Published : 08 Apr 2020 07:24 AM
Last Updated : 08 Apr 2020 07:24 AM

தொகுதி மேம்பாட்டு நிதி அந்தந்தத் தொகுதிகளுக்கே செலவிடப்பட வேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை அடுத்த ஓராண்டு காலத்துக்கு 30% குறைத்து அவசரச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது இந்திய அரசு. மேலும், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், மாநில ஆளுநர்கள் தங்களது சமூகப் பொறுப்புணர்வின் அடிப்படையில் ஊதியத்தைக் குறைத்துக்கொள்ள தாமாகவே முன்வந்துள்ளதாகவும், அந்தத் தொகையும் மத்திய தொகுப்பு நிதியில் சேர்க்கப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க முடிவு. கரோனாவை எதிர்கொள்ள எப்படியெல்லாம் நிதியாதாரத்தை உருவாக்குவது என்று காலத்தே திட்டமிடுவது மிக அவசியமானது. ஆனால், இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்துசெய்துவிட்டு, அந்தத் தொகை ரூ.7,900 கோடியையும் இந்திய அரசின் தொகுப்பு நிதியில் சேர்க்கலாம் என்று எடுக்கப்பட்டிருக்கும் முடிவு மோசமானது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளையோ, ஏனைய கட்சிகளின் கருத்துகளையோ அறிந்துகொள்ளாமலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இது உள்ளடக்கியிருக்கும் பெரிய ஆபத்து என்னவென்றால், நாம் அதிகாரத்தையும் செயல்பாடுகளையும் பரவலாக்க வேண்டிய ஒரு நெருக்கடியான காலகட்டத்தில்கூட நேர் எதிராகக் குவிக்க முற்படுகிறோம் என்பதாகும். பெருநகரம் – கிராமப்புறம்; மக்கள்தொகை விகிதாச்சாரம் – பிராந்திய உணர்வுகள் இப்படி எந்தப் பாகுபாடும் இன்றி நாட்டின் ஒவ்வொரு தொகுதிக்கும் சமமாக, உத்தரவாதமாகச் செலவிடப்படும் ஒரு தொகை அது. இப்போது பொது நிதியாக்கப்படுவதன் மூலம் அந்தத் தொகையை மீண்டும் பெற ஒன்றிய அரசிடம் மன்றாடும் சூழல் உருவாகும். உதாரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு நம்முடைய மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் வழியே தமிழ்நாட்டுக்கு இப்படிக் கிடைக்கக்கூடிய தொகை ரூ.570 கோடி. இதே தொகையைத் தமிழகம் மீண்டும் பெறும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? மேலும், ஒரு சென்னைவாசியின் தொகுதிக்குக் கிடைக்கும் அதே தொகை ஒரு குமரிவாசியின் தொகுதிக்கும் கிடைக்கும் வாய்ப்பு எங்கே இருக்கிறது?

நகர்மைய மருத்துவக் கட்டமைப்பு நம் நாட்டினுடையது. தொகுதி மேம்பாட்டு நிதியை கரோனாவை எதிர்கொள்வதற்கென்றே செலவிடுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசு அறிவுறுத்துவதே போதுமானது. தமிழ்நாடு அரசு அப்படிதான் செய்திருக்கிறது; சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடியை கரோனாவை எதிர்கொள்ளச் செலவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. போதிய மருத்துவ வசதி இல்லாத தொகுதிகளிலும்கூட மருத்துவக் கட்டமைப்பு மேம்பட அதுவே வழிவகுக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x