Published : 20 Mar 2020 07:25 AM
Last Updated : 20 Mar 2020 07:25 AM

தமிழ்வழிக் கல்விக்கு முன்னுரிமை: தேவையான சட்டத் திருத்தம்

பத்து, பன்னிரண்டு வகுப்புகளிலும் தமிழ்வழியில் படித்தவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற முடியும் என்று தமிழகச் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டத் திருத்தம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பணியிடங்களுக்கான முதன்மைக் கல்வித் தகுதி தமிழ்வழியில் அமைந்திருந்தால் போதுமானது என்ற நடைமுறை இருந்துவருகிறது. இதனால், பள்ளிப் படிப்பிலிருந்து கல்லூரி வரையில் தொடர்ந்து தமிழ்வழியில் படித்தவர்கள் தங்களுக்கான முன்னுரிமையை முழுமையாகப் பெற முடியாத சூழல் நிலவியது. அதைச் சரிசெய்யும் வகையில் அமைந்திருக்கிறது தற்போது தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத் திருத்தம்.

தமிழ்வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டம் 2010-ல் இயற்றப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அரசுப் பள்ளிகளில், மிகக் குறிப்பாகக் கிராமப்புறப் பள்ளிகளில் பெரும்பாலும் தமிழ்வழியிலேயே படிக்கிறார்கள். எனவே, தமிழ்வழியில் படிப்பவர்களுக்கான முன்னுரிமையாக மட்டுமின்றி, பொருளாதாரரீதியில் பின்தங்கியவர்களுக்கான கூடுதல் வாய்ப்பாகவும் இது கருதப்படுகிறது.

பணியிடங்களுக்கான கல்வித் தகுதி பத்து அல்லது பன்னிரண்டாம் வகுப்பாக இருக்கும்போது அந்த வகுப்புகளைத் தமிழில் படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருக்கிறது. ஆனால், பட்டப் படிப்பு கல்வித் தகுதியாக இருக்கும் ‘குரூப் 1’, ‘குரூப் 2’ பணியிடங்களைப் பொறுத்தவரையில், தமிழ்வழிக் கல்விக்கான முன்னுரிமை பெறுவதற்குத் தேர்வர்கள் சில குறுக்குவழிகளைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர். பத்து, பன்னிரண்டு வகுப்புகளையும் கல்லூரிப் படிப்பையும் ஆங்கிலம்வழி படித்தவர்கள் அஞ்சல் மூலம் தமிழ்வழிச் சான்றிதழ்களைப் பெற்று அதையே தங்களது கல்வித் தகுதியாகவும் காட்ட ஆரம்பித்துவிட்டனர். அரசின் முக்கிய அதிகாரிகளைத் தேர்வுசெய்யும் ‘குரூப் 1’ தேர்வில் முன்னுரிமைகளைப் பெறுவதற்காக இந்த வழிமுறை கையாளப்படுகிறது.

மருத்துவத் துறை தொடர்பான பணியிடங்களுக்குத் தமிழ்வழிக் கல்வி முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆனால் சட்டம், பொறியியல் தொடர்பான பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படுவது மேலும் பல சிக்கல்களுக்குக் காரணமாகிறது. தமிழக அரசு சட்டக் கல்லூரிகளில் ஒருசில மட்டுமே தமிழ்வழிச் சான்றிதழ்களை அளிக்கின்றன. பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை தமிழ்வழி வகுப்புகள் என்பது ஆங்கிலத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானது. எனினும், தேர்வாணைய அறிவிப்புகள் தொடர்ந்து சட்டம், பொறியியல் உள்ளிட்ட துறைகளுக்கும் தமிழ்வழிக் கல்விக்கான முன்னுரிமைகளை அறிவித்துவருகிறது. குறிப்பிட்ட இந்தத் துறைகளில் தமிழ்வழிக் கல்விக்கு முன்னுரிமை அவசியமில்லை.

பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளாகத் தொடங்கப்பட்டுவரும் பெரும்பாலான கல்லூரிகளில் தமிழ்வழிச் சான்றிதழ்கள் அளிக்கப்படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டு, மாணவர்களும் தமிழிலேயே தேர்வுகளை எழுதும்போதும் ஆங்கிலவழி என்றே பல்கலைக்கழகங்கள் சான்றளிக்கின்றன. எனவே, அரசுக் கல்லூரி மாணவர்கள் பெறுகிற முன்னுரிமை வாய்ப்பைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். தொடர்ந்து தமிழ்வழியில் படித்தவர்களுக்கே முன்னுரிமை என்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், தொடர்ந்து தமிழ்வழியிலேயே படிப்பவர்களுக்கு அதற்கான சான்றுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளையும் உடனடியாக உருவாக்கியாக வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x