Published : 25 Mar 2020 07:29 AM
Last Updated : 25 Mar 2020 07:29 AM

ஒரு கொள்ளைநோயை எதிர்கொள்வது எப்படி?

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் வெளியிடப்படும்போது மருத்துவத் துறைக்கு எவ்வளவு மோசமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை விமர்சித்து செய்தித்தாள்கள் கட்டுரைகள் வெளியிடுவது வழக்கம். கரோனா அச்சுறுத்தல் பெரிதாகியுள்ள நிலையில் மருத்துவர்களும் மருத்துவத் துறை நிபுணர்களும் அரசு நிறுவனங்களும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வழிகாட்டுதலை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். எனினும், நமது சமீபத்திய எதிரியுடன் நாம் போரிடும்போது இந்திய மருத்துவத் துறையின் அடிப்படைக் கட்டமைப்பின் பலவீனங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன.

அரசு மருத்துவமனைகளை முற்றிலும் நம்பியிருக்கும் ஏழைக் குடும்பத்தின் நிலை என்ன என்பதை மூத்த இதழாளர் பி.சாய்நாத் தனது ‘எவரிபடி லவ்ஸ் எ குட் ட்ராட்’ என்ற நூலில் அருமையாக விவரித்திருப்பார். இந்தியாவில் 1994-ல் ஏற்பட்ட பிளேக் நோய்க்குக் கிடைத்த முன்னுதாரணமில்லாத ஊடகக் கவனத்தைப் பற்றி அவர் அந்நூலில் குறிப்பிட்டிருப்பார். ஏனெனில், மற்ற பல நோய்களைப் போல் இல்லாமல் அந்த பிளேக் கிராமப்புறங்களுடனோ நகர்ப்புறச் சேரிகளுடனோ நின்றுவிடவில்லை. நோய் உண்டாக்கும் பாக்டீரியாவுக்கு மேல்தட்டு வர்க்கத்தினரின் இடங்களுக்கு நுழையும் துணிச்சல் இருந்தது; சாய்நாத்தின் வார்த்தைகளில் சொல்வதென்றால், “இன்னும் மோசம் எதுவென்றால், அந்த பாக்டீரியாக்களால் விமானத்தில் இடம்பிடித்து க்ளப் கிளாஸ் இருக்கையில் பயணித்து நியூயார்க்குக்குச் செல்ல முடிந்தது.” கரோனா அந்த பிளேக்கைவிட ஆபத்து குறைந்தது என்றாலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து விமானத்தில் வந்த நோய்த்தொற்று கொண்ட பயணிகளாலேயே இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. இரண்டு நோய்களையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகக் கூறப்பட்ட வாதமல்ல இது; பாதிக்கப்பட்டோரின் சமூக, வர்க்க இருப்பிடங்கள் சார்ந்த சுகாதாரத் தேவைகளுக்கு இந்தியா எப்படி வேறுபட்ட விதத்தில் எதிர்வினை புரிகிறது என்பதைப் புரிந்துகொள்ள ஏதுவான வாதம் இது.

நோய்ப்பரவலை எதிர்கொள்ளுதல்

கரோனாவின் வருகையானது ஒரு விநோதமான காட்சியை அரங்கேற்றியிருக்கிறது. வழக்கமாக, தனியார் மருத்துவமனைகளை நாடுவோர் இப்போது பரிசோதனைக்கும் தனிமைப்படுத்தலுக்கும் அரசு மருத்துவ வசதிகளைச் சார்ந்திருக்கிறார்கள். இந்தியா நெடுங்காலமாக என்ன செய்துவந்ததோ அதைச் சிலர் உணர்வதற்கு கரோனா போன்றதொரு கொள்ளைநோய் வர வேண்டியிருக்கிறது. ஆக்ராவைச் சேர்ந்த ஒரு பெண் தனிமைப்படுத்தலிலிருந்து தப்பியோடிவிட்டார் என்று வெளியான தவறான தகவலை இங்கே எடுத்துக்கொள்ளலாம். “தூய்மையாக இல்லாத கழிப்பறைகளைக் கண்டு குமட்டிக்கொண்டுவருகிறது” என்று சொல்லி அந்தப் பெண் அரசு மருத்துவமனையில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள மறுத்துள்ளார். பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்கு எவ்வளவு குறைவாகச் செலவிடப்படுகிறது, அதன் மீது எவ்வளவு குறைவாக அக்கறை காட்டப்படுகிறது என்பதற்கான உதாரணம் இது. பொதுச் சுகாதார அமைப்புகளில் ஒழுங்காக இயங்கும் கழிப்பறைகளைக்கூட உறுதிப்படுத்த முடியாத சூழலில்தான் கரோனாவின் சவால் நமது சுகாதார நிர்வாகத்தின் முன் மலைபோல் நிற்கிறது.

பொதுச் சுகாதாரத்தை இந்தியா எப்படிக் கையாள்கிறது என்பதை வைத்துப் பார்க்கும்போது இந்த மருத்துவ நெருக்கடியை கேரளம் எதிர்கொள்ளும் விதம் அம்மாநிலத்துக்குப் பாராட்டுகளைப் பெற்றுத்தருகிறது. மருத்துவக் கட்டமைப்புகளின் முன்தேவைகளின் இருப்பாகட்டும், நிபா வைரஸை எதிர்கொண்ட அதன் அனுபவமாகட்டும் கரோனாவுக்குக் கேரள அரசின் தயார்நிலையானது மற்ற மாநிலங்களைவிட வலுவானது. இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்த கலந்தாலோசனைகள் ஜனவரியின் மையத்திலேயே தொடங்கிவிட்டன. பல்வேறு நாடுகள் நோய்த்தொற்றுகளை உறுதிப் படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் அந்த நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து வரைவு நடவடிக்கைகளை உருவாக்கிய முதல் மாநிலம் கேரளம். முதல் நோய்த்தொற்றாளரை ஜனவரி 30 அன்று கண்டறிந்த பின்பு அந்த நடவடிக்கைகளெல்லாம் மிகவும் தீவிரம் பெற்றன. அப்போதிலிருந்து அரசு மிகவும் விழிப்புடன் இருக்க ஆரம்பித்தது; நோய்த்தொற்று கொண்டவர்களிடம் நேரடியாகவோ இரண்டாம் நிலையிலோ தொடர்புகொண்டவர்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் முழு மூச்சில் முடுக்கிவிடப்பட்டன.

இத்தாலியிலிருந்து விமானத்தில் வந்த ஒரு குடும்பத்துக்கு நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்தபோது நிலைமை மிகவும் மோசமானது. தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு முதல் தொற்றாளருடன் தொடர்புகொண்ட 719 பேரை நாங்கள் கண்டறிந்தோம். பிற நாடுகளிலிருந்து திரும்பி வருபவர்களைக் கண்காணிக்கவும் சோதனையிடவும் நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியது. தங்கள் பயண வரலாறு குறித்த தகவல்களைச் சொல்லாமல் மறைப்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்தது. நோய்த்தொற்றாளர்களிடம் நேரடியாகவோ இரண்டாம் நிலையிலோ தொடர்புகொண்டவர்கள் பரிசோதிக்கப்பட்டு அவர்கள் தனிமை வார்டிலோ வீட்டுத் தனிமையிலோ வைக்கப்பட்டார்கள். அடுத்த நடவடிக்கை என்பது மதம் சார்ந்த பெரிய நிகழ்ச்சிகளை ரத்துசெய்தது. அடுத்ததாக, தனது கண்காணிப்பில் இருப்பவர்களின் பட்டியலை அரசு வெளியிட்டது. மிகவும் அண்மையில், வெவ்வேறு இடங்களிலிருந்து மாநிலத்துக்கு நுழையும் வழிகளில் மக்களைச் சோதனையிட ஆரம்பித்திருக்கிறது அரசு. கரோனா தொற்றுடன் பயணிகள் நுழைந்துவிடாதபடி எல்லா சோதனைச் சாவடிகளிலும் சுகாதாரப் பணியாளர்கள் இருத்தப்பட்டிருக்கின்றனர். ரயில் பயணிகளுக்கும் அப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

பிற நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை

சீனாவிடமிருந்தும் தென் கொரியவிடமிருந்தும் நாம் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் சாத்தியம் கொண்டவர்களை மிகத் தீவிரமாகக் கண்டறிந்து பரிசோதித்ததன் மூலம் நிலைமையை எப்படி மிகவும் திறம்பட அவர்கள் சமாளித்திருக்கிறார்கள் என்பதைத்தான். அன்றாடத்தை முடக்காமலேயே இந்த நெருக்கடியை தென் கொரியாவால் சமாளிக்க முடிந்ததற்குக் காரணம் விரிந்த அளவில் அந்த நாடு பரிசோதனைகளை நடத்தியதே என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். எனினும், அதுபோன்ற மேம்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு, சிறந்த சுகாதாரக் கட்டமைப்பை கேரளம் கொண்டிருந்தாலும், போதுமான அளவு வசதியின்மை, ஆய்வகங்களின்மை என்ற சவாலான நிலைமையை எதிர்கொண்டிருக்கிறது. இதுபோன்ற சூழலில் இருக்கும் வசதிகளையும் உள்ளூர் சார்ந்த முயற்சிகளையும் மிகவும் கவனமாகப் பயன்படுத்துவது முக்கியம். தெளிவான அரசியல் உறுதிப்பாடு, வலுவான பொதுச் சுகாதார சேவைகள், மக்கள் தரப்பிலிருந்து ஈடுபாடு ஆகியவை இருந்தால் மட்டுமே இதையெல்லாம் சாதிக்க முடியும். அரசு பரிந்துரைத்த நடவடிக்கைகளை மக்கள் தீவிரமாகப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். உறுதியான காரணங்கள் ஏதும் இல்லாவிட்டால் பரிசோதனைக்கு மக்கள் செல்லாமல் இருக்க வேண்டியதும் இதில் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், மக்கள் அப்படிச் சென்றால் பொதுச் சுகாதார அமைப்புகள் திணறிப்போய்விடும்.

சுயதனிமைப்படுத்தல் சார்ந்து செய்ய வேண்டியவை எவை, செய்யக் கூடாதவை எவை என்பதை அறிந்து கொள்ளுதல், அறிகுறிகளைக் கண்காணித்தல், உரிய நேரத்தில் மருத்துவ அமைப்புகளைத் தொடர்புகொள்ளுதல் போன்றவற்றுக்காக கேரள அரசு ‘கோகே டைரக்ட்’ (GoK Direct) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘சங்கிலியை அறுத்தெறிவோம்’ (ப்ரேக் தி செய்ன்) என்ற பிரச்சாரம் அடிப்படையான தூய்மையையும் சுகாதாரத்தையும் வலியுறுத்துகிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்ற முயலும் இந்த முன்னெடுப்பு மாநிலம் முழுவதும் வரவேற்பு பெறுவதுடன் தேசிய ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சமூக இடைவெளியும் பலனளிக்கக் கொஞ்ச நாட்கள் ஆகும் என்றாலும் அரசு அதிகாரிகளின் பளுவை இதெல்லாம் குறைக்கும். தணிப்புக் காலத்துக்கு (buffer period) அரசாங்கத்தால் வலு கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் பரிசோதனை வசதிகளும் வலுப்பெறும்; அறிகுறிகளைக் கொண்ட அதிகபட்ச நபர்களையும் பரிசோதிக்க முடியும். இந்த வகையில், கேரள மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று ‘மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கழகம்’ கேரளத்தில் 10 பரிசோதனை மையங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் தனியார் துறையின் உதவியுடன் கேரள அரசு நிறைய பரிசோதனை மையங்களை உருவாக்கத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது.

கேரளத்திடமிருந்து பாடம்; கேரளத்துக்குப் பாடம்

கரோனா பரவலுக்கு முன்பே வழிகாட்டு நெறிமுறைகளை கேரளம் உருவாக்கியதற்குக் காரணம் பொதுச் சுகாதாரத்துக்கு கேரள அரசு அளிக்கும் என்றும் மாறாத ஆதரவுதான். மருத்துவச் சேவைகளின் மேம்பாட்டுக்கான ஊக்கியாக நிர்வாகம் செயல்பட்டுவருகிறது. மருத்துவக் கட்டமைப்பின் விரிவாக்கத்தில் இது பிரதிபலிக்கிறது; உதாரணத்துக்கு, நிபா நோய்ப் பரவலுக்குப் பிறகு ஆலப்புழையில் ‘வைராலஜிக்கான தேசிய நிறுவனம்’ அமைக்கப்பட்டதைச் சொல்லலாம். பொதுச் சுகாதாரக் கட்டமைப்பில் அரசு உருவாக்கியுள்ள கண்காணிப்பு அமைப்பு வெற்றிகரமாக இயங்கிவருகிறது. இதன் மூலம் நோய்த்தொற்றுகளை மருத்துவத் துறையால் எளிதில் கண்டறிந்து அவற்றுக்கு எதிராகப் போரிட முடிகிறது. சேவை விநியோகம், சேவையைப் பெறுதல் போன்றவற்றில் மேம்பாடு அடையும் விதத்தில் கேரளத்தில் உள்ள மருத்துவக் கட்டமைப்பு அதிகாரப் பரவலாக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாகத்தான் தனிப்பட்ட தொற்றாளர்களைக் கண்டுபிடிப்பதிலும் ‘சங்கிலியை அறுத்தெறிவோம்’ பிரச்சாரத்தை செய்வதிலும் கேரள அரசு வெற்றிபெற்றிருக்கிறது.

‘ஆர்த்ராம் மிஷன்’ போன்ற தரமான சேவைகளும் அடிப்படைக் கட்டமைப்புகளும் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவை, ஆரம்பச் சுகாதார மையங்களைக் குடும்பச் சுகாதார மையங்களாக மாற்றும் முனைப்பில் இருக்கின்றன. பொதுச் சுகாதாரத் துறையை மீண்டும் நல்ல திசையில் செல்ல வைத்திருப்பதில் அரசு வெற்றிபெற்றிருக்கிறது.

- கே.கே.ஷைலஜா,

கேரளத்தின் சுகாதார மற்றும் சமூகநீதி அமைச்சர்.

© ‘தி இந்து’, தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x