Published : 25 Mar 2020 07:32 AM
Last Updated : 25 Mar 2020 07:32 AM

எப்படி இருக்கிறது அமெரிக்கா?

நியாண்டர் செல்வன்

உலகம் முழுவதும் கரோனா மிக வேகமாகப் பரவிவரும் சூழலில் அமெரிக்கா எப்படி இருக்கிறது என்பது மிக முக்கியமான கேள்வியாகிறது. ஏனெனில், உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் அமெரிக்கா இந்த நோய்த்தொற்றை எப்படி எதிர்கொள்கிறது என்பது உலகம் முழுவதும் கவனிக்கக்கூடிய விஷயமாகும். அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் வசிக்கும் தமிழனாக என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

சென்ற வார வியாழக்கிழமை அன்று நான் பணியாற்றும் நிறுவனத்தில் கரோனா தொடர்பான அவசரச் சந்திப்பு நடைபெற்றது. இரு தினங்களில் ஒட்டுமொத்த மாகாணத்துக்கும் நெருக்கடிநிலை அறிவிப்பு வெளியாகவுள்ளதால் வீட்டில் இருந்தபடி வேலை பார்க்கும்படி பணியாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் பின், வீட்டில் இருந்து வேலை செய்வதற்குக் கணிணி, மென்பொருள் ஆகியவற்றை நிறுவனம் வழங்கியது. சொன்னதுபோல அடுத்த இரு தினங்களில் விஸ்கான்ஸின் மாகாண ஆளுநரின் நெருக்கடிநிலை உத்தரவு வெளியானது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிடத் தடை விதிக்கப்பட்டது; பார்சல் வாங்கிச் செல்லலாம். பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. விடுதிகளும் மூடப்பட்டதால் வெளிநாட்டு மாணவர்கள் மிகுந்த சிரமத்துடன் சொந்த நாடு திரும்பினர். ஆனால், இவர்கள் நிலை பரவாயில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், தற்போது அமெரிக்க விமான நிலையங்கள் போர்க்களம்போல காணப்படுகின்றன. எந்த விமானம் எப்போது ரத்தாகும் என யாருக்கும் தெரியாத நிலையில் பயணிகள் மிகுந்த குழப்பத்துடன் இருக்கிறார்கள்.

பள்ளிகள் அனைத்தும் இணையக் கல்விக்கு மாறிவிட்டன. இதற்காக ஐபோன், ஆண்ட்ராய்ட் செயலிகளை உருவாக்கியிருக்கிறார்கள். எல்கேஜி முதல் இன்ஜினியரிங் வரை அனைத்து வகுப்புகளும் இணையம் வழிதான் நடக்கின்றன. பல மென்பொருள் நிறுவனங்கள் இதற்காக தன் செயலிகள், மென்பொருட்களை இலவசமாக்கியுள்ளன.

அதிபர் டொனால்டு ட்ரம்ப் தினமும் தொலைக்காட்சி வழியாக கரோனா பற்றிய தகவல்களைத் தருகிறார். மத்திய அரசு சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து அமெரிக்கர்களுக்கும் 1,000 டாலர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கரோனாவால் வேலை இழந்த அனைவருக்கும் வீட்டுக் கடனுக்கான ஒரு ஆண்டு மாதத் தவணையைத் தள்ளுபடி செய்திருக்கிறது. விமான நிறுவனங்கள், சிறு தொழில்களுக்கு டிரில்லியன் டாலர் மதிப்பில் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. உலகெங்கும் பல நாடுகளில் சிக்கியுள்ள அமெரிக்கர்களை மீட்பதற்காக ராணுவ விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை முழுக்கவும் அரசு செலவில் செய்யப்படுகிறது.

ஏப்ரல் மாதமானது இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு மிக முக்கியமான காலகட்டம். விசாவுக்கான லாட்டரி நடைபெறும் மாதம் அது. ஆனால், இந்தியாவில் உள்ள அனைத்து அமெரிக்கத் தூதரங்களிலும் அனைத்து வகை விசாக்களும் ரத்துசெய்யப்பட்டுவிட்டதால் அமெரிக்கக் கனவுடன் இருக்கும் இந்தியத் தொழிலாளிகள், மாணவர்கள், பயணிகள் ஆகியோர் குழப்பத்தில் உள்ளனர். இந்த ஆண்டு இந்திய மென்பொருள் துறைக்கு மிகவும் சோதனையான காலகட்டம்தான்.

சாலைகளில் ஆள் நடமாட்டம் இல்லை. ஆன்லைனில் வேலை செய்துவருவதால் பொருளாதாரரீதியில் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், அப்படியான வாய்ப்பு இல்லாதவர்களுக்குக் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. என்னை நம்பியிருக்கும் நபர்களுக்கான சம்பளத்தைக் கொடுத்துவிட்டேன். அடுத்தடுத்த மாதங்கள் தொடர்ந்தாலும் தொடர்ந்து கொடுத்துவிடுவதாக உத்தரவாதம் கொடுத்திருக்கிறேன். வாய்ப்பு இருப்பவர்கள் இரண்டு மடங்காகக்கூட கொடுக்கலாம். அத்தியாவசியத் தேவையின்றி வெளியே போக வேண்டாம். அக்கம்பக்கம் நண்பர்கள் வீட்டுக்குக்கூட போக வேண்டாம். கூட்டமாகக் கூட வேண்டாம். நண்பர்களுக்கு உதவுங்கள். வயதானவர்கள், முடியாதவர்களுக்குக் கடைகளில் பொருட்களை வாங்கிவந்து கொடுங்கள்.

கடந்த பத்து நாட்களாக நான் வீட்டில்தான் இருந்துவருகிறேன். காய்கறி, மளிகை வாங்க மட்டுமே கடைகளுக்கு இரண்டு முறை சென்றேன். அரிசிக்கு இங்கே தட்டுப்பாடு நிலவுகிறது. இறைச்சி, முட்டை, பால் ஆகியவை தட்டுப்பாடின்றிக் கிடைப்பதால் உணவுக்குச் சிக்கல் இல்லை. கரோனாவுக்கும் முட்டை, சிக்கன், மட்டன் உண்பதுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அப்படியான வதந்திகளை நம்ப வேண்டியதில்லை. நான் நன்றாக சிக்கன் சாப்பிடுகிறேன். இப்போதைய மிக முக்கியமான சவால் தனிமையை எதிர்கொள்வதுதான். வீட்டில் தனிமையாக இருக்க வேண்டியிருப்பதால் நம்மை முடக்கிக்கொள்ள வேண்டியதில்லை. ஆரோக்கியமாக இருக்க வேண்டியது இந்தக் காலகட்டத்தில் மிகவும் அவசியம். வீட்டுக்குள் சாத்தியமாகும் பயிற்சிகளைச் செய்யுங்கள். டிவியை ஓடவிட்டு ஹாலில்கூட நடக்கலாம். இங்கே உடற்பயிற்சிக்கூடம் மூடப்பட்டுவிட்டது. உடற்பயிற்சிக்கு வீட்டுக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கிறேன். நேற்று வீட்டில் எட்டு கிமீ ஓடினேன். குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறேன். விடியோ எடிட்செய்து இணையத்தில் பதிவேற்றுவது, கான் அகாடமியில் கணிதம் படிப்பது என அவர்களை ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்தியபடி இருக்கிறேன். உள மகிழ்ச்சியும், நோய் எதிர்ப்புத் தன்மையுள்ள உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதும் இப்போது மிகவும் அவசியம்.

ஆகஸ்ட்டில்தான் நிலைமை சீரடையும் என ட்ரம்ப் சொல்லியிருக்கிறார். அதைத் தாண்டியும்கூட போகலாம். ஆனால், மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x