Published : 31 Mar 2020 07:37 AM
Last Updated : 31 Mar 2020 07:37 AM

பயனாளிகளின் வீடுகளில் பணம் சேர்க்கப்பட வேண்டும்

ஊரடங்குக் காலத்தைச் சமாளிக்க ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் சில சலுகைகளை அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 8.7 கோடி விவசாயிகளுக்குத் தலா ரூ.2,000, ‘ஜன் தன்’ கணக்கு வைத்திருக்கும் 20.4 கோடி ஏழைப் பெண்கள் கணக்கில் மூன்று மாதங்களுக்கு தலா மாதம் ரூ.500, மூன்று கோடி வயதானவர்களுக்கும் விதவைகளுக்கும் தலா ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்தார். இவை அத்தனையும் வங்கிகள் மூலமாக, குறிப்பாக அரசு வங்கிகள், கிராம, கூட்டுறவு வங்கிகள் மூலமாகப் பயனாளிகளைச் சென்றடைய வேண்டும். இவர்களில் கணிசமானவர்களுக்கு ‘ருபே’ டெபிட் அட்டை இருந்தாலும், அவர்கள் அவ்வளவாக அவற்றைப் பயன்படுத்துவதில்லை. ‘ஜன் தன்’ கணக்குகளில் ஒரு பகுதி கணக்குகள் செயலற்றுப்போயிருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அவற்றைப் புதுப்பிக்காமல் பயனாளிகளுக்கு உரிய பயன் போய்ச்சேராது. இவர்களோடு மத்திய அரசு, மாநில அரசுகள், பொதுத் துறை ஊழியர்களின் ஓய்வூதியமும் வழக்கம்போல் ஏப்ரல் தொடக்கத்தில் அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆக, டெபிட் அட்டையைப் பயன்படுத்தி ஏடிஎம் மூலமாகப் பணம் எடுக்கும் சில கோடி பயனாளிகளைத் தவிர்த்துவிட்டு பார்த்தாலும், 15-20 கோடி மக்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் தங்கள் கணக்குகளில் உள்ள பணத்தை எடுக்க வங்கிக் கிளைகளுக்கு வர வேண்டியிருக்கும். எந்த நோக்கத்துக்காக மக்கள் தனிமைப்படுத்தப்பட்டார்களோ அந்த நோக்கத்தை இது சிதைத்துவிடும்.

சொந்த வாகன வசதி உள்ள வங்கிப் பணியாளர்கள் மட்டுமே வேலைக்கு வர முடிகிற காரணத்தால் தற்போது வங்கிகள் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு அடிப்படைச் சேவைகளை மட்டுமே வழங்கிவருகின்றன. இந்தப் புதிய நிலைமையைத் தற்போதுள்ள கட்டமைப்பை வைத்து எதிர்கொள்வது மிகவும் கடினம். மேலும், ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ள மத்திய அரசு அறிவித்துள்ள ‘அரசு வங்கிகள் இணைப்பு’, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

எனவே, நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க வேண்டும் என்றால் மத்திய அரசு மாற்று வழி பற்றி ஆலோசிக்க வேண்டும்.1) மூன்று தவணைகளில் ரூ.500 என்பதை ஒரே தவணையில் ரூ.1,500-ஆக வழங்க வேண்டும். 2) ‘ருபே’ டெபிட் அட்டை மூலமாகப் பணம் எடுக்க முடியாத பயனாளிகளுக்கு அவர்கள் வீட்டுக்குச் சென்று பணத்தைச் சேர்க்க ஏற்பாடு வேண்டும். 3) இதற்காக மாநில அரசுகளின் உதவியுடன் வங்கி முகவர்கள், கிராம தபால் சேவை ஊழியர்கள், கேரள அரசைப் போல் தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோரைப் பயன்படுத்தலாம். 4) இந்தப் பணியில் ஈடுபடுபவர்களுக்குத் தக்க பாதுகாப்பு, வாகன வசதி, நோய்த் தொற்று தடுப்பு உபகரணங்கள் ஆகியவை உரிய முறையில் வழங்கப்பட வேண்டும்.

- சி.பி.கிருஷ்ணன், தேசிய இணைச் செயலாளர், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்.

தொடர்புக்கு: cpkrishnan1959@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x