Published : 30 Mar 2020 06:55 AM
Last Updated : 30 Mar 2020 06:55 AM

ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து எப்போது யோசிக்கலாம்?

நிக்கோலஸ் கிறிஸ்டோஃப், ஸ்டூவர்ட் ஏ. தாம்ப்ஸன்

“வரவிருக்கும் ஈஸ்டர் அன்று தேவாலயங்கள் எல்லாம் கூட்டத்தால் நிரம்பியிருக்க வேண்டும் என்று அமெரிக்கா ஏங்குகிறது” என்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மாறாக, அமெரிக்காவில் வணிக நிறுவனங்களை ஒரு மாத காலம் மூடி, சமூக இடைவெளியை அனுசரிப்பதால் பெருந்திரள் பரிசோதனையைச் செய்யவும், பாதுகாப்புச் சாதனங்கள் உட்பட பல வசதிகளையும் மருத்துவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அவகாசம் கிடைக்கும் என்கிறார்கள் அமெரிக்க மருத்துவ வல்லுநர்கள். ஒரு மாதம் கழித்து சூழல் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து முழு முடக்கத்தைத் தளர்த்துவது குறித்து யோசிக்கலாம். அதேவேளையில், புதிதாக ஏற்படக்கூடிய தொற்றுகளைச் சமாளிக்கும் விதத்திலும் அப்போது மறுபடியும் தேவைப்படக்கூடிய முடக்கத்துக்கு ஏற்ப தயாராக வேண்டும்!

ஜனவரிக்கும் அக்டோபர் இறுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் 4.29 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்படக்கூடும். நிலைமை இப்படியே போனால் 3,32,200 பேர் மரணமடையக்கூடும். இந்த வைரஸ் சீறிப்பாய்ந்துகொண்டிருக்கும்போதும், நாம் நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தயாராக இல்லாத சூழலிலும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்ற ஏக்கம் மிகவும் ஆபத்தானது.

சமூக இடைவெளியின் இரு நன்மைகள்

நம்மிடம் தடுப்பு மருந்தோ, கும்பல் நோய்த் தடுப்பு சக்தியோ உருவாகாமல் இந்த சமூக இடைவெளியைக் கைவிட்டோம் என்றால் நிச்சயம் நோய்த் தொற்றின் மறு எழுச்சி வந்தே தீரும். சமூக இடைவெளியானது இரண்டு வழிகளில் நன்மை தரக்கூடியது. முதலாவதாக, மருத்துவமனைகளை வலுப்படுத்தவும், பரிசோதனை சிகிச்சைகள் மேற்கொள்ளவும் இந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இரண்டாவதாக, இந்தக் குறுக்கீடுகளால் நோய்த் தொற்றைக் குறைக்க முடியும், இதனால் மருத்துவத் துறை திக்குமுக்காடிப்போகாமல் தடுக்க முடியும். இந்த மோசமான காலகட்டத்தில் மக்கள் தங்கள் வேலைகளையும் சேமிப்புகளையும் வீடுகளையும் இழக்க நேரிடும்; கொண்டாட்டங்கள், திருமணங்கள், இறுதிச் சடங்குகள், பட்டமளிப்பு விழாக்கள் என்று வாழ்க்கையுடன் தொடர்பையும் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் கொடுக்கக்கூடிய எதுவும் இல்லாமல் போகலாம்.

ஆனால், பொருளாதாரத் துயரத்தை சற்று ஆற்றுவது எப்படி என்பது நமக்குக் கொஞ்சம் தெரியும். தனிநபர்களுக்குப் பண உதவி செய்யலாம், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கேற்ப நிதியுதவி செய்யலாம். இரண்டு நடவடிக்கைகளுமே சட்டத்தின் பகுதியாக வாஷிங்டனில் பரிசீலிக்கப்பட்டுவருகின்றன.

ஆபத்தான எண்ணங்கள்

பொருளாதாரம் நன்றாகச் செயல்படுவதற்காக வயதான சிலரின் உயிரைத் தியாகம் செய்வதில் தவறே இல்லை என்று சில முக்கியமான மரபுத்துவ அரசியலர்கள் பரிந்துரைத்துள்ளனர். “என் நாட்டைக் கொல்வதற்குப் பதிலாக நான் இறந்துபோவேன்” என்கிறார் அரசியல் விமர்சகர் கிளென் பெக். இந்தப் பார்வையில் இரண்டு பிழைகள் உள்ளன. முதலாவதாக, பொருளாதாரத்தை நாசப்படுத்திக்கொண்டிருப்பது சமூக இடைவெளி குறித்த விதிமுறை அல்ல, மாறாக நம் கட்டுப்பாட்டை மீறிய ஒரு வைரஸ்; பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்குச் சிறந்த வழி இந்தக் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்துவதுதான்.

இரண்டாவதாக, இந்த விமர்சகர்கள் தங்களைத் தாங்களே பலிகொடுப்பது பற்றி மேன்மையுடன் பேசும்போது அவர்கள் முன்னெடுக்கும் கொள்கைகள்தான் அதிக அளவிலான முதியவர்களையும் உடல்நலம் குன்றியவர்களையும் காவுகொள்ளும். மூத்த குடிமக்களின் மரணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தவறான தெரிவு. சமூக இடைவெளியைத் தளர்த்தும் எந்த முடிவும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.

“ஈஸ்டருக்குள் எல்லோரையும் ட்ரம்ப் வேலைக்கு அனுப்பினால், அதுவொரு பிரம்மாண்டமான தவறு என்று வரலாறு தீர்ப்பெழுதும்” என்கிறார் பெரியம்மை ஒழிப்பில் ஈடுபட்டவரும் ‘கொள்ளைநோய்களை ஒழித்தல்’ அமைப்புக்குத் தற்போது தலைவராக இருப்பவருமான டாக்டர் லாரி பிரில்லியன்ட். ஒட்டுமொத்த அமெரிக்காவையும் மூடுவதற்குப் பதிலாக எந்தப் பகுதிகளெல்லாம் ஆபத்தில் இருக்கின்றன என்பதைக் கண்டறிய விரிவான பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்கிறார் அவர். பொருளாதாரச் செயல்பாடுகளை நிறுத்திவைத்தல், அனுமதித்தல் என்று மாற்றி மாற்றி நாம் ஒரு ஆண்டுக்காவது செயல்பட வேண்டும். அப்படிச் செய்யும்போது எப்போதெல்லாம் நாம் தளர்த்துகிறோமோ அப்போதெல்லாம் இந்தக் கொள்ளைநோய் அதிகரிக்கும்; எப்போதெல்லாம் இறுக்கிப்பிடிக்கிறோமோ அப்போதெல்லாம் தணியும்.

கரோனாவின் ஆதிக்கம்

அதிகபட்சமான தொற்றுநோய் அளவும், அதிகபட்சமாக மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் அளவும் சேர்ந்து பெருநாசத்தை ஏற்படுத்துகின்றன. ஃப்ளூ காய்ச்சலைப் பொறுத்தவரை ஒருவர் இரண்டு மாதங்களில் 386 பேருக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்தக்கூடும் என்றால் அதே கால அளவில் ஒரு கரோனா நோயாளி 99 ஆயிரம் பேருக்குத் தொற்று ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கக்கூடும். மேலும், ஃப்ளூ காய்ச்சலைவிட 10 மடங்கு, அதாவது நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் 1% என்ற அளவில் மரணம் ஏற்படுகிறது.

1918 ஃப்ளூ கொள்ளைநோயின்போது அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரம் முனைப்புடனுன் தீர்க்கமாகவும் செயல்பட்டுப் பல உயிர்களைக் காப்பாற்றியது. தற்போதைய நெருக்கடியின்போது அஜாக்கிரதையாக இருந்த இத்தாலி, ஈரான், அமெரிக்கா போன்ற நாடுகளைவிட தென் கொரியா, தைவான் போன்ற நாடுகள் துரிதமாகவும் தீர்க்கமாகவும் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றன. ஆகவேதான், தொற்று நோயியலாளர்களும் பொதுச் சுகாதார நிபுணர்களும் முடக்கத்தை முன்கூட்டியே தளர்த்துவதற்கு எதிராகக் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

நிச்சயமற்ற சூழ்நிலைகளில் கடினமான முடிவுகள் எடுப்பதுதான் வாழ்க்கை. ஆகவே, சமூக இடைவெளியை அமெரிக்க அதிபர் மட்டுமல்ல; மக்களும் கடைப்பிடிப்பதே இப்போது மிகவும் முக்கியமானது.

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’,

தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x