Published : 23 Mar 2020 07:15 AM
Last Updated : 23 Mar 2020 07:15 AM

பதவி உயர்வில் இடஒதுக்கீடு: கவனம் கோரும் உத்தராகண்ட் போராட்டம்!

திலீபன் செல்வராஜன்

உத்தராகண்ட் மாநிலத்தில் அரசுப் பணியாளர்கள் அறிவித்த காலவரையற்ற வேலைநிறுத்தம் கவனம் கோருகிறது. இந்த வேலைநிறுத்தத்தில் ஒன்றரை லட்சம் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த பணியாளர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். பட்டியலின மற்றும் பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை முப்பதாயிரத்துக்கும் மேல். பதவி உயர்வில் இடஒதுக்கீடு தேவையில்லை என்று 2012-ல் உத்தராகண்ட் மாநில அரசு பிறப்பித்த உத்தரவைச் செல்லாது என்று 2019-ல் அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ‘பதவி உயர்வில் இடஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல’ என்று கடந்த பிப்ரவரியில் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கப்படாது என்ற உத்தரவை உத்தராகண்ட் நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இதை எதிர்த்துத்தான் இந்தப் போராட்டம்!

உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு பல விவாதங்களையும், முக்கியமாக அரசமைப்பைச் சார்ந்த நான்கு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அவை: இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையா? இடஒதுக்கீடு கொடுக்கச் சொல்லி நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட முடியுமா? பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு கொடுக்க அளவிடப்பட்ட புள்ளிவிவரங்கள் தேவையா? இடஒதுக்கீடு கொடுப்பதென்பது ஓர் அரசுக்குக் கட்டாயமா?

அடிப்படை உரிமையா?

பட்டியலினத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியின் கீழ் வருகிறது. அடுத்து அதன் உட்கூறுகள் 16 (4) மற்றும் 16 (4ஏ) ஆகியவை, பொது வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்கின்றன. சமவுரிமை என்பது நமது அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே உள்ளது. ஆனால், இந்த முகப்புரையை வைத்து வழக்கிட இயலாது. கூறு 16 வலியுறுத்தும் சமவுரிமையை இடஒதுக்கீட்டுக்கு எதிரானதாகப் பல வழக்குகளில் சித்தரித்துள்ளனர். ஆனால், உள்ளபடியே பார்த்தால் பிறப்பின் அடிப்படையில் வரலாற்றுரீதியாக உள்ளார்ந்து தாழ்த்தப்பட்ட காரணத்தாலும், அவர்களுக்கு சம வாய்ப்பு கிடைக்காத காரணத்தாலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு ஓர் உந்துதலும் வாய்ப்பும் கொடுக்க வேண்டும் என்பது தார்மீகக் கடமை. அரசமைப்புச் சட்டத்தின் கூறு 16 (2) வலியுத்தும் சம உரிமையும், கூறு 16 (4) அளிக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடும் ஒன்றுக்கொன்று முரணானது என்றும் பலர் வாதிடுகின்றனர். ஆனால், அவை ஒன்றுக்கொன்று ஒத்திசைந்து இயங்கக்கூடியவை.

இப்போது, பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டுமா என்ற இன்னொரு கேள்வியும் எழுகிறது. ‘ஆம்’ என்பதுதான் இதற்குப் பதில். ஏனென்றால், அவ்வாறு பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தாததால் தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பலரும் கீழ்நிலை ஊழியர்களான உதவியாளர்கள் அளவிலேயே இருக்கின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவைப் பார்த்தால், 70 ஆண்டுகள் இடஒதுக்கீட்டுக்குப் பின்னும்கூட சுமார் 3% மட்டும் இவர்களில் உயர் பதவிகளில் உள்ளனர் என்று தற்போதைய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. உச்ச நீதிமன்றத்திலும் ஒன்றிரண்டு தலித் நீதிபதிகளே உள்ளனர். உயர் பதவிகளில் நேரடி நியமனம் செய்யாதபோது, பணிமூப்பு முறையில் இடஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பது நியதி. கேரள அரசு எதிர் என்.எம்.தாமஸ் (1975) வழக்கில், பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதுவே சமூகநீதியாக அமையும். பதவியில் சேர்வது மற்றும் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு என்று பிரித்துப் பார்ப்பது நல்லதல்ல; இதனால், குழப்பம்தான் விளையும்.

இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் அரசமைப்புச் சட்டக் கூறுகள் அடிப்படை உரிமைகள் பகுதியின் கீழ்தான் வைக்கப்பட்டுள்ளன. எனவே, அதை நடைமுறைப்படுத்துவது அரசுக்குக் கட்டாயம். ஆனால், சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்போ, கூறுகள் 16 (4), 16 (4ஏ) ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது கட்டாயமில்லை, தேவை என்றால் நடைமுறைப்படுத்தலாம் என்று புதிய பொருள் விளக்கத்தை அளிக்கின்றன. இவ்விஷயத்தில், உச்ச நீதிமன்றத்துக்கு அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 142-ன் கீழ் அசாதாரணமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இடஒதுக்கீடுக்காக உச்ச நீதிமன்றம் அரசுக்குக் கட்டளையிட முடியும்.

புள்ளிவிவரம் தேவையா?

இந்தக் கேள்விக்கும் அரசமைப்புச் சட்டத்திலேயே பதில் உள்ளது. பிற்படுத்தப்பட்டோர் குறைவாகப் பிரதிநிதித்துவப்பட்டுள்ளனர் என்று அரசு ‘கருதினால்’ இடஒதுக்கீடு வழங்கலாம் என்கிறது கூறு 16 (4). இந்த ‘கருதினால்’ என்பதற்குப் புள்ளிவிவரச் சான்று தேவை எனப் பல தீர்ப்புகள் உள்ளன. ஆனால், அரசமைப்புச் சட்டத்தில் அவ்வாறு கூறப்படவில்லை. அரசின் ‘கருத்து’ என்பதை அதன் ‘விருப்பம்’ என்றும் பொருள்கொள்ளக் கூடாது. இந்திரா சஹானி வழக்கில் இடஒதுக்கீடு 50%-க்கு மேல் போகக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படி 50%-க்கு மேல் கொடுக்க வேண்டும் என்றால், பிற்படுத்தப்பட்டோர்கள் போதுமான அளவுக்குப் பிரதிநிதித்துவம் பெறவில்லை என நிரூபிக்க வேண்டும் என்றும் கூறியது. அவ்வழக்கில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டுக்கு எந்த அளவிடப்பட்ட புள்ளிவிவரத்தையும் கேட்கவில்லை. இருப்பினும், இந்தப் புள்ளிவிவரங்களைச் சேகரிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

1935-க்குப் பின் சுதந்திர இந்தியாவில் எந்த அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க முன்வரவில்லை. அப்படி எடுத்தால், பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர் தங்களது விகிதத்துக்கு ஏற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறவில்லை என்பது தெளிவாகத் தெரியவரும். எது எப்படி இருந்தபோதும், அரசமைப்புச் சட்டத்தின் கூறு 16(4), பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டுமென அரசு கருதினாலே போதுமானது என்று தெளிவாகக் கூறுகிறது. அதற்கு யாரிடமும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை.

தரம் குறையுமா?

தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்து அவர்கள் வேலைசெய்யும்போது வேலையின் தரம் குறைந்துவிடக் கூடாது என்றும் சமீபத்திய தீர்ப்பு கூறியுள்ளது. இப்படிக் கூறுவது தலித்துகளைத் தாழ்த்திப் பிரித்துப் பார்க்கும் செயலாகவே இருக்கிறது. இடஒதுக்கீட்டால் வேலையின் தரம் குறைந்துவிடும் என்று எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. இடஒதுக்கீடு கோருபவர்கள் அதற்குரிய நிர்வாகத் திறனைக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டக் கூறு 335 வலியுறுத்தியது. அந்தக் கூறும் 2000-ல் திருத்தப்பட்டுவிட்டது. அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு தலைவராக அம்பேத்கர் இருந்தபோதும்கூட இப்படியொரு கூறு சேர்க்கப்பட்டுவிட்டது என்பது வேதனை அளிப்பதுதான்.

இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் அதற்கு எதிரான வகையில் பொத்தாம்பொதுவாகத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரையிலும் இடஒதுக்கீடு தேவையா என்ற கேள்வி எழவில்லை. இப்போது அதன் அடிப்படையே கேள்விக்கு உள்ளாகியுள்ளது, அடிப்படைக் கட்டுமானத்தையே அசைக்கிறது. இந்த வழக்கைப் பெரிய அமர்வுக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும். இடஒதுக்கீடு கருத்தில் உடன்பாடு கொண்ட வழக்கறிஞர்களே அரசின் தரப்பில் வாதாட வேண்டும். தலித் அமைப்புகளையும் அவ்வழக்கில் தரப்பினர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பான்மையுள்ள பாஜக அரசு நினைத்தால், பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் வகையில் அதில் உள்ள தெளிவின்மைகளை நீக்கி அரசமைப்புச் சட்டத் திருத்தங்களையும்கூட செய்யலாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு.

- திலீபன் செல்வராஜன்,

இதய மருத்துவர் மற்றும் சமூக ஆர்வலர்.

தொடர்புக்கு: hidhileep@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x