Published : 30 Mar 2020 07:41 AM
Last Updated : 30 Mar 2020 07:41 AM

நியூயார்க் டைம்ஸின் பரிசு

நியூயார்க் டைம்ஸின் பரிசு

அமெரிக்காவின் பிரபலப் பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ அதன் இணையதளத்தில் கரோனா பற்றிப் படிப்பதற்குக் கட்டணம் தேவையில்லை என்று அறிவித்திருக்கிறது. 1851-ல் நிறுவப்பட்ட ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு வயது 169. ஜனவரி 22, 1996-லிருந்து இந்தப் பத்திரிகையின் இணையதளம் செயல்பட ஆரம்பித்தது. மாதத்துக்கு ஒரு கட்டுரை மட்டுமே ஓசியில் படிக்கலாம்; அதற்கு மேல் பணம் கட்ட வேண்டும் என்றிருந்த சூழலை கரோனா விழிப்புணர்வுக்காக மாற்றிக்கொண்டிருக்கிறது அது. நம்மூரில் ‘தி இந்து’ குழுமம் ஏற்கெனவே தன்னுடைய இணையதளங்களை முழுமையாகவே படிக்க அனுமதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ‘இந்து தமிழ்’ எப்போதுமே கட்டணமின்றிப் படிக்க அனுமதித்துவந்திருக்கிறது. கூடுதலாக இப்போது ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் மட்டும் இன்றி, ‘காமதேனு’ பத்திரிகையையும்கூட எந்தக் கட்டணமுமின்றி இணையத்தில் வாசிக்கலாம்.

எப்படியிருக்கிறது வடகிழக்கு?

இந்தியாவிலேயே இதுவரை கரோனாவின் குறைவான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் பிராந்தியம் வடகிழக்கு மாநிலங்கள்தான். எட்டு மாநிலங்களுக்கும் சேர்த்தே மொத்தம் இரண்டே நோயாளிகள்தான். ஆனால், இதன் பொருட்டு அந்த மாநிலங்கள் நிம்மதியாகவும் இருந்துவிட முடியவில்லை. மிக மோசமான மருத்துவக் கட்டமைப்பு இருப்பதும் வனங்களிலும் மலைகளிலும் உள்ள பழங்குடியினத்தவர் பரிசோதனை வளையத்துக்குள் வர முடியாமல் இருப்பதும்கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். ஆனாலும், எதையும் சந்திக்கத் தயாராகிவருகிறோம் என்கிறார் அசாம் நிதியமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா. வடகிழக்கு மாநிலங்கள் அத்தனைக்கும் மையமான அசாம் தலைநகர் குவாஹாட்டியில் உள்ள அரசு மருத்துவமனையானது கரோனா சிறப்பு மருத்துவமனை ஆக்கப்பட்டுள்ளது. மேலும், அசாமில் உள்ள ஏழு மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்துள்ள மருத்துவமனைகளையும் கரோனா சிறப்பு மருத்துவமனைகள் ஆக்கியிருப்பதோடு, 2,500 படுக்கைகள் கொண்ட தனியார் மருத்துவமனை ஒன்றையும் கரோனா சிறப்பு மருத்துவமனை ஆக்குகிறார்கள். தவிர, ‘எல் அண்டு டி’ நிறுவனத்துடன் சேர்ந்து ஐந்து தற்காலிக மருத்துவமனைகளுக்கான வேலைகளும் நடக்கின்றன. குவாஹாட்டியில் உள்ள உள்ளூர் விளையாட்டு மைதானம், 700 பேரைத் தனிமைப்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிராந்தியம் மீதான கவலையைவிடவும் நாடு முழுக்க விரவியிருக்கும் வடகிழக்கு மாநிலத்தார் மீதான கவலை இப்பிராந்தியத்தையே பீடித்திருக்கிறது.

உதவும் இரும்புக் கரங்கள்

கரோனா சிகிச்சைகளில் சீனா பல புதுமைகளைப் புகுத்தியது. அவற்றுள் ஒன்று இயந்திர மனிதர்கள். கரோனா நோயாளிகளைப் பராமரிப்பவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதைத் தவிர்க்கும் விதத்திலேயே வீடு, மருத்துவமனை போன்ற இடங்களில் கிருமி நீக்கம் செய்வதற்கு இயந்திர மனிதர்களைப் பயன்படுத்தியது சீனா. அடுத்து, கரோனாவால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலிக்கும் தன் இயந்திர மனிதர்களை அனுப்பியது. இப்போது தமிழகத்திலும் இயந்திர மனிதர்களைப் பயன்படுத்தலாமா என்று பரிசீலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நடந்தால் நல்லது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x