Published : 06 Apr 2020 07:42 AM
Last Updated : 06 Apr 2020 07:42 AM

தற்சார்பால் ஊரடங்கை வெல்லும் தமிழ்ப் பேராசிரிய விவசாயி!

ஊரடங்கு குறித்த அச்சமும் கவலையும் எல்லோரையும் தொற்றிக்கொண்டிருக்கின்றன. பல லட்சம் மக்கள் தங்கள் வேலையையும் வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கின்றனர். எல்லோராலும் இந்த நாட்களை இயல்பாகக் கடத்த முடிகிறதா? அவசியமான பொருட்களெல்லாம் தங்குதடையின்றிக் கிடைக்கின்றனவா? வேலை இல்லாத இந்தச் சூழலில் அதை வாங்குவதற்குக் குறைந்தபட்சக் கையிருப்பு இருக்கிறதா? இப்படியே தொடருமானால் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? இப்படி ஓராயிரம் கேள்விகள் இருக்கின்றன. இப்படியான நெருக்கடியான சூழலுக்கு மத்தியில்தான் ஆச்சரிய மனிதராகத் தெரிகிறார் வேணுகுமார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தையைச் சேர்ந்தவர் வேணுகுமார். நாகர்கோவிலில் உள்ள தெ.தி.இந்துக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ‘ஒயிட் காலர்’ பணியில் இருக்கும் பலரும் விவசாயத்தைத் தள்ளிநின்றே பார்க்கும் சூழலில் கல்லூரியில் பேராசிரியராகவும், வீட்டில் தற்சார்பு மனிதராகவும் அசத்துகிறார் வேணுகுமார். அதிலும் இந்த ஊரடங்கு காலத்தில் தன் குடும்பத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வீட்டிலேயே தன் அன்றாட வாழ்க்கையின் ஊடே பூர்த்திசெய்திருக்கிறார்.

மலைக்க வைக்கும் வீட்டுத் தோட்டம்

வீட்டுப் புழக்கடையில் நிற்கும் பசுவிடம் பால் குடித்துக்கொண்டிருந்த கன்றுக்குட்டியை அருகில் இருக்கும் தென்னையில் கட்டிவிட்டு, “இதுக்குப் போகத்தான் எங்களுக்கு” என்று சொல்லியதில் பாசாங்கு இல்லை. பால் கறந்துகொண்டே என்னுடனான உரையாடலும் தொடங்கியது. அவருடைய அப்பா வீரியப்பெருமாள். அவரும் விவசாயி. அவருக்கு ஆறு பிள்ளைகள். வேணுகுமார்தான் கடைக்குட்டி. விவசாயக் குடும்பத்தில் பிறந்து பேராசிரியர் ஆகிவிட்டாலும் விவசாயம் மீதான ஆர்வம் விட்டுப்போகவில்லை. அன்றாடம் கல்லூரி செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்துவிட்டுத்தான் கிளம்புவாராம்.

“சொந்தமா விவசாய நிலம் இருக்கு. என்னோட வயல்ல பொன்மணி ரக நெல் வெதச்சிருக்கேன். போன தடவை அறுவடை செஞ்ச நெல்லு வீட்டுல இருப்பு இருக்கு. இது அடுத்த அறுவடை வரை போகும். அதனால, அரிசி பத்துன கவலை இல்லை. வீட்டுல மாடு இருக்குறதால பாலுக்கும் பிரச்சினை இல்லை. அதேபோல, கீரை வகைகள், வெண்டைக்காய், கொத்தவரங்காய், வெள்ளரிக்காய், கத்திரி, தக்காளி, பீன்ஸ்ன்னு காய்கறிகளும், நிறைய பயிறு வகைகளும் போட்டுருக்கேன். ஆக, காய்கறி வாங்கவும் வெளியே போக வேண்டிய தேவை ஏற்படலை” என்று மலைக்க வைக்கிறார். அதோடு நிறுத்தவில்லை. வீட்டுப் புழக்கடையில் தென்னந்தோப்பும் அவருக்கு இருக்கிறது. அதுவும் முழுக்க இயற்கை விவசாயம்தான். மாடுகளின் சாணத்தை உரமாக்கிவிடுகிறார். “பல வகைக் கீரைகளும் இருக்குறதால தினமும் ஒருவகை கீரையைக் கட்டாயமா சாப்பாட்டுல சேத்துக்குறோம். இதனால, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்குது. இந்த வாழ்க்கைப் பழக்கத்தால எங்களுக்கு மருத்துவச் செலவும் இல்ல” என்று சொல்லும்போது அவரிடம் வெளிப்பட்ட பூரிப்பு இருக்கிறதே!

மண்ணும் மனிதரும்

கரோனாவுக்கு முன்பாக அவருடைய மாவட்டத்தில் ஒக்கிப் புயல் வந்தபோதும் அவர்களுடைய இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துப்போனது. அந்நேரத்தில் ஒரு வாரத்துக்குக் கடைகள் ஏதும் திறக்கவில்லை. அதுகுறித்து கேட்டேன். “அந்த நேரத்துல அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் நாங்க காய்கறி கொடுத்தோம்” என்றார். இப்போது கரோனா காலத்திலும் இவர் வீட்டிலிருந்து அக்கம்பக்கத்தவர்களுக்குக் கீரை போகிறது. “நம்ம பாரம்பர்யமான காய்கறிகள், அரிசிக்கு நோய்களை விரட்டுற சக்தி இருக்கு. இன்னிக்கு அதைத் தொலைச்சுட்டு ஒட்டுரகங்களோட பக்கம் வந்துட்டோம். சந்தையில கிடைக்குற காய்கறிகள்ல இஷ்டத்துக்கு ரசாயன உரமும் பூச்சிக்கொல்லி மருந்தும் அடிக்குறாங்க. அதனால்தான், உணவே மருந்துன்னு இருந்த காலம் மாறிடுச்சு. அதேநேரம், வீட்டிலேயே இப்படி தற்சார்பா நாமே உற்பத்தி பண்ணிக்குறதால குறைந்தபட்சம் நம்ம வீடு, நம்ம பக்கத்து வீடுகளோட ஆரோக்கியத்தையாவது உறுதிசெஞ்சுக்கலாம்” என்றார். வேணுகுமார்கள் தெருவுக்குத் தெரு இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்.

வேணுகுமார் சொல்வதுபோல எல்லா மண்ணிலும் இயற்கையான வளம் இருக்கிறது. நாம் அதைக் கெடாமல் பார்த்துக்கொண்டால் போதும். அந்த மண் நம்முடைய உடம்பைக் கெடாமல் பார்த்துக்கொள்ளும். “இஷ்டத்துக்குப் பூச்சிக்கொல்லி அடிச்சு மண்புழுக்களைக் கொன்னுட்டு இப்போ மண்புழு உரம் வாங்கிப்போட்ற சூழலுக்கு வந்துட்டோம். எங்க குடும்பத்தோட ஆரோக்கியத்தை மனசுல வைச்சுத்தான் வீட்டுத் தோட்டத்திலருந்து பசு மாடு வளர்ப்பு வரை செஞ்சேன். ஆனா, ஆரோக்கியத்தைத் தாண்டுன அவசியமா அதை இந்த ஊரடங்கு காட்டிக் கொடுத்துருக்கு”என்று சொன்னவர், “அஞ்சு நிமிசம்” என்றவாறு வீட்டுத் தோட்டத்தில் தளதளவென்று விளைந்து நிற்கும் கீரைகளைப் பறித்து மனைவியிடம் கொடுத்துவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினார்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

அவருடைய விவசாயப் பணிகளுக்கு அவருடைய மனைவி லதா, மகன்கள் அஜயன், விஜய் கிருஷ்ணா என்று மொத்தக் குடும்பமுமே ஊக்குவிப்பாக இருக்கிறார்கள். எல்லோருக்கும் அதில் பெருமைதான். அவர்கள் வீட்டில் அவர்களே பார்த்துப் பார்த்து விளைய வைத்த காய்கறிகளைச் சாப்பிடுவதே பெரும் பேறு என்பதாகத்தான் அவருடைய குடும்பம் பார்க்கிறது. “வள்ளுவர் காமத்துப்பால்ல 1,107-வது குறள்ல இன்பத்தையே இதோட ஒப்பிட்டுச் சொல்லுறாரு. அதாவது, தன்னோட சொந்த வீட்டிலருந்து தன் உழைப்பால் வந்ததைத் தனக்குரியவர்களோடு பகிர்ந்து உண்பது சுகம்ன்னு சொல்லுறாரு. வள்ளுவர் தொடங்கி ஊரடங்கு வரை நமக்குக் கற்றுத்தர்ற பாடமும் இதுதான?” என்று விவசாயத்தில் தொடங்கிய பேச்சைத் தமிழாசிரியராக நிறைவுசெய்தார் பேராசிரியர் வேணுகுமார்.

அப்போது அவரது மனைவி லதா சற்று முன் பறித்த வல்லாரைக் கீரையில் சூப் செய்து கொண்டுவந்து கொடுத்தார். அதைக் குடித்துக்கொண்டே மதியத்துக்கு என்ன என்று கேட்டேன். “வல்லாரைத் தீயல், வல்லாரைத் துவையல், அப்புறம் தோட்டத்துல பறிச்ச காய்கறி வச்சு அவியல்” என்று அடுக்கினார். எல்லோருக்கும் இது சாத்தியம் இன்றி இருக்கலாம். ஆனால், வீடுள்ளோர், சிறு நிலம் உள்ளோருக்கும் முதலில் இந்தத் தற்சார்பு எண்ணம் வேண்டும்!

- என்.சுவாமிநாதன்,

தொடர்புக்கு: swaminathan.n@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x