Published : 26 Mar 2020 06:56 AM
Last Updated : 26 Mar 2020 06:56 AM

உயிர் காக்கும் போருக்கான முழு வசதிகளும் மருத்துவ வீரர்களுக்குக் கிடைத்திட வேண்டும்

ஒட்டுமொத்த நாட்டையும் வீட்டுக்குள் இருக்கச் சொல்லியிருக்கிறது இந்திய அரசு. கரோனா கிருமிப் பரவலைத் தடுக்க நூற்றிமுப்பத்தைந்து கோடி மக்களும் அடுத்த 21 நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். ஒட்டுமொத்த நாடும் வீட்டுக்குள் அமைதியாக உள்ளடங்கியிருக்கிறது என்றால், அது தம் இன்னுயிரைப் பணயம் வைத்து, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியிடமிருந்து மக்களைப் பாதுகாக்க நம்முடைய மருத்துவத் துறையினர் முன்னெடுத்துவரும் அர்ப்பணிப்பு மிக்க போரை நம்பித்தான். நாட்டு மக்களின் உயிருக்காகப் போரின் முன் வரிசையில் நிற்க ஒரு வீரர் தயாராகும்போது, அந்த வீரரின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஒட்டுமொத்த நாடும் அக்கறை கொள்வது அவசியமானது.

கரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் நாடு எழுப்பிக்கொள்ள வேண்டிய முதல் கேள்வி, ‘நம்முடைய மருத்துவர்கள் முதல் தூய்மைத் தொழிலாளர்கள் வரையிலான மருத்துவப் படையினர் துடிப்போடு பணியாற்றிட எப்படிப்பட்ட பாதுகாப்பான சூழலை அரசு உருவாக்கியிருக்கிறது?’ ஏனெனில், நோய்த் தொற்றுக்கு எளிதில் வாய்ப்புள்ள நிலையில் உள்ளவர்கள் அவர்கள். இவர்கள் அடையும் எந்தச் சேதமும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் இழப்பாகும். ஆக, மக்களுக்கான பணியில் இறங்கியிருக்கும் இவர்கள் ஒவ்வொருவரின் உடல் – மன நலத்தைப் பேண வேண்டிய பெரும் பொறுப்பு அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் இருக்கிறது.

ஆனால், அடிப்படையிலேயே இரட்டை முகம் கொண்ட சமூகம் நம்முடையது. ஒருபுறம், மருத்துவர்களைப் பாராட்டுகிறோம் என்று வீட்டு மாடங்களில் நின்று கை தட்டிக்கொண்டே, மறுபுறம் வாடகை வீடுகளில் உள்ள மருத்துவர்களைக் காலிசெய்யச் சொல்லி வீட்டு உரிமையாளர்கள் நிர்ப்பந்தம் அளிக்கும் செய்திகள் வெளியாவது நம்முடைய கயமைக்கான வெளிப்பாடு. சில மாதங்களுக்கு முன், அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி இங்கே எப்படியெல்லாம் சத்தம் வந்தது என்பதை யாரும் மறந்துவிட முடியாது. போகட்டும், இப்போதேனும் நம் சுகாதாரத் துறையினரின் முக்கியத்துவத்தை உணர்வோம். ஒரு நோயாளியை அணுகுபவர், அவர் மருத்துவரோ தூய்மைத் தொழிலாளியோ இணையான முக்கியத்துவத்தை இரு உயிர்களுக்கும் தரும் மனப்பாங்கைப் பெறுவோம். அதற்கேற்ப பாதுகாப்புத் திட்டங்களை வகுப்போம்.

மிக அடிப்படையான விஷயம் இது. மருத்துவர்கள், செவிலியர்கள் தொடங்கி தூய்மைத் தொழிலாளர்கள் வரை கரோனா தொற்றுக்கு எதிரான போரில் இறங்கியிருக்கும் ஒவ்வொருவருக்கும், அவர்களுக்குத் தேவையான கையுறை, முகக் கவசம், தலைப் பாதுகாப்பு உறை, ரப்பரால் ஆன காலணிகள் மற்றும் முழு உடலையும் மறைக்கும் தற்காப்பு உடைகள் அளிக்கப்பட வேண்டும். மேலும், அடுத்தடுத்த வாரங்களில் அதிகரிக்கலாம் என்று அஞ்சும் தீவிரமான சூழலை எதிர்கொள்ளத்தக்க வகையில் அதிகமான அளவில் இச்சாதனங்கள் இருப்பில் வைக்கப்பட வேண்டும். இவை யாவும் ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தக்கூடியவை என்பதால் ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய எண்ணிக்கையில் இவை தேவைப்படும். எனவே, போதுமான அளவில் இவற்றைத் தொடர்ந்து உற்பத்திசெய்வதும், கையிருப்பில் பராமரிக்க வேண்டியதும் அவசியமானதாகும்.

மிகவும் துரித கதியில் சிகிச்சைப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் சுழற்சி முறையில் பணிபுரியச் செய்ய வேண்டும்; தனித் தனிக் குழுக்களாகப் பிரித்து ஒரு குழுவினர் சிகிச்சை அளித்துவரும்போது மற்றொரு குழுவினர் போதிய ஓய்வெடுக்கும் வகையில் வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். அவசர காலச் சிகிச்சைகளை அளிக்க வேண்டியிருக்கும்போது, அதுவும் நோய்த் தொற்றுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளபோது மருத்துவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரலாம். அவர்களது பணிகளுக்கு இடையே அளிக்கப்படும் போதுமான ஓய்வுதான் அவர்கள் நல்ல மனநலத்துடன் பணிபுரிவதற்கு ஏதுவான சூழலை உருவாக்கும்.

சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு முழுமையான சுதந்திரத்தை அளிக்க வேண்டும். அவர்களது பணியில் எந்தவொரு புறக் காரணிகளும் தாக்கம் செலுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது. எதிர்பாராத சமயங்களில் உடனடியாக முடிவெடுப்பதில் தமிழக மருத்துவர்கள் கெட்டிக்காரர்கள். அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துவரும் அனுபவத்தால் அவர்களால் இக்கட்டான நேரங்களில் உடனடி முடிவுகளைத் துணிந்து எடுக்க முடிகிறது. பரிந்துரைகள் என்ற பெயரில் வெளியார் அவர்களது பணியில் குறுக்கிடுவது அறவே தவிர்க்கப்பட வேண்டும்.

மிக முக்கியமாக, சிகிச்சை பலனளிக்காமல் இறப்புகள் ஏதும் நிகழ்ந்தால், நோயாளியின் குடும்பத்தாரைப் போலவே மருத்துவரும் தமது சிகிச்சை பலனளிக்காமல்போனதை எண்ணி வருத்தப்படுவார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒருவேளை, மருத்துவர்கள் சங்கடத்துக்கு ஆளாக நேரிட்டால், அவர்கள் மேற்கொண்டுவரும் மற்ற சிகிச்சைகளும் பாதிப்புக்குள்ளாகும் என்பதை நம் சமூகத்தின் மனதில் இருத்த வேண்டும்.

குறைந்தது ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது உலகச் சுகாதார நிறுவனம். இந்த எண்ணிக்கையைக் கொண்டிருக்கும் வெகு சில மாநிலங்களில் ஒன்று நம்முடைய தமிழ்நாடு என்றாலும், கரோனா போன்ற அதிதீவிரப் பரவல் வேகம் கொண்ட ஒரு பூதத்தை எதிர்கொள்ள இன்னும் கூடுதலான சிகிச்சையாளர்கள் நமக்கு வேண்டும். உடனடியாக மருத்துவர்களை உருவாக்க முடியாத சூழலில் அடுத்தடுத்த நிலையில் கரோனா சிகிச்சைக்கு மட்டும் என்ற அளவில் ஒரு துணை மருத்துவர், செவிலியச் சிறப்புப் படையை வெகு வேகமாக நாம் பயிற்சி அளித்து உருவாக்க வேண்டும். எல்லோருக்கும் முன்னோடியாக இதற்கான செயல்திட்டம் ஒன்றைத் தமிழக அரசு உடனடியாகத் தீட்ட வேண்டும். மருத்துவர்களின் பாதுகாப்பில்தான் ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்புமே இன்று அடங்கியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x