவர்களைக் கூப்பிட்டு, சீக்கிரம் சாப்பிட்டுவிடுங்கள் என்று சொன்னாராம். எல்லோரும் சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர் காலமாகிவிட்டார். இப்போது சாப்பிடத் தாமதித்தால் நாளைக்கு அவர் காவிரிக்கரைக்குப் போய்ச் சேரும் வரை எல்லோரும் பட்டினி கிடக்க வேண்டியிருக்குமே என்று நினைத்திருப்பார். மனிதன் மரணத்தை வெல்ல முடியுமென்றால் அன்று ஒரு முறை அது மிகச் சாதாரணமாக நடந்திருக்கிறது. நம்மைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சராசரி மனிதனாகவே கரோனாவிலிருந்து மீளலாம். நம்மை விட்டுவிட்டுக் காவிய நாயகனாகவும் அதிலிருந்து மீளலாம். நாம்தானே நம்மை உருவாக்கிக்கொள்ள வேண்டும்!

- தங்க.ஜெயராமன், ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x