Published : 31 Mar 2020 07:34 AM
Last Updated : 31 Mar 2020 07:34 AM

சீனாவிலிருந்து ஒரு ஊரடங்கு அனுபவம்

சீனாவின் தென் மேற்கில் உள்ள செங்டு மாகாணத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்றுத்தரும் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். எனக்கு இரட்டைப் பெண்கள்; ஏரில், நடாஷா - இருவருக்கும் வயது 9. சீனாவில் ‘கரோனா பரவுகிறது’ என்று ஜனவரியில் அறிவித்ததும், செங்டு மாநில அரசு ‘வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்’ என்றது. இதன் பிறகு, சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர், ராணுவத்தினர், அத்தியாவசியப் பணிகள் செய்வோர் மட்டுமே வெளியே நடமாட அனுமதிக்கப்பட்டனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் குழுக்கள் மக்களுக்குத் தேவைப்பட்ட அவசியப் பண்டங்களை அவரவர் குடியிருப்புகளுக்கே கொண்டுவந்து தந்தன. நுகர்பண்டங்களை விற்கும் ஆன்லைன் விற்பனை நிலையங்கள் மருந்து மாத்திரைகள், எழுதுபொருட்கள், உணவு, ஆடைகள், முகக்கவசங்கள், கையுறைகள், கிருமிநாசினிகள் ஆகியவற்றை வீடுகளுக்கே கொண்டுவந்து சேர்த்தன.

எங்கும் நிசப்தம்

ஃபூ என்ற ஆற்றங்கரையோரம் 9 பெரிய குடியிருப்புகளைக் கொண்டது எங்கள் வளாகம். குழந்தைகளையும் முதியவர்களையும் வெளியே பார்க்க முடியவில்லை. அடுக்ககங்களில் தாழ்வாரம், மாடிப்படிகளில்கூட அவர்களைப் பார்க்க முடியவில்லை. சீனப் பெண்கள் வீடுகளில்கூட முகக்கவசம் அணிந்திருந்தனர். குடியிருப்புவாசிகள் தங்களுக்குள் நலம் விசாரிப்பதைக்கூட நிறுத்திக்கொண்டவர். லிஃப்டில் தப்பித்தவறி யாராவது ஏறினால்கூட அந்தப் பக்கமாகத் திரும்பி முதுகை மட்டுமே காட்டுவார்கள்.

வீட்டுக்குள்ளேயுமேகூட நிறைய மாற்றங்கள் உண்டாயின. வீடுகளிலும் ஒரே அறையில் கும்பலாக அமரக் கூடாது, ஒரே நேரத்தில் சாப்பிடக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படலாயின. குழந்தைகள் வீட்டில்தான் இருக்கிறார்களா என்கிற அளவுக்கு அமைதியானார்கள். ஆனால், குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகள், கார்ட்டூன் புத்தகங்கள், கதைப் புத்தகங்கள், வீட்டுக்குள்ளேயே விளையாட கேரம் போர்டுகள், செஸ் போர்டுகள், பிங்-பாங் எல்லாமே வீடுகளை வந்தடைய சீன அரசு வழிசெய்திருந்தது.

அடுக்ககத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டும் வெளியே செல்ல அனுமதி உண்டு. முகக்கவசம், கையுறைகள் அணிந்து செல்ல வேண்டும். வீதிகளில், கட்டிடங்களில், குடியிருப்புகளில், பொது வாகனங்களில் தவறியும் எச்சில் துப்பிடவோ, மூக்கைச் சிந்திடவோ கூடாது என்பது கண்டிப்பான ஆணை. கைக்குட்டையால் மூடாமல் இருமுவது கூடாது. வீதிகளில் ஒருபோதும் குப்பைகளைச் சிதறவிடக் கூடாது. வெளியே சென்று அடுக்ககம் திரும்பியதும் பாதுகாவலர் வெப்பமானியை நெற்றிக்கு நேராக நீட்டுவார். அதோடு பூட்ஸ் கால்களை நனைப்பதற்குக் கிருமிநாசினித் தண்ணீரானது ஈர பெயிண்டைப் போல தயாராக இருக்கும். அதில் காலை முழுக்க நனைத்த பிறகே உள்ளே செல்ல அனுமதிப்பார்கள்.

கைகொடுத்த நிறுவனங்கள்

மக்களுடைய பெரும்பாலான தேவைகளை ‘அலிபாபா ஆன்லைன் நிறுவன’த்தின் சகோதர நிறுவனமான ‘டாவ்பாவோ’ நிறுவனம்தான் பூர்த்திசெய்தது. வீட்டிலிருந்தே வேலை செய்வோருக்கு கணினிகள், பிரிண்டர்கள், மோடம்கள் வந்தன. தயார் உணவுகளை ‘ஃபிரஷ் ஹேமா’ கொண்டுவந்து தந்தது. இதுவும் அலிபாபா நிறுவனத்தின் சகோதர நிறுவனம்தான். மின்சார வயர்கள், அப்போதுதான் பறித்த இஞ்சி, மூன்று மாதங்களுக்குத் தேவையான சலவை சோப்புத்தூள், முகக்கவசம் என்று தொடர்ந்து வீட்டிலேயே இருப்பதற்குத் தயாராகப் பொருட்களை மக்கள் வாங்கினர்.

உணவு, உடை இரண்டுக்கும் பற்றாக்குறையே இல்லை. சிகரெட்டுகளும் மதுபானங்களும்கூடத் தட்டுப்பாடில்லாமல் கிடைக்குமாறு சீன அரசு பார்த்துக்கொண்டது. பொருட்களை டெலிவரி பையன்கள் அடுக்கக ஊழியரிடம் கொடுப்பார்கள். பைக்குள் என்ன இருக்கிறது என்பதை வெளியிலிருந்தே பார்க்க முடியும். கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே அது உள்ளே வந்தடையும்.

சீனாவின் பெருங்குறை

கரோனா வைரஸ் 2019 டிசம்பரில் அல்ல; முன்னதாக செப்டம்பரிலேயே தலைகாட்டியிருக்க வேண்டும். ‘சார்ஸ்’ வைரஸ் தந்த முன்னனுபவம் காரணமாக, கரோனா பரவத் தொடங்கியதும் சீனர்கள் பீதியடைந்தனர். மருத்துவமனைகளுக்கு முன்னால் பெருங்கூட்டமாகக் கூடினர். அவர்களிடம் குழப்பம், அச்சம், பதற்றம் இருந்தன. டிசம்பர் மாதம் இது வேகமாகத் தொற்றியபோது இந்த வைரஸ் எப்படிப்பட்டது என்று தெரியாமல் சிகிச்சையளிக்க முன்வந்த மருத்துவர்களும் சுகாதார ஊழியர்களும் களப் பலியானார்கள். கண் மருத்துவரான லீ வென்லியாங் இந்த நோய்ப் பரவலை அவதானித்த உடனேயே சக மருத்துவர்களை இணையதளம் வாயிலாக எச்சரித்தார். இவருடைய மின்னஞ்சல் வேகமாகப் பரவியது. இது அரசின் காதுகளையும் எட்டியது. உடனே, ‘பொறுப்பில்லாமல் நடந்துகொண்டு பொது அமைதியைக் குலைத்துவிட்டேன்’ என்று மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கினார்கள். இந்த நோய்க்கு அவரும் பலியானார் என்பதுதான் உச்சபட்ச சோகம்.

அரசு முதலில் கரோனா தாக்குதலை அடையாளம் காணத் தவறியதும், மூடிமறைத்ததும்தான் இவ்வளவு பெரிய விலையை சீனா கொடுக்கக் காரணம். அரசு விழித்துக்கொண்டதும் வெளியே அறிவித்தது. சீன அறிவியலாளர்கள் அந்த வைரஸின் மரபணு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் 3 நாட்களுக்குள் நவீனத் தொழில்நுட்ப உதவியோடு கண்டுபிடித்து உலகத்தையே எச்சரித்தனர். அப்போதும் அசட்டையாக இருந்த நாடுகளும் மக்களும்தான் அதற்கு இப்போது கடுமையான விலையைத் தந்துகொண்டிருக்கின்றனர்.

ஓரிரு மாதங்களுக்குப் பிறகு சீனாவில் மீண்டும் இந்த வைரஸ் பரவும் என்பது சர்வதேச அறிவியலாளர்களின் ஊகம். எனவே, சீனா மட்டும் அல்ல; உலகமே ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்.

© ‘தி நியூயார்க்கர்’, மிகச் சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x