Published : 19 Mar 2020 07:57 am

Updated : 19 Mar 2020 07:57 am

 

Published : 19 Mar 2020 07:57 AM
Last Updated : 19 Mar 2020 07:57 AM

கரோனா: எல்லோருக்கும் எழும் சில கேள்விகள்

covid-19-virus

ஹெதர் மர்ஃபி

கரோனா வைரஸ் மிகவும் நுண்ணியது, ஒரு முடியின் அகலத்தில் 900-ல் ஒரு பங்கு அகலம் மட்டுமே கொண்டிருப்பது. இது எளிதில் பரவக்கூடியது. உலகமெங்கும் மனிதர்களிடையே பரவிக்கொண்டிருக்கிறது. கரோனா எப்படிப் பரவுகிறது என்பதைப் பற்றி உலகமெங்கும் உள்ள நிபுணர்கள் நமக்கு இங்கே விளக்குகிறார்கள்.

கரோனா தொற்று ஏற்பட்ட நபர் நடந்த பாதையில் குறுக்கிட்டால் எனக்கும் தொற்று ஏற்படுமா?


நெரிசல் மிகுந்த கடைப் பகுதியொன்றுக்கு நீங்கள் செல்கிறீர்கள். அங்கே வரும் வாடிக்கையாளர் ஒருவருக்கு கரோனா தொற்று இருக்கிறது. அந்த நபரால் உங்களுக்கு எது தொற்றை ஏற்படுத்தும்? இதில் நான்கு காரணிகள் உள்ளன: எவ்வளவு நெருக்கமாக நீங்கள் செல்கிறீர்கள், எவ்வளவு நேரம் அந்த நபருக்கு அருகில் இருக்கிறீர்கள், கரோனாவைக் கொண்டிருக்கும் அந்த நபரின் வைரஸ் துளி ஏதாவது உங்கள் மீது பட்டிருக்கிறதா, உங்கள் முகத்தை எந்த அளவுக்கு நீங்கள் தொடுகிறீர்கள். இவைதான் அந்த முக்கியமான காரணிகள். கூடவே உங்கள் வயதும் உடல்நலமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

வைரஸ் துளி என்றால் என்ன?

உடலிலிருந்து வெளிப்படக்கூடிய திரவத் துளிகள் வைரஸ் கிருமிகளைக் கொண்டிருந்தால் அவை வைரஸ் துளிகள் என்றழைக்கப்படுகின்றன. வைரஸ் என்பது சார்ந்து வாழக்கூடிய மிக நுண்ணிய கிருமி. அது ஒரு செல்லுடன் தன்னை இணைத்துக்கொண்டு பல்கிப் பெருகுகிறது. பிறகு அடுத்த ஓம்புயிரியை (host) நோக்கி நகர்கிறது. இதுதான் அதன் வாழ்க்கைச் சுழற்சி என்கிறார் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கேரி விட்டேக்கர். “வெற்று வைரஸால் எங்குமே செல்ல முடியாது. அது சளித் துளியிலோ, எச்சில் துளியிலோ தொற்றிக்கொண்டால் மட்டுமே அதனால் எங்கும் செல்ல முடியும்” என்கிறார் ஹாங்காங்கில் உள்ள சீனப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கின்-ஆன் க்வோக்.

இந்த சளித் துளிகளும் எச்சில் துளிகளும் நாம் இருமும்போதும் தும்மும்போதும் சிரிக்கும்போதும் பாடும்போதும் சுவாசிக்கும்போதும் பேசும்போதும் வாயிலிருந்து வெளிப்படுகின்றன. அப்படி வெளிப்பட்டுக் காற்றில் பயணிக்கும் துளிகளின் குறுக்கே ஏதும் வராவிட்டால் தரையில் போய்த் தஞ்சமடைகின்றன.

நம் செல்களுக்குள் செல்ல வேண்டும் என்றால் அந்த வைரஸ் துளிகள் நம் வாய், மூக்கு, கண்கள் வழியாகத்தான் நுழைய வேண்டும். தும்மலும் இருமலும்தான் கரோனா பரவுவதன் முக்கியமான காரணிகள் என்று சில நிபுணர்கள் கருதுகிறார்கள். ஒருவருக்கொருவர் முகத்துக்கு எதிராகப் பேசுவதும் உணவைப் பங்கிட்டுக்கொள்வதும்கூட அபாயம்தான் என்கிறார் க்வோக்.

“ஒருவர் மதியம் என்ன சாப்பிட்டார் என்பதை அவர் வாய் வாசனையிலிருந்து நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் அவர் வெளியில் விட்ட மூச்சுக்காற்றை நீங்கள் சுவாசிக்கிறீர்கள் என்று அர்த்தம். அவர்கள் மூச்சில் உள்ள வைரஸையும் சேர்த்துதான் நீங்கள் சுவாசிக்கிறீர்கள்” என்கிறார் இங்கிலாந்தின் லீசெஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியரும் கரோனா வைரஸைப் பற்றி ஆய்வுசெய்பவருமான ஜூலியன் டேங்.

தொற்று கொண்டோருடன் நெருக்கம் என்பது எவ்வளவு தொலைவு?

நோயாளியிடமிருந்து மூன்று அடிகள் விலகியிருப்பது நல்லது என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மீயர். ஆனால், வேறு சில நிபுணர்கள் ஆறு அடித் தொலைவில் நின்றாலும் ஆபத்தே என்று அச்சுறுத்துகிறார்கள்.

நோய்த் தொற்று கொண்டவருடன் எவ்வளவு நேரம் இருந்தால் நமக்குத் தொற்றும்?

அதுகுறித்து இன்னும் தெளிவில்லை. ஆனாலும், நாம் அதிக நேரம் இருக்க இருக்க நோய்த் தொற்றின் சாத்தியம் மிகவும் அதிகம் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் கரோனா தொற்றைக் கொண்டிருக்கிறாரா என்பதைப் பார்த்தே கண்டுபிடிக்க முடியுமா?

அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. நீங்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளானீர்கள் என்றால் ஜலதோஷம், ஃப்ளூ காய்ச்சல் போன்ற பெரும்பாலும் சிறிய அளவிலான அறிகுறிகளே தென்படும். கரோனா தொற்றுக்குள்ளான இன்னும் சிலர் நல்ல உடல்நலத்துடனே காணப்படலாம். இதில் பாதகமான அம்சம் என்னவென்றால் கரோனா வைரஸைப் பரப்புவோர் யார் என்று கண்டுபிடிப்பது சிரமம் என்பதுதான். ஏனெனில், கரோனா தொற்று கொண்ட, ஆனால் அறிகுறிகள் ஏதும் இல்லாதவர்கள் மற்றவர்களுக்கு அந்தத் தொற்றைப் பரப்புவது அதிகரித்துக்கொண்டே வருகிறது.

பேருந்தில் உள்ள கம்பி, செல்பேசி முதலிய சாதனங்களின் தொடுதிரை, பிற பரப்புகள் போன்றவற்றில் வைரஸ் நீடிக்குமா?

ஆமாம்! ஹாங்காங்கில் உள்ள புத்த கோயிலுக்குச் சென்றுவந்த பலரும் உடல்நலம் குன்றியதை அடுத்து அந்த நகரத்தின் ‘சுகாதாரப் பாதுகாப்பு மையம்’ அந்தக் கோயிலிலிருந்து மாதிரிப் பொருட்களை எடுத்துச் சென்று ஆய்வுசெய்தது. அந்தக் கோயிலின் கழிப்பறைக் குழாய்கள், புத்த நூல்களின் துணி அட்டைகள் போன்றவற்றில் கரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. உலோகம், கண்ணாடி, பிளாஸ்டிக் போன்றவற்றிலும் இரண்டு மணி நேரத்திலிருந்து ஒன்பது நாட்கள் வரை கரோனா வைரஸ் ஒட்டியிருந்து தாக்குப்பிடிக்கக்கூடியவை என்பதை மற்றுமொரு ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு பரப்பு சுத்தமாக இருக்கிறதா, அசுத்தமாக இருக்கிறதா என்பதெல்லாம் பிரச்சினை இல்லை. நோய்த் தொற்று கொண்ட ஒருவர் தும்மி, அந்தத் தும்மலில் வெளிப்பட்ட துளிகள் ஒரு பரப்பில் விழுந்து, அந்தப் பரப்பை வேறு ஒருவர் தொட்டால் அவருக்குத் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கரோனா வைரஸ்களை அழிப்பது ஓரளவுக்கு எளிது என்கிறார் பேராசிரியர் விட்டேக்கர். நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் கிருமி நாசினி, சோப்பு போன்றவற்றைக் கொண்டு ஒரு பரப்பைத் துடைத்தால் அந்த வைரஸை மூடியிருக்கும் நுட்பமான உறை உடைந்துவிடும். அதற்குப் பிறகு அந்த வைரஸால் ஒன்றும் செய்ய முடியாது. வாய், மூக்கு, கண் போன்ற உறுப்புகளைத் தொடுவதற்கு முன்பு நாம் கைகளைக் கழுவியிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனெனில், தோலை ஊடுருவிக்கொண்டு வைரஸ் துளிகளால் செல்ல முடியாது.

கரோனா பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பொருளொன்றில் யாராவது நோயாளி தும்மி, நோய்க் கிருமிகள் அதில் ஒட்டியிருக்கும் என்று நீங்கள் அச்சப்படலாம். சீனாவிலிருந்து பொருட்கள் மூலமாக நம் ஊருக்கு வரும் வரை பெரும்பாலும் கரோனா வைரஸால் தாக்குப்பிடிக்க முடியாது. அப்படியே உங்களுக்கு அச்சம் இருந்தால் கிருமி நாசினியைக் கொண்டு அந்தப் பொருளைத் துடைத்துவிடுங்கள்.

சோப்பில் எந்தத் தயாரிப்பை நாம் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமா?

அப்படி ஏதும் இல்லை என்றே பெரும்பாலான வல்லுநர்கள் கூறுகிறார்கள். நாம் பயன்படுத்தும் எந்த சோப்பைக் கொண்டும் கைகளைக் கழுவிக்கொள்ளலாம்.

என்னுடைய அண்டை வீட்டார் இருமுகிறார். அதுகுறித்து நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா?

வைரஸ் கிருமி சுவர்கள் வழியாகவும் கண்ணாடி வழியாகவும் ஊடுருவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார் ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆஷிஷ் கே. ஜா. சுற்றுச்சுவர் மீது அண்டை வீட்டார் தும்மி, அந்த இடத்தை நாம் தொட நேரிடும்போதுதான் கரோனா பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

முத்தமிடுதல் மூலம் எனக்கு கரோனா தொற்று வருமா?

முத்தமிடுவதன் மூலம் கரோனா பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றே வல்லுநர்கள் கருதுகிறார்கள். அதே நேரத்தில், உடலுறவு மூலம் கரோனா பரவும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

கரோனா தொற்று கொண்டவர்கள் இருக்கும் இடத்தில் உணவு உண்டால் நமக்கும் தொற்று ஏற்படுமா?

நோய்த் தொற்று கொண்டவர்கள் உணவு பரிமாறும்போதும், அதிக அளவிலானோர் பஃபேயில் (buffet) கலந்துகொள்ளும்போதும் ஆபத்து அதிகம். ஆனால், உணவைச் சூடாக்கினால் உணவில் உள்ள கரோனா வைரஸ் அழிந்துவிடும் என்கிறார் பேராசிரியர் விட்டேக்கர்.

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை


Covid 19 virusகரோனாஎல்லோருக்கும் எழும் சில கேள்விகள்கரோனா வைரஸ்கரோனா தொற்றுவைரஸ் துளி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x