Last Updated : 30 May, 2014 07:00 AM

Published : 30 May 2014 07:00 AM
Last Updated : 30 May 2014 07:00 AM

இரு துருவங்களின் சந்திப்பு

மோடி-ஷெரீஃப் சந்திப்புக்கு இரு நாடுகளிலும் எதிர்ப்புகள் இருந்தாலும் நல்லுறவுக்கு அவசியமான சந்திப்பு இது

புதிய அரசின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வருமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தபோது, சர்வதேச அரங்கிலேயே அநேகப் புருவங்கள் நெரிந்தன; காரணம் இல்லாமல் இல்லை.

ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டலில் செயல்படும் இந்து தேசியவாதக் கட்சி என்று கருதப்படும் பாரதிய ஜனதா கட்சி, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது பாகிஸ்தானின் ஒவ்வொரு தாக்குதலையும் வன்மையாகக் கண்டித்தது. 2008-ல் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்தவர்களை பாகிஸ்தான் அரசு தண்டிக்காதவரை அந்த நாட்டுடன் சுமுக உறவு கூடாது என்று மன்மோகன் சிங் அரசுக்கு விடாமல் நினைவூட்டிவந்தது. தாக்குதலும் சமாதானப் பேச்சும் ஒரே சமயத்தில் நடைபெற முடியாது என்று பிடிவாதம் பிடித்தது. எனவேதான், பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு அனுப்பியபோது எல்லோருடைய புருவங்களும் நெரிந்தன.

மோடி மீதான குற்றச்சாட்டு

குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோதுதான் 2002-ல் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பிறகு, வகுப்புக் கலவரங்கள் மூண்டன; அதில் 1,000-த்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு அவர்தான் காரணம் என்று இந்திய அரசியல் கட்சிகள் சாட்டிய குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பல நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மனித உரிமை ஆர்வலர்களின் நெருக்குதல் காரணமாக, நரேந்திர மோடிக்கு ‘விசா' தர முடியாது என்றுகூட அமெரிக்கா அறிவித்தது. பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய பக்கத்து நாடுகளில் மோடியை ‘இந்துமத வெறியர்' என்றே கண்டித்தனர்.

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, அந்த நாடு மூன்று முறை இந்தியாவுடன் போருக்கு வந்ததாலும், மும்பையில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் உட்பட பல நாசவேலைகளில் பாகிஸ்தானுக்குள்ள தொடர்பு அம்பலப்பட்டதாலும் பரஸ்பரம் அவநம்பிக்கையும் சந்தேகமும் தொடர்கிறது என்பதை மறுக்க முடியாது. சமீபத்தில்கூட இந்திய எல்லையில் திடீர் தாக்குதல் நடத்தி, இந்திய சிப்பாய்களைக் கொன்று அவர்களில் ஒருவரின் தலையை அறுத்து எடுத்துச்சென்ற கொடூரம்கூட நினைவை விட்டு அகலவில்லை.

காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் அவ்வப்போது முற்றுவதும் தணிவதுமாக இருக்கின்றன. வர்த்தக உறவுகளில் இந்தியாவுக்கு ‘மிகவும் விரும்பப்பட்ட நாடு' என்ற அந்தஸ்து வழங்க முடியாது என்று ராணுவத்தின் அறிவுரைப்படி பாகிஸ்தான் அரசு கூறிவிட்டது. உறவு சுமுகமாக இல்லாத காரணத்தாலேயே ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக எரிவாயுவையும் கச்சா பெட்ரோலிய எண்ணெயையும் குழாய் வழியாகக் கொண்டுவரும் திட்டத்திலிருந்தும் இந்தியா விலகியது. இந்தப் பின்னணியில்தான் மோடியின் அழைப்பும் அதை நவாஸ் ஏற்றதும் நடந்து முடிந்திருக்கிறது.

மக்கள் விருப்பம்

இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவு நிலவுவதை மக்கள் விரும்புகின்றனர். பாகிஸ்தானில் உள்ள குருத்துவாராக்களுக்கும் சிவன் கோயில்களுக்கும் சீக்கியர்களும் இந்துக்களும் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். ஆஜ்மீர் தர்கா உள்ளிட்ட இந்தியப் பகுதிகளுக்கும் பஞ்சாபிலும் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வசிக்கும் தங்களுடைய உறவினர்களைப் பார்க்கவும் பாகிஸ்தானியரும் இந்தியா வருகின்றனர்.

பாகிஸ்தான் நாட்டுப் பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உறவு வலுப்படுவதை மிகவும் விரும்புகின்றனர். பாகிஸ்தான் மாணவர்கள் இந்தியக் கல்வி நிலையங்களில் கல்வி பயில்கின்றனர். மிகவும் சிக்கலான அறுவைச் சிகிச்சை தேவைப்படும் உடனடி மருத்துவ சேவைக்கு பாகிஸ்தானியர்கள் இந்தியாதான் வருகின்றனர்.

குஜராத்தில் உள்ள சர் கிரீக் நீரிணைப் பகுதி, கடல் பரப்பில் மீன்பிடி உரிமை, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டி நீரைத் தேக்குவது, ஆடு - மாடு மேய்க்கும்போது எல்லை தாண்டி வந்துவிடும் மக்களைக் கைதுசெய்யாமல் அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவது போன்றவற்றில் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. சிலவற்றில் சுமுகமான ஒப்பந்தம் ஏற்படும் சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.

இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தங்களைச் செய்துகொண்டிருந்தாலும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய நிலைகள் நோக்கித் தாக்குதல் நடத்துகிறது. குஜராத் மீனவர்கள் மீன்பிடிக்கும்போது நீரோட்டம் காரணமாகவோ காற்று காரணமாகவோ எல்லை தாண்டிவிட்டால், கைதுசெய்து கராச்சி சிறையில் அடைத்துவிடுகிறது.

வாகாவில் வளரும் உறவு

இத்தனை பிரச்சினைகளுக்கும் இடையில் இருதரப்பு வர்த்தக உறவின் பலன்கள் தங்களுக்குச் சாதகமாக இருப்பதால், பாகிஸ்தானிய வர்த்தகர்கள் வாகா எல்லையருகில் இந்தியச் சரக்குகளுக்காகக் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். தங்களிடம் உபரியாக உள்ளவற்றை நல்ல விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர். எனவே, மக்களும் வர்த்தகர்களும் இரு நாடுகளுக்கிடையே உறவு வலுப்பட வேண்டும் என்று நினைக்கின்றனர். சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மேலும் பல ஊர்களுக்கும்கூட விரிவுபடுத்தக் கோரிக்கை வைக்கின்றனர்.

பாகிஸ்தானின் அரசியல் ஆர்வலர்களும் விவசாயம், தொழில்துறை - குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் - போன்றவற்றில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியைத் தாங்களும் அடைய வேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்கு இந்தியாவில் உள்ளதைப் போல தங்கள் நாட்டிலும் ஜனநாயகம் வலுப்படுவதை விரும்புகின்றனர்.

நரேந்திர மோடி பிரதமர் ஆனால், பாகிஸ்தான் மீது படையெடுப்பார், இரு நாடுகளும் அணு ஆயுதம் தயாரித்து வைத்திருப்பதால் போர் மூண்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றெல்லாம் அச்சமூட்டப்பட்டது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான நவாஸ் ஷெரீஃப், நரேந்திர மோடியின் அழைப்பு வந்ததும் தன்னுடைய கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை செய்தார். உள்நாட்டு அரசியல் நிலவரம், மக்களின் மனநிலை ஆகியவற்றின் பின்னணியில் மோடியின் அழைப்பை ஏற்பது என்ற முடிவை துணிந்து எடுத்தார். கடந்த ஆண்டுதான் அவரும் மக்களுடைய அமோக ஆதரவில் பிரதமரானார்.

ஆனால், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாகிஸ்தானில் ராணுவம்தான் அதிகாரம் மிக்க அமைப்பாகச் செயல்படுகிறது. அதன் நிழலில் ஐ.எஸ்.ஐ. போன்ற உளவு அமைப்புகள் செயல்படுகின்றன. இந்தியாவுக்கு நவாஸ் ஷெரீஃப் செல்வதை அவை விரும்பவில்லை. ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு இந்தியாதான் காரணம் என்று அவ்விரண்டும் கூறுகின்றன. பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாதக் குழுக்கள் பல இருக்கின்றன. அவையும் இந்தியாவுடன் பாகிஸ்தான் சுமுக உறவுகொள்வதை விரும்பவில்லை.

மோடியின் அறிவுறுத்தல்

“மும்பையில் நடந்த தாக்குதலில் தொடர்புள்ள பயங்கரவாதிகள் மீதான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தி அவர்களைத் தண்டிக்க வேண்டும், இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானத்துக்கும் மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கே நாளை மிகப் பெரிய அச்சுறுத்தலாக வடிவெடுக்கக்கூடிய பல்வேறு தீவிரவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும், பாகிஸ்தானின் தொழில், வர்த்தகத்துக்குப் பயன்படக்கூடிய வகையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த வேண்டும், ஏற்கெனவே பேச்சில் உடன்பாடு காணப்பட்டவற்றில் இறுதி ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்” என்று நவாஸ் ஷெரீஃபிடம் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

பாகிஸ்தானின் நிலையை எடுத்துரைத்த நவாஸ் ஷெரீஃப், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுமூலமே தீர்வுகாண வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டார். கருத்து வேறுபாடுகள் தொடர்பாக எதிர்காலத்தில் தொடர்ந்து பேசவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். அறிமுகச் சந்திப்பிலேயே இவ்வளவு பேசியிருப்பது பாராட்டுக்குரியது. நவாஸ் ஷெரீஃபின் மகள் கூறியதைப் போல, ஐரோப்பியக் கூட்டமைப்பைப் போல இந்தியாவும் பாகிஸ்தானும் ஏன் நட்புறவு கொள்ளக் கூடாது? அதற்கு இது நல்ல தொடக்கமாக அமையட்டும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x