Published : 02 Apr 2020 08:03 AM
Last Updated : 02 Apr 2020 08:03 AM

கெட்ட செய்திகள் இடையே  ஒரு ஆறுதல் செய்தி

ஒவ்வொரு நகரத்திலும் மருத்துவக் கழிவுகளுக்கான மையம்!

மருத்துவ அறிவியலுக்குச் சவால் விடும் நோய்த் தொற்றுகள், நாம் இதுவரையில் அலட்சியம் செய்துவரும் விஷயங்களைத் தலையில் குட்டியும் சொல்லிக்கொடுக்கின்றன. சீனாவை கரோனா தாக்கியபோது அனைத்து நகரங்களிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கான முழுமையான அமைப்புகள் இல்லை என்று உணரப்பட்டது. சில நகரங்கள் தங்களது மருத்துவக் கழிவுகளைப் பக்கத்து நகரங்களுக்கு அனுப்ப வேண்டிய நிலையும் ஏற்பட்டது. நாளொன்றுக்கு 4,902 டன் ஆக இருந்த சீனாவின் மருத்துவக் கழிவு அகற்றும் திறன், கரோனா தாக்குதலுக்குப் பிறகு 6,022 டன் ஆக உயர்ந்துள்ளது. ஏறக்குறைய 23% அதிகரிப்பு. இவற்றில் கரோனாவுடன் தொடர்புடைய 20% மருத்துவக் கழிவுகள் அன்றைய தினமே அகற்றப்பட்டுள்ளன. மருத்துவக் கழிவுகளைச் சுகாதாரமான முறையில் அகற்றுவதற்காக ஒவ்வொரு நகர எல்லைக்குள்ளும் குறைந்தபட்சம் ஒரு மையமாவது இந்த ஆண்டு இறுதிக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறது சீனா. 2022 ஜூன் மாதத்துக்குள் ஒவ்வொரு மாகாணத்திலும் மருத்துவக் கழிவுகளைச் சேகரிக்கவும் அவற்றைப் பாதுகாப்பான முறையில் கொண்டுசென்று அகற்றவும் முழுமையான அமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கெட்ட செய்திகள் இடையே ஒரு ஆறுதல் செய்தி

கரோனாவின் வீச்சு இன்னும் எவ்வளவுக்கு விரியும், எத்தனை நாட்களுக்குத் தொடரும் போன்ற கேள்விகள் எல்லோரையும் சுற்றிவரும் நாட்களில் சீக்கிரமே நாம் பழைய சூழலுக்குத் திரும்பிவிடுவோம் என்றும் சில மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சொல்லிவருகின்றனர். “நாம் கரோனாவை வெல்வோம். சமூக இடைவெளி நடவடிக்கை மொத்தமாகவே ஐந்து வாரங்களுக்கு மேல் இந்தியாவில் தேவைப்படாது” என்கிறார் மருத்துவர் டி.நாகேஷ்வர் ரெட்டி. இவர் சர்வதேசப் புகழ் பெற்ற குடல்-இரைப்பை சிகிச்சை நிபுணர். அதிக வெப்பம் நிலவும் பிரதேசங்களில் கரோனாவின் வீச்சு குறைவாகவே இருக்கும் என்று சொல்லும் அமெரிக்காவின் எம்ஐடியின் ஆய்வறிக்கை அடிப்படையில் இவர் பேசுகிறார். “32 டிகிரி வெப்பத்துக்கு மேல் கரோனாவால் ஆதிக்கம் செலுத்த முடிவதில்லை. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் இதற்கும் மேல்தான் காய்கிறது. குளிர்சாதன வசதியுள்ள இடங்களில் வேண்டுமானால் அது தப்பிப் பிழைக்கலாம். சமூகத் தொற்று ஏற்படாமல் இந்தியாவில் கட்டுப்படுத்திவிட்டோம் என்றே நான் கருதுகிறேன்” என்றெல்லாம் சொல்கிறார் நாகேஷ்வர். “ஏப்ரல் 15-க்கு மேலும் ஊரடங்கு தொடரும் என்று வரும் செய்திகள் ஆதாரமற்றவை” என்ற மத்திய அரசின் அறிவிப்பும்கூட இத்தகைய கணிப்பின் மீதுதான் நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. பார்ப்போம், நடந்தால் நல்லதுதான்!

வீட்டுக்கு ஒரு தோட்டம்

கரோனா நம் வாழ்க்கையில் உள்ள எவ்வளவோ ஓட்டைகளையும் தேவைகளையும் சுட்டுகிறது. முக்கியமானவற்றில் ஒன்று, வீட்டுக்கு ஒரு சிறு தோட்டம். எல்லோருக்கும் சாத்தியம் இல்லை என்றாலும், வீட்டோடு கொஞ்சம் நிலம் உள்ளவர்கள் அவசியம் செய்ய வேண்டியது இது. சமூக இடைவெளிக்கான இந்தக் காலகட்டத்தைக்கூட அதற்குச் செலவிடலாம். ஒருவேளை அடுத்த சில வாரங்களுக்கும் மேல் ஊரடங்கு நீடிக்கும் நிலை ஏற்பட்டால், காய்கறிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம். பொருளாதாரச் சிக்கனம், இயற்கை முறையிலான காய்கறி உற்பத்தி இவற்றோடு நேரத்தை நல்ல முறையில் செலவிட்ட மனநிறைவும் கிடைக்கும். உடல்நலத்துக்கும் நல்லது. கத்திரி, மிளகாய், தக்காளி, சுரை, பூசணி, பாகற்காய், வெண்டை, வெள்ளரி ஆகியவற்றை வீட்டுத் தோட்டத்திலேயே வளர்க்கலாம். சமையல் பாத்திரங்கள் கழுவும் தண்ணீரைக் கொண்டே இந்தக் காய்கறிகளை விளைவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x